Mumbai Indians | Hardik Pandya | IPL 2024: 10 அணிகள் பங்கேற்கும் 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக்) டி20 கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் இறுதியில் தொடங்கி மே மாதம் வரை நடைபெற உள்ளது. இதையொட்டி வீரர்களின் மினி ஏலம் கடந்த செவ்வாய்க்கிழமை துபாயில் நடைபெற்று முடிந்தது.
இந்த மினி ஏலத்திற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை டிரேட் முறையில் வாங்கியது. இதனைத் தொடர்ந்து அவரை அணியின் கேப்டனாகவும் நியமித்தது.
சந்தேகம்
இந்நிலையில், ஐ.பி.எல் 2024 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பங்கேற்க வாய்ப்புகள் குறைவு என்றும், கணுக்கால் காயத்தில் இருந்து பாண்டியா முழுமையாக குணம் அடைய அதிக மாதங்கள் ஆகக் கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக புனேயில் நடைபெற்ற ஆட்டத்தின் போது ஆல்ரவுண்டர் வீரரான ஹர்திக் பாண்டியா கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதனால், அவர் தொடரில் இருந்து விலகி சிகிச்சை பெற்றார்.
ஹர்திக் இன்னும் உடற்தகுதியை எட்டாத நிலையில், சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டி20 மற்றும் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் சமீபத்தில் முடிவடைந்த டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்கவில்லை.
அடுத்ததாக அவர் ஜனவரி 11ம் தேதி முதல் இந்திய மண்ணில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெற உள்ள 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் பங்கேற்க வாய்ப்பில்லை என்றும், அதனால், ஐ.பி.எல் 2024 தொடரில் அவர் பங்கேற்பது சந்தேகம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹர்திக் பாண்டியா இல்லாதது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
மும்பை இந்தியன்ஸ் அணி தக்கவைத்த வீரர்கள் பட்டியல்:
ரோகித் சர்மா, டெவால்ட் ப்ரீவிஸ், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், என். திலக் வர்மா, டிம் டேவிட், விஷ்ணு வினோத், அர்ஜுன் டெண்டுல்கர், ஷம்ஸ் முலானி, நேஹல் வதேரா, ஜஸ்பிரித் பும்ரா, குமார் கார்த்திகேயா, பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் ரொமாரியோ ஷெப்பர்ட், ஹர்திக் பாண்டியா (கேப்டன்)
ஐபிஎல் 2024 ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள்:
ஜெரால்டு கோட்ஸி (ரூ. 5 கோடி), தில்ஷன் மதுஷங்கா (ரூ. 4.60 கோடி), ஷ்ரேயாஸ் கோபால் (ரூ. 20 லட்சம்), நுவான் துஷாரா (ரூ. 4.80 கோடி), நமன் திர் (ரூ. 20 லட்சம்), அன்ஷுல் காம்போஜ் (ரூ. 20 லட்சம்), முகமது நபி (ரூ. 1.5 கோடி), ஷிவாலிக் சர்மா (ரூ. 20 லட்சம்).
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“