Ranji Trophy 2023-24 Mumbai vs Vidarbha, Final: மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த 10 ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த 89-வது ரஞ்சி கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் மும்பை - விதர்பா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற விதர்பா பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில், முதல் இன்னிங்சில் ஆடிய மும்பை 224 ரன்கள் எடுத்தது.
மும்பை அணியில் அதிகபட்சமாக ஷர்துல் தாக்கூர் 75 ரன்களும், பிருத்வி ஷா 46 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து, தனது முதல் இன்னிங்சில் ஆடிய விதர்பா, மும்பை அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 105 ரன்களில் சுருண்டது. அந்த அணியில் மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தப்படுத்திய தனுஷ் கோட்டியான், தவால் குல்கர்னி, ஷம்ஸ் முலானி தலா 3 விக்கெட்டையும், ஷர்துல் தாக்கூர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து, 119 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய மும்பை 418 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிரடியாக விளையாடிய முஷீர் கான் 136 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 95 ரன்களும், கேப்டன் அஜிங்க்யா ரஹானே 73 ரன்களும், ஷம்ஸ் முலானி 50 ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து, 528 ரன்கள் கொண்ட இலக்கை வெற்றி இலக்கை துரத்திய விதர்பா அணி 4-வது நாள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்தது. அக்ஷய் வாட்கர் 56 ரன்களுடனும், ஹர்ஷ் துபே 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். மும்பை தரப்பில் முஷீர் கான் மற்றும் தனுஷ் கோட்டியான் தலா 2 விக்கெட்டுகளும், ஷாம்ஸ் முலானி 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. அப்போது, களம் புகுந்த பேட்டிங் செய்த விதர்பா அணியில் அக்ஷய் வாட்கர் சதமும், ஹர்ஷ் துபே அரைசதமும் அடித்து அசத்தினர். இந்த ஜோடியில் அக்ஷய் வாட்கர் 102 ரன்களும், ஹர்ஷ் துபே 65 ரன்களும் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இறுதியில் விதர்பா 2-வது இன்னிங்சில் 368 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 169 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை அணி, 42-வது முறையாக ரஞ்சி கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்துள்ளது.
மும்பை அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய தனுஷ் கோட்டியான் 4 விக்கெட்டுகளும், முஷீர் கான் மற்றும் துஷார் தேஷ்பாண்டே தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். ஆட்டத்தின் நாயகனாக மும்பை அணியின் முஷீர் கானும், தொடரின் நாயகனாக மும்பை அணியின் தனுஷ் கோட்யானும் தேர்வு செய்யப்பட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“