Prithvi Shaw: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் இந்திய வீரர் பிரித்வி ஷா.
இந்நிலையில், பிரித்வி ஷா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சமூக வலைதள பிரபலமான யூடியூபர் சப்னா கில்லுடன் மோதலில் ஈடுப்பட்டு சர்ச்சையில் சிக்கினார். அவர் சப்னா கில்லையும் அவருடைய நண்பர்களையும் பேட்டை வைத்து தாக்கியதாக சப்னா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் அதனை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த இரண்டு போலீசார் மீதும் அவர் வழக்குத் தொடர்ந்தார்.
இதனையடுத்து, சப்னா கில் கூறிய அனைத்துமே பொய் என்பது விசாரனையின் மூலம் தெரியவந்தது. மேலும், சப்னா கில் தான் பிரித்வியைத் தாக்கியிருக்கிறார் என்றும் தெரியவந்ததால் போலீசார் சப்னாவை கைது செய்தார்கள். பின்னர், 15 நாட்களுக்குப் பின் சப்னா ஜாமீனில் வெளியில் வந்தார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Mumbai court directs police to investigate molestation allegations against Prithvi Shaw dating back to 2023
வழக்குப்பதிவு
இதற்கு பதிலுக்கு சப்னா கில், பிரித்வி ஷா தன்னிடம் தவறாக நடந்துகொண்டார் என்றும் மானபங்கம் செய்தார் என்றும் குற்றம் சாட்டினார். சப்னா கில் மும்பை அந்தேரி மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அளித்த கிரிமினல் குற்றச்சாட்டு புகாரைத் தொடர்ந்து கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா மற்றும் அவரது நண்பர் ஆஷ்ஷ் சுரேந்திர யாதவ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சப்னா கில் கொடுத்த புகாரில், பிரித்வி ஷாவும் அவரது நண்பரும் தன் மீது கொடுமையான சட்டவிரோதமான கிரிமினல் செயல்களை செய்தனர். பொது இடம் என்று கூட பார்க்காமல் ஒரு பெண்ணின் மாண்பைக் கெடுக்கும் வகையில் நடந்து கொண்டனர் என்றும், பிரித்வி ஷா தன் மார்பகங்களில் கையை வைத்து தள்ளிவிட்டார் என்றும் தெரிவித்தார்.
தான் கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டதற்காக சப்னா கில் சட்டப்பிரிவுகள் 354, 509, 324 ஆகியனவற்றின் கீழ் வழக்குப்பதியுமாறு கோரினார். மேலும், பாலியல் தொல்லை நடந்ததற்கான ஆதாரமாக அரசு மருத்துவமனையில் எடுக்கப்பட்ட சிகிச்சையின் ஆதாரங்களையும் அளித்துள்ளார்.
இதுகுறித்து சப்னா கில்லின் வழக்கறிஞர் அலி காஷிஃப் கான் பேசுகையில், பிரித்வி ஷா மற்றும் அவரது நண்பர் ஆஷ்ஷ் சுரேந்திர யாதவ் தவிர விமான நிலைய அதிகாரிகள் சதீஷ் கவன்கர், பகவத் கரண்டே ஆகியோர் மீது ஐபிசி 166-ஏ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடமையைச் செய்யத் தவறியதால் இந்தப் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிருத்வி ஷா அவரது நண்பர் மீது சட்டப்பிரிவு 354ன் கீழ் வழக்குப்பதிவு செய்யத் தவறியதால் இந்த வழக்கு ஏர்போர்ட் அதிகாரிகள் மீது பாய்ந்துள்ளது. இந்த இரண்டு வழக்குகளும் ஏப்ரல் 17 ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்று கூறியிருந்தார்.
உத்தரவு
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா மீதான பாலியல் குற்றச்சாட்டு புகார்களை விசாரிக்க மும்பை நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. ஜூன் 19 ஆம் தேதிக்குள் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும், காவல்துறைக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யாததற்காக காவல்துறை மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய சப்னா கில் மனுவை நிராகரித்து மும்பை பெருநகர மாஜிஸ்திரேட் எஸ்.சி. தெய்ட் உத்தரவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“