எனது கடைசி டி20 போட்டி சென்னையில் தான்; ’தல’ தோனி உறுதி

My last T20 will be in Chennai, next year or in 5 years time: MS Dhoni: சென்னையில் தான் ஓய்வு; ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்த தோனி, மஞ்சள் தமிழர் தோனி- முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

ஓய்வு ஊகங்களை கிடப்பில் போட்டு, தனது கடைசி ஐபிஎல் டி20 போட்டி சென்னையில் தான் என்பதை எம்எஸ் தோனி உறுதியுடன் கூறியுள்ளார்.

ஐபிஎல் 2021 ஆம் ஆண்டின் சாம்பியன் பட்டம் வென்ற தோனி தலைமையிலான சென்னை அணிக்கு சிஎஸ்கே நிர்வாகம், சென்னை சூப்பர் கிங்ஸ் விழா – தி சாம்பியன்ஸ் கால் என்ற பாராட்டு விழாவை இன்று சென்னையில் நடத்தியது. இந்த நிகழ்வில் தமிழக முதல்வர் ஸ்டாலின், முன்னாள் கேப்டன் கபில்தேவ், இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

அப்போது பேசிய தோனி, “எனது கிரிக்கெட்டை நான் எப்போதும் திட்டமிட்டுள்ளேன். இந்தியாவிற்கான நான் விளையாடிய கடைசி ஒருநாள் போட்டி எனது சொந்த ஊரான ராஞ்சியில்தான் நடந்தது. அதேபோல் என்னுடைய கடைசி டி20 சென்னையில் நடக்கும் என்று நம்புகிறேன். இது அடுத்த வருடமா அல்லது ஐந்தாண்டு காலத்திற்கு பிறகா என்பது எனக்குத் தெரியாது,” என ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை தோனி கூறினார்.

இந்தாண்டு ஐபிஎல் தொடர் முடிந்தபோது, ​​டிவி தொகுப்பாளர்கள் அல்லது கருத்துரையாளர்கள் தோனியின் ஓய்வு குறித்து கேட்டபோது, ​​அவர் வெளிப்படையாக எதுவும் கூறவில்லை. இருப்பினும் சிஎஸ்கே நிர்வாகத்தைச் சேர்ந்த ஒருவர், தோனி தனது பிரியாவிடை ஆட்டத்தை சேப்பாக்கத்தில், தனது ரசிகர்கள் முன் விளையாடுவார் என்று முன்னதாக கூறியிருந்தார். இன்று, கேப்டன் தோனி அதை உறுதிப்படுத்தியுள்ளார்.

சென்னையுடனான தனது தொடர்பு குறித்து பேசிய தோனி, “நான் கொஞ்சம் அலைந்து திரிபவன். எனது பெற்றோர் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். ராஞ்சிக்கு வந்தனர். நான் அங்கே பிறந்தேன். வேலை நிமித்தமாக மேற்கு வங்க மாநிலம் காரக்பூருக்குச் சென்றேன். CSK உடனான எனது தொடர்பு 2008 இல் தொடங்கியது, ஆனால் சென்னையுடனான எனது தொடர்பு அதற்கு முன், நான் இங்கு எனது டெஸ்ட் போட்டியில் அறிமுகமானபோது தொடங்கியது. நான் சிஎஸ்கேயால் தேர்ந்தெடுக்கப்படுவேன் என்று எனக்குத் தெரியாது. நான் ஏலத்தில் இருந்தேன். சென்னை வந்தது, ஒரு வித்தியாசமான கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ள எனக்கு உதவியது,” என்று கூறினார்.

மேலும் தோனி, CSK இன் ரசிகர் பட்டாளத்தைப் பற்றி கூறுகையில், சிஎஸ்கேயின் ரசிகர்கள் என்னைப் பொறுத்தவரை “தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் எல்லைகளுக்கு அப்பால்” இருக்கின்றனர் என்றார். சென்னை ரசிகர்கள் விளையாட்டை நல்லநோக்கில் அணுகுவதைப் பாராட்டிய தோனி, இரண்டு வருடங்கள் சிஎஸ்கே அணி விளையாடாமல் இருந்தபோது, ​​சமூக ஊடகங்களில் ரசிகர்களின் இடைவிடாத ஆதரவையும் அவர் பாராட்டினார். “சச்சின் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் போது கூட சென்னை ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றார்.” என ரசிகர்களின் மனதைப் பாராட்டினார்.

கடந்த ஆண்டு கடினமாக இருந்தது, முதல் முறையாக CSK பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறத் தவறியது. “அணியின் உண்மையான நிலையை சோதிக்க 2020 எங்களுக்கு வாய்ப்பளித்தது. 2008 ஆம் ஆண்டிலிருந்து, இது சீராகப் பயணிக்கிறது, நீங்கள் நன்றாகச் செயல்படும்போது இது எளிதானது. ஆனால் இந்த முறை, சிறப்பாக செயல்பட்டனர் ”என்று தோனி கூறினார்.

