அடுத்த ஆண்டிற்கான மகளிர் ஐ.பி.எல் போட்டி ஏலத்தில், தமிழக வீராங்கனை கமலினியை மும்பை அணி ஏலம் எடுத்துள்ளது.
கடந்த இரண்டு சீசன்களாக மகளிருக்கான ஐ.பி.எல் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் முதல் சீசனை ஹர்மன்ப்ரீத் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணியும், அடுத்த சீசனை ஸ்மிரிதி மந்தனா தலைமையில் ஆர்சிபி அணியும் வென்றன.
இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள இந்த போட்டிகளுக்கான ஏலம் தற்போது நடைபெற்றது. இதில், அதிக தொகைக்கு ஏலம் போன வீராங்கனைகள் குறித்து தற்போது காணலாம்.
அன்கேப்டு இந்திய வீராங்கனையும், தமிழகத்தை சேர்ந்த 16 வயதான விக்கெட் கீப்பருமான கமலினியை மும்பை இந்தியன்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது. இவருக்கு அடிப்படை விலையாக ரூ. 10 லட்சம் நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், ரூ. 1.60 கோடிக்கு அவர் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். கமிலினி, இந்த மாதம் மட்டும் இந்திய யு19 அணியில் 80, 79, 63 என அதிரடியாக ரன்கள் அடித்துள்ளார்.
இவரை தவிர்த்து சிம்ரன் ஷைக் என்ற வீராங்கனையையும், டியான்ட்ரா டாட்டின் என்ற வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனையையும் குஜராத் அணி ரூ. 1.90 கோடி மற்றும் ரூ. 1.70 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.
மேலும், பிரேமா ராவத் என்பவரை ஆர்.சி.பி அணி ரூ. 1.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. டெல்லி அணி, நல்லபுரெட்டி சரணி என்பவரை ரூ. 55 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது. இவர்கள் அனைவரும் அதிகபட்ச தொகைக்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“