Mukesh Ambani to stream IPL for free after paying $2.7 billion Tamil News: 2023 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) போட்டிகள் மார்ச் 31ம் தேதி தொடங்கி மே 28 ஆம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில், ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் விளையாடப்படும் அனைத்து போட்டிகளையும் இந்தியாவின் முன்னணி பணக்காரரான முகேஷ் அம்பானியின் கூட்டு நிறுவனம் இலவசமாக ஸ்ட்ரீம் செய்ய இருக்கிறது. இதற்கான காரணம் பற்றி விபரங்கள் தெரிந்தவர்கள் கூறுகையில், வால்ட் டிஸ்னி மற்றும் அமேசான் ஆகிய ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களுக்கு சவால் விடும் வகையிலும், உலகில் அதிகம் பார்க்கப்படும் விளையாட்டு போட்டியை பயன்படுத்தி இந்தியாவின் வளர்ந்து வரும் மீடியா மார்க்கெட்டை கைப்பற்றவும் இவ்வாறு அம்பானியின் நிறுவனம் செயல்படுவதாக அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
வயாகாம் 18 மீடியா பிரைவேட்., பாரமவுண்ட் குளோபல் மற்றும் அம்பானியின் கூட்டு நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு முயற்சியாக, கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல் தொடர் ஒளிபரப்பு ஏலத்தில் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் உரிமையை 2.7 பில்லியன் டாலருக்கு வாங்கினார்கள். போட்டியாளர்களான டிஸ்னி மற்றும் சோனி குரூப் கார்ப்பரேஷனை பின்னுக்கு தள்ளினர். முன்பு, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் ஸ்ட்ரீமிங் சேவையை பயன்படுத்தி அதிக சந்தாதாரர்களை (சப்ஸ்கிரைப்பர்களை) ஈர்த்தது.
வயாகாம் 18 நிறுவனத்தை பொறுத்தவரை, அது ஒரு வித்தியாசமான அணுகுமுறையை எடுத்து வருகிறது. விளம்பர விற்பனையை உருவாக்குவதற்காக முடிந்தவரை பலருக்கும் கேம்களை கொண்டுபோய் சேர்க்க முடிவு செய்துள்ளது. அந்த நிறுவனத்தின் இந்த நடவடிக்கை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், விஷயம் அறிந்த மற்றும் பெயர் குறிப்பிட விரும்பாத சிலர் தெரிவித்துள்ளனர். இத்தகைய தந்திரத்தையே கூகுள் மற்றும் ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் பயன்படுத்தி, விளம்பர விற்பனையில் பில்லியன் கணக்கான டாலர்களை ஈட்டுகின்றன. மேலும் நெட்ஃபிக்ஸ் போன்ற கட்டண பிரீமியம் தளங்களை விட அதிக வெற்றியைப் பெற்றுள்ளன.
வயாகாம் 18 நிர்வாகிகள் 550 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள், பல வாரங்கள் நீடிக்கும் இந்த ஐபிஎல் கேம்களைப் பார்ப்பார்கள் என்று மதிப்பிட்டுள்ளனர். இது ஆன்லைன் சில்லறை விற்பனையில் இருந்து பொழுதுபோக்கு வரை குழுமத்தின் தொழில்நுட்பம் மற்றும் இணைய லட்சியங்களை அதிகரிக்கும்.
இந்த ஆண்டு போட்டிகளின் தொடர், ஒவ்வொன்றும் ஒப்பீட்டளவில் குறைந்தளவு மூன்று மணிநேரம் நீடிக்கும். மார்ச் 31 அன்று தொடங்கி கிட்டத்தட்ட எட்டு வாரங்களுக்கு போட்டிகள் தொடரும். வயாகாம் 18 ஆனது இணையத்துடன் இணைக்கப்பட்ட எந்த சாதனத்துடனும் பயனர்கள் எந்த நேரத்திலும் எத்தனை கேம்களை வேண்டுமானாலும் பார்க்க அனுமதி கொடுக்கிறது.
இது ரிலையன்ஸுக்கு நன்கு தெரிந்த பிளேபுக் ஆகும். இதன் கிளை நிறுவனம் போட்டியில் இருக்கும் நிறுவனங்களை விட குறைவான விலைக்கு மொபைல் சேவையை வழங்கி, நூற்றுக்கணக்கான மில்லியன் வாடிக்கையாளர்களை பதிவுசெய்தது. மேலும், அதன் போட்டியாளர்களை வணிகத்திலிருந்து வெளியேற்றியது. அம்பானியின் கூட்டு நிறுவனமானது சந்தைப் பங்கின் அடிப்படையில் நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு ஆபரேட்டரான ரிலையன்ஸ் ஜியோவைச் சொந்தமாக வைத்துள்ளது. அரை பில்லியன் சந்தாதாரர்களையும் கைவசம் வைத்துள்ளது. ஐந்தாண்டு ஐபிஎல் ஒப்பந்தமானது, கிரிக்கெட்டின் சூப்பர் பவுல் என்று வர்ணிக்கப்படும் ஒரு போட்டியைப் பயன்படுத்திக் கொள்வதற்கு வேறு எவருக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பை இந்த நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.
பல ஊடக நிறுவனங்கள் தங்களது புதிய ஸ்ட்ரீமிங் வணிகங்களை அதிகரிக்க முயன்றதால், கிரிக்கெட் உரிமைகளின் விலை கடந்த ஆண்டு உயர்ந்தது. இந்தியாவில் இணையம் பயன்படுதுவோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. மேலும் உலகளாவிய மற்றும் உள்நாட்டு ஊடக நிறுவனங்களின் சந்தாதாரர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான ஊக்கியாக அனைத்து மீடியா நிறுவனங்களும் இந்தியாவைப் பார்க்கின்றன. முன்னதாக ஐ.பி.எல் ஸ்ட்ரீமிங் உரிமையை வைத்திருந்த டிஸ்னி, அந்த ஏலத்தை இழந்தது, ஆனால் சோனியை வெளியேற்றிய பிறகு டிவி ஒளிபரப்பு உரிமையைப் பெற்றது. மற்றொரு போட்டியாளரான அமேசான், ஆரம்ப ஏல ஆவணங்களை முடித்த கடைசி மணி நேரத்தில் ஏலத்தில் இருந்து வெளியேறியது.
இறுதியில், முந்தைய ஒப்பந்தத்தில் டிஸ்னி செலுத்தியதை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு செலுத்தி அம்பானி வென்றார். பாரம்பரிய டிவி பேக்கேஜிற்காக டிஸ்னி இன்னும் அதிகமாக - சுமார் 3 பில்லியன் டாலர்களை செலுத்தியது. பாரமவுண்ட், பில்லியனர் ஜேம்ஸ் முர்டோக் மற்றும் ஹாட்ஸ்டாரின் முன்னாள் தலைவரான உதய் சங்கர் ஆகியோருடன் இணைந்து அம்பானி ஐ.பி.எல் உரிமையை ஏலம் எடுத்தார் என்பது குறிபிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.