IPL 2024 | Mumbai Indians | Hardik Pandya | Lucknow Super Giants: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று செவ்வாய்க்கிழமை லக்னோவில் நடந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக நேஹல் வதேரா 46 ரன், டிம் டேவிட் 35 ரன் எடுத்தனர். லக்னோ தரப்பில் மோஷின் கான் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து, 145 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய லக்னோ அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 145 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியில் சிறப்பாக விளையாடிய மார்கஸ் ஸ்டோனிஸ் அரைசதம் அடித்து 62 ரன்கள் எடுத்தார். ஆட்டநாயகன் விருது மார்கஸ் ஸ்டோய்னிசுக்கு வழங்கப்பட்டது.
இந்த அபார வெற்றியின் மூலம் 12 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை முந்தி இருக்கிறது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ். அதேநேரத்தில், ஆடிய 10 ஆட்டங்களில் 7ல் தோல்வி பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் தள்ளாடி வருகிறது. இதனால், அந்த அணியின் பிளே-ஆப் கனவு கிட்டத்தட்ட நொறுங்கி விட்டது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Mumbai Indians captain Hardik Pandya fined Rs 24 lakh by IPL
இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அடுத்த அடியாக, அந்த அணிக்கு அதிரடியாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக மும்பையின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு 24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மற்ற மும்பை இந்தியன்ஸ் வீரர்களுக்கு 6 லட்சம் அல்லது அந்தந்த போட்டி கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஐ.பி.எல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஏப்ரல் 30, 2024 அன்று நடந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான டாடா இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) 2024 தொடரின் 48-வது ஆட்டத்தின் போது, அவரது தலைமையிலான அணி ஸ்லோ ஓவர் ரேட்டைப் பராமரித்ததால், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஓவர் ரேட் குற்றங்கள் தொடர்பான ஐ.பி.எல் நடத்தை விதிகளின் கீழ் இந்த சீசனில் அவரது அணி செய்த இரண்டாவது குற்றமாகும்." என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“