இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்த 17-வது சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டி இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் பஞ்சாப், 3 முறை சாம்பியனான தமிழகம், பெங்கால், பரோடா உள்பட 38 அணிகள் களமாடின. அவை 5 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதின.
இந்த தொடருக்கான அரைஇறுதி போட்டிகள் பெங்களுருவில் நடைபெற்ற நிலையில், பரோடாவை மும்பை அணியும், டெல்லியை மத்திய பிரதேசம் அணியும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தன. இந்த நிலையில், சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான இறுதிப்போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை பெங்களுருவில் அரங்கேறுகிறது. மாலை 4:30 மணிக்கு தொடங்கும் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான மும்பை அணி ரஜத் படிதார் தலைமையிலான மத்தியப் பிரதேசம் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த மத்திய பிரதேசம் 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 174 ரன்கள் குவித்தது. மத்திய பிரதேசம் தரப்பில் அதிகபட்சமாக ரஜத் படிதார் 81 ரன்கள் எடுத்தார். மும்பை தரப்பில் ஷர்துல் தாக்கூர், ராய்ஸ்டன் டயஸ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 175 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களம் கண்டது.
மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா மற்றும் ரகானே ஆகியோர் களம் இறங்கினர். இதில் பிரித்வி ஷா 10 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து களம் இறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 16 ரன்னில் அவுட் ஆனார். இதையத்து ரகானே உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தனர்.
இதில் ரகானே 37 ரன்னிலும், அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் 48 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து களம் புகுந்த ஷிவம் துபே 9 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து அதர்வா அன்கோலேகர் மற்றும் சூர்யன்ஷ் ஷெட்ஜ் ஜோடி சேர்ந்தனர். இருவரும் அதிரடியாக ஆடினர். இறுதியில் மும்பை அணி 17.5 ஓவர்களில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 180 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 48 ரன்கள் எடுத்தார்.
இரு அணி வீரர்கள் பட்டியல்:
மும்பை அணி: பிருத்வி ஷா, அஜிங்க்யா ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, சூர்யன்ஷ் ஷெட்ஜ், ஹர்திக் தாமோர் (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், தனுஷ் கோட்டியான், மோகித் அவஸ்தி, அதர்வா அன்கோலேகர், ஜெய் கோகுல் பிஸ்டா, ரோஸ்டன் லாட், ஷம்ஸ் முலானி, ஆகாஷ் ஆனந்த், சாய்ராஜ் பாட்டீல், அங்கிரிஷ் ரகுவன்ஷி, எம் ஜுனேத் கான், ஹிமான்ஷு சிங்
மத்தியப் பிரதேச அணி: அர்பித் கவுட், ஹர்ஷ் கவ்லி (விக்கெட் கீப்பர்), சுப்ரான்சு சேனாபதி, ஹர்பிரீத் சிங் பாட்டியா, ரஜத் படிதார் (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், திரிபுரேஷ் சிங், ராகுல் பாதம், குமார் கார்த்திகேயா, அவேஷ் கான், சிவம் சுக்லா, விகாஸ் சர்மா, அனிகேத் வர்மா, கமல் திரிபாதி, அர்ஷத் கான், குல்வந்த் கெஜ்ரோலியா, அபிஷேக் பதக், பங்கஜ் சோத்மல் சர்மா.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.