U19 World Cup 2024 | India vs New Zealand ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. அதன்படி 15-வது ஜூனியர் உலகக் கோப்பை போட்டி (50 ஓவர்) தென்ஆப்பிரிக்காவில் உள்ள புளோம்பாண்டீன், போட்செப்ஸ்ட்ரூம், கிம்பெர்லி, ஈஸ்ட் லண்டன், பெனோனி ஆகிய நகரங்களில் கடந்த 19ம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
லீக் சுற்று
இந்த ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, வங்கதேசம், அயர்லாந்து, அமெரிக்கா, 'பி' பிரிவில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, ஸ்காட்லாந்து, 'சி' பிரிவில் ஆஸ்திரேலியா, இலங்கை, ஜிம்பாப்வே, நமிபியா, 'டி' பிரிவில் நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
சூப்பர் 6 சுற்று
இதில், ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதின. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் 3 அணிகள் வீதம் மொத்தம் 12 அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறியுள்ளன. சூப்பர் 6 சுற்றுக்கு வரும் 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் 1ல் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து, நேபாளம், அயர்லாந்து ஆகிய அணிகளும், குரூப் 2ல் ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, இங்கிலாந்து, ஜிம்பாப்வே ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன.
சூப்பர் 6 சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். இதன் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். அரைஇறுதியில் வெற்றியை ருசிக்கும் அணிகள் பிப்ரவரி 11ம் தேதி நடக்கும் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதல்
இந்நிலையில், ஜூனியர் உலகக் கோப்பை தொடரில் குரூப் -1ல் இடம் பிடித்துள்ள நடப்பு சாம்பியன் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான சூப்பர் 6 போட்டி ப்ளூம்ஃபோன்டைனில் உள்ள மங்காங் ஓவல் மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து ஜூனியர் அணியின் கேப்டன் ஆஸ்கார் ஜாக்சன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இதனையடுத்து, உதய் சஹாரன் தலைமையிலான இந்திய ஜூனியர் அணி முதலில் பேட்டிங் செய்தது. 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 295 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக மிகச்சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி சதம் விளாசிய முஷீர் கான் 131 ரன்கள் எடுத்தார். அரைசதம் அடித்த தொடக்க வீரர் ஆதர்ஷ் சிங் 52 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக மேசன் கிளார்க் 4 விக்கெட்டை வீழ்த்தினார்.
தொடர்ந்து 296 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய நியூசிலாந்து ஜூனியர் அணி 28.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 81 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஆஸ்கார் ஜாக்சன் 19 ரன்கள் எடுத்தார். பந்துவீச்சில் மிரட்டி எடுத்த இந்திய அணியில் சௌமி பாண்டே 4 விக்கெட்டையும், முஷீர் கான் மற்றும் ராஜ் லிம்பானி தலா 2 விக்கெட்டையும், நமன் திவாரி மற்றும் அர்ஷின் குல்கர்னி தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினர். இந்திய ஜூனியர் அணி 214 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து ஜூனியர் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்திய ஜூனியர் அணி: ஆதர்ஷ் சிங், அர்ஷின் குல்கர்னி, முஷீர் கான், உதய் சஹாரன் (கேப்டன்), பிரியன்ஷு மோலியா, சச்சின் தாஸ், ஆரவெல்லி அவனிஷ் (விக்கெட் கீப்பர்), முருகன் அபிஷேக், நமன் திவாரி, ராஜ் லிம்பானி, சௌமி பாண்டே
நியூசிலாந்து ஜூனியர் அணி: ஜேம்ஸ் நெல்சன், டாம் ஜோன்ஸ், சினேஹித் ரெட்டி, லாச்லான் ஸ்டாக்போல், ஆஸ்கார் ஜாக்சன் (கேப்டன்), ஆலிவர் டெவாடியா, சாக் கம்மிங், அலெக்ஸ் தாம்சன் (விக்கெட் கீப்பர்), எவால்ட் ஷ்ரூடர், ரியான் சோர்காஸ், மேசன் கிளார்க்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs New Zealand Live Score, U19 World Cup 2024
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“