Devendra Pandey
கடந்த புதன்கிழமை(அக்.16), யஷஸ்வி ஜெய்ஸ்வால் எனும் 17 வயதே ஆன மும்பை தொடக்க ஆட்டக்காரர், 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில், இரட்டை சதம் அடித்த உலகின் மிக இளம் பேட்ஸ்மேன் எனும் பெருமையைப் பெற்றிருக்கிறார். பெங்களூருவில் நடைபெற்ற விஜய் ஹசாரே டிராபி தொடரில் ஜார்க்கண்ட் அணிக்கு எதிராக 154 பந்துகளில் 203 ரன்கள் குவித்தார்.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, தனது 11 வயதில், ஒரு பால் கடையில் தங்கியிருந்த ஜெய்ஸ்வால், அங்கிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, மும்பையின் அடையாளமான ஆசாத் மைதானத்தில் உள்ள முஸ்லீம் யுனைடெட் கிளப் கூடாரத்திற்குள் மைதான தயாரிப்பாளர்களுடன் தங்கியிருந்தார். தனது கிரிக்கெட் கனவைத் துரத்திக் கொண்டே, பானி பூரியையும் விற்பனை செய்து கொண்டிருந்தார்.
இதுகுறித்து பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர், "அவரிடம் ஒரு பிடிவாதத்தை நான் கண்டிருக்கிறேன், இந்நாட்களில் இதை பார்ப்பது அரிது. இத்தகைய பிடிவாதம் ஒரே இலக்கை மனதில் கொண்டவர்களிடம் தான் காணப்படுகிறது" என்று கூறுகிறார்.
ஜாபர் இதனை விவரிப்பதற்கு முன்பு, 2013ம் ஆண்டுக்கு சென்றோமெனில், அப்போது அந்த 11 வயது சிறுவனுடைய போராட்டக் கதைகள், உத்தரப்பிரதேசத்தின் பதோஹியில் உள்ள அவனது வீட்டிற்கு நிச்சயம் தெரியாது. அவனது பெற்றோரைப் பொறுத்தவரை, தங்கள் மகன் உறவினர்களின் வீட்டில் தங்கி, கனவுகளின் நகரத்தில் சம்பாதிக்க முயற்சி செய்கிறான் என்று மட்டுமே தெரியும். எப்போதாவது அவனது தந்தை பணம் அனுப்புவார். ஆனால் அதுவும் போதாது. கூடுதலாக வருமானம் ஈட்ட, ராம் லீலாவின் போது ஆசாத் மைதானத்தில், ஜெய்ஸ்வால் பானி பூரி விற்றுக் கொண்டிருந்தான். ஆனால், அவன் வெறும் வயிற்றுடன் படுக்கைக்கு சென்ற நாட்களும் அப்போது இருந்தன.
ஜெய்ஸ்வால் கிரிக்கெட்டை கடந்த வருடம் முதல் கண்காணித்து வரும் வாசிம் ஜாபர் "கிரிக்கெட் தான் உனது ஒரே ஆப்ஷன் எனில், நீ தியாகம் செய்ய தயாராக வேண்டும்" என்று கூறுகிறார். விஸ்சி டிராபியில் இந்தியன் ஆயில் அணிக்காக, வாசிம் ஜாபருடன் ஜெய்ஸ்வால் விளையாடி, தொடர் நாயகன் விருதை வென்றிருக்கிறார். ஜாபரின் நீண்ட கால நண்பரும், ஜெய்ஸ்வாலின் பயிற்சியாளருமான ஜ்வாலா சிங், ஜெய்ஸ்வால் தனது ஆட்டத்தை கண்டுபிடித்துவிட்டார் என்கிறார்.
தான் கற்றது குறித்து ஜெய்ஸ்வால் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், "நான் முன்பு மன நிம்மதியற்று இருந்தேன். வாசிம் பாய் என்னிடம் வந்து, நீ நிச்சயம் முயற்சி செய்து நேர் திசையில் அடிக்க வேண்டும் என்றார். நான் ஒரு சிக்ஸ் அடித்தேன். அதன்பின் பீல்டிங் மாற்றப்பட்டது. அது நாங்கள் ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்ய உதவியது. கிரிக்கெட் சூழலில் தீர்வுகளை கண்டறிவதை நான் அவரிடம் கற்றுக் கொண்டேன். அவரிடம் இருந்து அமைதியையும் கற்றுக் கொண்டேன்" என்று ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
முதலில் களத்தில் நிலைத்து நிற்க ஜெய்ஸ்வால் சிறிது நேரம் எடுத்துக் கொண்டார். ஆனால், அதன் பிறகு திரும்பிப் பார்க்காமல் 12 சிக்ஸர்கள், 17 பவுண்டரிகளை விளாசினார். அவர் 186 ரன்கள் எடுத்திருந்த போது, அவரது சக வீரர் சற்று நிதானமாக ஆடச் சொல்லியபோது, ஜெய்ஸ்வால் தனது வேகத்தை சிறிது குறைத்தார். ஆனால், மும்பை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், அதிரடி ஆட்ட பாணியை தொடருமாறு அறிவுறுத்தினார்.
"எல்லாமே எனக்கு சரியாக அமைந்த நாள் அது. சதத்திற்கு பிறகு, நான் சில ஷாட்கள் மூலம் விரைவாக 150 ரன்களை எட்டினேன். இரட்டை சதத்தை நினைக்காமல், எனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை தொடரும்படி, மும்பை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் சொன்னது என உதவிகரமாக இருந்தது. ஒரு சிக்ஸ் அடித்து, இரட்டை சதத்தை நெருங்கி, பிறகு அச்சாதனையை எட்டிய முதல் கிரிக்கெட்டர் என்ற தருணம் மிகச்சிறப்பாக இருந்தது" என்று ஜெய்ஸ்வால் கூறுகிறார்.
அன்று மாலை, "நான் குறுஞ்செய்தி அனுப்பினேன்: 'வெல் டன்'. எந்தவொரு வீரரும் ஒரே சீசனில், அண்டர் 16, அண்டர் 19, அண்டர் 23 மற்றும் ரஞ்சி டிராபி விளையாடியதாக எனக்கு நினைவில்லை. அவருக்கு எவ்வளவு ஆற்றல் உள்ளது என்பதை இது காட்டுகிறது. அவர் எல்லா இடத்திலும் சிறப்பாக ஆடுகிறார். 17 வயதில், இந்திய அணியின் பந்துவீச்சாளர் வருண் ஆரோனை எதிர்த்தும், இந்திய ஏ ஸ்பின்னர் ஷாபஸ் நதீமை எதிர்த்தும் விளையாடி இரட்டை சதம் அடித்திருக்கிறார். இது ஒரு ஆரம்பம் தான். ஒருநாள் போட்டியில் ஒரு சிறு பையன் இரட்டை சதம் அடிப்பது சிறு விஷயமல்ல" என்று ஜாபர் கூறுகிறார்.