சிஎஸ்கே இந்த ஆண்டு நான்காவது ஐபிஎல் பட்டத்தை வென்றது. இரண்டு வருட தடையிலிருந்து திரும்பிய பிறகு 2018 இல் இதேபோன்ற உறுதியை அவர்கள் காட்டினார்கள்.

முன்னாள் பிசிசிஐ தலைவரும், இந்தியா சிமெண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் துணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான என் சீனிவாசன், சிஎஸ்கே ஐபிஎல்-க்கு திரும்பியபோது தோனி உணர்ச்சிவசப்பட்ட ஒரு அரிய சந்தர்ப்பத்தை விவரித்தார். “நாம் வெற்றி பெற வேண்டும்” என்று தோனி கூறினார். நாங்கள் அந்த ஆண்டு வென்றோம். மேலும், தோனியின் தலைமைத்துவ திறமையை பற்றி கூறிய சீனிவாசன், “எந்த வீரரும் எம்எஸ் தோனியின் கீழ் அவரது திறமையைப் பொருட்படுத்தாமல் சிறந்ததைச் செய்வார்.” “எல்லோரும் நீங்கள் தொடர்கிறீர்களா? என்று அவர் ஓய்வைப் பற்றி கேட்கிறார்கள். அவர் இங்கு தான் இருக்கிறார், அவர் எங்கும் செல்லவில்லை. என்று கூறினார்.

முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ், தோனியை ஒரு ஹீரோ என்று அழைத்தார், அதே நேரத்தில் சமீபத்தில் முடிவடைந்த டி20 உலகக் கோப்பைக்கான அணிக்கு ஒரு பைசா கூட வாங்காமல் தோனி ஆலோசகராக செயல்பட்டதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறினார். ஐபிஎல் தொடரின் அடுத்த சீசன் இந்தியாவில் நடைபெறும் என்பதையும் ஜெய் ஷா உறுதிப்படுத்தினார்.

ஒரு பேட்ஸ்மேனாக, தோனி இந்த ஐபிஎல்லில் 16 போட்டிகளில் 114 ரன்கள் எடுத்தார். ஆனால் CSK ரசிகர்கள் இதை பொருட்படுத்துவதில்லை. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரசிகர்களுக்காக பேசியபோது, ​​“அன்புள்ள தோனி, நீங்கள் இன்னும் பல சீசன்களுக்கு சிஎஸ்கேயை வழிநடத்த விரும்புகிறோம்” என்று கூறினார்.

மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில், முதல் அமைச்சராக அல்ல, தோனியின் ரசிகனாக பாராட்டு விழாவுக்கு வந்துள்ளேன். நான் மட்டுமல்ல எனது பேரப்பிள்ளைகளும், தலைவர் கருணாநிதியும் தோனியின் ரசிகர்கள்தான். சென்னை என்றாலே சூப்பர்தான். மீண்டும் ஒருமுறை அது நிரூபிக்கப்பட்டுள்ளது. நானும் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் உள்ளவன். சென்னை மேயராக இருந்த போது காட்சி போட்டிகளில் விளையாடி இருக்கிறேன்.  கபில் தேவுக்கு பிறகு இந்தியாவுக்கு உலக கோப்பையை பெற்றுத் தந்தது தோனி. 

தோனியின் சொந்த மாநிலம்  ராஞ்சியாக இருந்தாலும் தமிழகத்தின் செல்லப்பிள்ளையாக மாறிவிட்டார். தமிழர்கள் பச்சைத்தமிழர்கள் என்றால் தோனி மஞ்சள் தமிழர். எத்தனை பரபரப்பு இருந்தாலும் எத்தனை நெருக்கடி இருந்தாலும் கருணாநிதியும் தோனியும் கூலாக இருப்பார்கள். தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்களை யாராலும் மறக்க முடியாது. டெண்டுல்கருக்கு பிறகு கிரிக்கெட் என்றால் தோனிதான். 

ஐபிஎல் போட்டியில் தனது ஆளுமையை நிலை நிறுத்திக்கொண்டவர் தோனி.  ஒரு அணியை உருவாக்கியவர்தான் சிறந்த ஆளுமையாக அறியப்படுவார். ஆளுமைத் திறன் கொண்டவராக தோனி இருப்பதால்தான் அனைவராலும் தோனி பாரட்டப்படுகிறார். எப்போதுமே இலக்குதான் முக்கியம். அதை அடைய உழைப்பு தான் முக்கியம். இலக்கும் உழைப்பும் ஒன்று சேர்ந்தால் யாராலும் வீழ்த்த முடியாது. அது அரசியலுக்கும் பொருந்தும்.   நீங்கள் உங்கள் விளையாட்டை தொடருங்கள், நாங்கள் எங்கள் மக்கள் பணியை தொடர்கிறோம். என்று முதலமைச்சர் பேசினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: My last t20 will be in chennai ms dhoni

Next Story
ஐபிஎல் 2017: பிளேஆஃப் சுற்று கெஸ்ஸிங்…..
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com