Hardik Pandya | Mumbai Indians | IPL 2024: ரோகித் சர்மாவிடம் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்ற பிறகு, ஹர்திக் பாண்டியா முதல் முறையாக, சொந்த மைதானமான வான்கடே-வில் ராஜஸ்தான் ராய்ல்சுக்கு எதிரான ஆட்டத்தில் அணியை வழிநடத்த உள்ளார்.
மும்பை இந்தியன்ஸின் முதல் இரண்டு போட்டிகள் அகமதாபாத் மற்றும் ஐதராபாத்தில் நடைபெற்ற நிலையில், இந்த போட்டிகளின்போது கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டன. முந்தைய இரண்டு சீசன்களில் ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்து அந்த அணியை வெற்றிகரமான பாதையில் வழிநடத்தினார். 2022ல் சாம்பியன் பட்டத்தையும், 2023ல் இறுதிப் போட்டிக்கும் செல்ல உதவினார்.
தற்போது பாதி வழியிலே அணியை விட்டு விலகி மும்பை இந்தியன்சுக்கு சென்ற, அதுவும் கேப்டனாக சென்ற அவரை ரசிகர்கள் திட்டி தீர்க்கிறார்கள். அவரைப் பார்க்கும் இடங்களில், அவரது முகம் ஸ்கிரீனில் காட்டப்படும் போது, சமூக வலைதள பக்கங்களில் என ஹர்திக் பாண்டியாவை வறுத்தெடுத்து வருகிறார்கள்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: As Hardik Pandya returns to Wankhede as Mumbai Indians captain, a look at where he has struggled so far in IPL 2024
ரசிகர்களிடமிருந்து எதிர்ப்பை பெற்றதைத் தவிர, ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்சின் அடுத்தடுத்த தோல்விகள் மற்றும் அணிக்குள் வெடிக்கும் புதிய சர்ச்சைகள் நடப்பு சீசனில் கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் அசைபோடும் பொருளாகி உள்ளன. அந்த வகையில், ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி குறித்து அதிகம் பேசப்படும் 5 முக்கிய புள்ளிகள் பற்றி இங்கு பார்க்கலாம்.
பும்ராவை தாமதமாக கொண்டு வந்தது
கிரிக்கெட்டின் 3 வடிவங்களிலும் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக வலம் வருபுவர் ஜஸ்பிரித் பும்ரா. அவர் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய இரண்டு போட்டிகளில் பவர்பிளேயில் ஒரு ஓவரை மட்டுமே வீசியுள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில், 4வது ஓவரில் பாண்டியா தனது ஸ்டிரைக் பவுலரை 27 ரன்களுக்கு 0 என்று இருந்த போது கொண்டு வந்தார். இதேபோல், சன்ரைசர்ஸுக்கு எதிரான ரன்மழை பொழியப்பட்ட ஆட்டத்தில், பும்ரா மீண்டும் 4வது ஓவரிலே பந்து வீச வந்தார். அப்போது ஐதராபாத் அணி 40 ரன்களுக்கு 0 என்று குவித்து இருந்தது.
"ஜஸ்பிரித் பும்ரா எங்கே? ஆட்டம் ஏறக்குறைய முடிந்துவிட்டது, உங்கள் சிறந்த பந்துவீச்சாளர் ஒரே ஒரு ஓவர் மட்டுமே வீசியுள்ளார்!" என்று ஐதராபாத் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் டாம் மூடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டார்.
இதேபோல், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் ஆகியோர் மும்பை இந்தியன்ஸின் புதிய கேப்டன் பாண்டியா தனது திட்டங்களை எவ்வாறு குழப்பிக் கொண்டார் என்றும், ஐதராபாத் ஆட்டத்தில் ஜஸ்பிரித் பும்ராவை அவர் கையாண்டார் என்பது குறித்தும் பேசினர். “ஜஸ்பிரித் பும்ரா வீசிய 4வது ஓவரில் அவர் 5 ரன்கள் விட்டுக் கொடுத்தார். பின்னர், 13 வது ஓவர் வரை நாம் அவரை மீண்டும் பார்க்க முடியவில்லை. அப்போது ஐதராபாத் 173 ரன்கள் எடுத்தது”என்று ஸ்மித் கூறினார்.
புதிய பந்தை எடுத்துக்கொள்வது
இரண்டு போட்டிகளிலும் கேப்டன் பாண்டியா புதிய பந்தை எடுத்துக் கொண்டார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில், மூன்று ஓவர்களில் 30 ரன்களை விட்டுக்கொடுத்த அவர், அடுத்த போட்டியில் 46 ரன்களுக்குச் சென்று ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். முதல் ஆட்டத்தில், அவர் தனது முதல் இரண்டு ஓவர்களில் 20 ரன்களை கசியவிட்டு, அடுத்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸுக்கு எதிராக 24 ரன்களை விட்டுக்கொடுத்தார்.
முதல் போட்டிக்குப் பிறகு, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், ஹர்திக்கின் கேப்டன்ஷிப்பை விமர்சித்தார். “ஹர்திக் பாண்டியா போட்டியில் பெரிய தவறுகளை செய்தார். பவர்பிளேயில் அவரே 2 ஓவர்கள் வீசியது பெரிய தவறு. அவர் ஜஸ்பிரித் பும்ராவை தாக்குதலுக்கு சற்று தாமதமாக கொண்டு வந்தார்” என்று இர்பான் பதான் தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில் கூறினார்.
