மும்பை - ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகளுக்கு இடையிலான இரானி கோப்பை தொடருக்கான டெஸ்ட் போட்டி லக்னோவில் கடந்த 1 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ரெஸ்ட் ஆப் இந்தியா கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
இதனையடுத்து, முதல் இன்னிங்சில் ஆடிய மும்பை அணி 537 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சர்ஃபராஸ் கான் 222 ரன்கள் குவித்தார். கேப்டன் ரஹானே 97 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து முதல் இன்னிங்சில் ஆடிய ரெஸ்ட் ஆப் இந்தியா 416 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அபிமன்யு ஈஸ்வரன் 191 ரன்களும், துருவ் ஜூரல் 93 ரன்களும் எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து, 2-வது இன்னிங்சில் ஆடிய மும்பை அணி 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து 274 ரன்களுடன் முன்னிலையில் இருந்தது. சர்ஃபராஸ் கான் 9 ரன்னுடனும், தனுஷ் கோட்யான் 20 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில், இன்று கடைசி நாளான 5ம் நாள் ஆட்டம் நடைபெற்றது. களத்தில் இருந்த சர்ஃபராஸ் கான் - தனுஷ் கோட்யான் ஜோடியில், சர்ஃபராஸ் கான் 17 ரன்னுக்கு அவுட் ஆனார். ஆனால், அவருடன் இருந்த தனுஷ் கோட்யான் அடுத்தடுத்து வந்த வீரர்களுடன் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்தார். குறிப்பாக, 8-வது விக்கெட்டுக்கு அவர் மோஹித் அவஸ்தியுடன் ஜோடி அசத்தலான ஜோடியை அமைத்தார். அரைசதம் அடித்த தனுஷ் கோட்யான் சதம் விளாசி அசத்தினார். இதேபோல், தனது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய மோஹித் அவஸ்தி அரைசதம் அடித்தார்.
ஆட்டம் டிராவை நோக்கி சென்ற நிலையில், மும்பை இரண்டாவது இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 329 ரன்களை எட்டியது. தனுஷ் கோட்யான் 114 ரன்னுடனும், மோஹித் அவஸ்தி 51 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்த ஜோடி 158 ரன்களை சேர்த்து அதிரடி காட்டி இருந்தது.
இறுதியில் போட்டி டிராவில் முடிந்த நிலையில், முதல் இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த மும்பை அணி இரானி கோப்பையை வென்றது. முதல் இன்னிங்சில் இரட்டை சதம் அடித்த சர்பராஸ் கான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்மூலம் 27 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை அணி இரானி கோப்பையை கைப்பற்றியுள்ளது.
இரானி கோப்பை வென்ற மும்பை, 16-வது முறையாக இந்தக் கோப்பையை வென்று அசத்தி இருக்கிறது. 15 முறை தனித்தும், ஒரு முறை மட்டும் கோப்பையை பகிர்ந்து கொண்டது. மும்பை அணி கடைசியாக 1997-98 சீசனில் தான் இரானி கோப்பையை வென்றனர். அதன்பிறகு அவர்கள் 8 முறை இறுதிப் போட்டிகளில் விளையாடியுள்ளனர். ஆனால், தற்போது தான் அவர்களுக்கு வெற்றி வசப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“