பாண்டியாவின் பேட்டிங் நிலை
குஜராத் டைட்டன்ஸ் கேப்டனாக இருந்த இரண்டு வருட காலப்பகுதியில், பாண்டியா 4வது இடத்தில் பேட்டிங் செய்தார். அந்த சீசனில் அவர் 487 ரன்களை குவித்தார், ஐ.பி.எல்-லில் அவரது சிறந்த ஆட்டமாக, டைட்டன்ஸ் அணியை கோப்பைக்கு அழைத்துச் சென்று அடுத்த ஆண்டில் 346 ரன்கள் எடுத்தார். ஆனால், மும்பை அணிக்காக அவர் முறையே 7 மற்றும் 5 வது இடத்தில் பேட்டிங் செய்துள்ளார்.
"அவர்கள் டிம் டேவிட்டை முன்னரே பேட்டிங் செய்ய அனுப்பினார்கள். ரஷித் கானுக்கு ஒரு ஓவர் மீதம் இருந்தபோது டிம் டேவிட்டை அனுப்பினார். நீண்ட காலமாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்த ஹர்திக் பாண்டியா ரஷித் கானை எதிர்கொள்ள விரும்பவில்லை என்று நான் உணர்ந்தேன். அது இப்படித்தான் இருக்க முடியும், ”என்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான மும்பை அணியின் 6 ரன்கள் தோல்விக்குப் பிறகு இர்பான் பதான் கூறினார்.
ஐதராபாத்தில், 523 ரன்கள் எடுக்கப்பட்டது, அனைத்து பேட்டர்களும் ஸ்டிரைக் ரேட்டில் 200 ரன்கள் எடுத்த நிலையில், பாண்டியா 20 பந்துகளில் 24 ரன்கள் தான் எடுத்தார்.
ரோகித்தை பவுண்டரிக்கு அனுப்பியது
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில், ஒரு கட்டத்தில், பொதுவாக 30 யார்டு வட்டத்திற்குள் பீல்டிங் செய்யும் ரோகித்தை, பவுண்டரிக்கு அருகே அனுப்பியது, தற்போதைய இந்திய கேப்டனை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மற்றொரு முறை, ஹர்திக் ரோகித்தை சுற்றி வரும்படி சைகை செய்து அலைக்கழித்தார். அப்போது வர்ணனை செய்த சுரேஷ் ரெய்னா, "ரோகித், இப்போது ஹர்திக் கேப்டன், நீங்கள் உங்கள் இடத்திற்கு திரும்பிச் செல்ல வேண்டும்."என்றார்.
இருப்பினும், இரண்டாவது ஆட்டத்தில் நிலைமை தலைகீழாக மாறியது. டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மாவின் அதிரடியான ஆட்டத்தால் மும்பை கதிகலங்கிப் போக கேப்டன் ஹர்திக் பாண்டியா ரோகித்தின் உதவியை நாடினார். அப்போது, பீல்டிங் செட் செய்த ரோகித் கேப்டன் பாண்டியாவை அதேபோல பவுண்டரி லைனுக்கு அனுப்பினார். இதுபற்றி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசிக்கொண்டனர்.
இந்த நிலையில் தான், மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு ஆர் அஷ்வின் வலுவான ஆதரவை வெளிப்படுத்தினார். நடப்பு ஐ.பி.எல் சீசனில் பல்வேறு மைதானங்களில் ரசிகர்களிடமிருந்து ஹர்திக் கடுமையான எதிர்ப்புகளை சந்தித்து வருவது குறித்து பேசிய அவர் "ரசிகர் சண்டைகள்" (FAN WAR) என்பது "சினிமா கலாச்சாரம்" என்று குற்றம் சாட்டினார்.
பாண்டியாவின் கேப்டன்சி - இருவேறு கருத்து
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் இரண்டு போட்டிகளிலும் ஹர்திக்கின் கேப்டன்சியை விமர்சித்தவர்களில் முக்கியமானவர். பாண்டியா பும்ராவைப் பயன்படுத்திய விதத்தை அவர் சுட்டிக் காட்டினார். மேலும் சன்ரைசர்ஸுக்கு எதிரான மும்பையின் சேஸிங்கில் அவர் மெதுவாகத் தடுப்பதைக் குறித்து ஒரு கடுமையான கருத்தையும் தெரிவித்தார்.
இருப்பினும், மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு ஆர் அஷ்வின் தனது ஆதரவை வெளிப்படுத்தினார். கிரிக்கெட் ஆய்வாளர் பிரசன்னா அகோரமுடன் தனது யூடியூப் சேனலில் நேரலை ஸ்ட்ரீம் செய்தபோது, அஸ்வின் ரசிகர் போட்டுக்கும் கொள்ளும் சண்டைகளை (FAN WAR) முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும், இது நாளுக்கு நாள் "மிகவும் அசிங்கமாக மாறுகிறது" என்றும் தெரிவித்தார்.
“இந்த வீரர்கள் எந்த நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்பதை ரசிகர்கள் நினைவில் கொள்ள வேண்டும். இது நமது நாடு. ரசிகர் சண்டைகள் ஒருபோதும் அத்தகைய அசிங்கமான பாதையில் செல்லக்கூடாது. இதை நான் பலமுறை கூறியிருக்கிறேன். ரசிகர் சண்டைகள் என்பது சினிமா கலாச்சாரம்." என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.