கங்காரு தேசமான ஆஸ்திரேலியாவில், டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி நடைபெறுகின்றன.
முதல் நாள் ஆட்டமான இன்றைய போட்டியில் கத்துக் குட்டி அணியான நமீபியாவை இலங்கை எதிர்கொண்டது.
முதலில் பேட்டிங் செய்த நமீபியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவரில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் குவித்தது. அடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இலங்கை 108 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனால் யாரும் எதிர்பாராத வண்ணம் நமீபியா முதல் போட்டியிலேயே இலங்கையை துவம்சம் செய்து 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கொடி நாட்டியது.
கத்துக் குட்டி அணியான நமீபியாவின் இந்த வெற்றிக்கு முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரங்கள் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சச்சின் தெண்டுல்கள், ‘நமீபியா தனது பெயரை உலகிற்கு கூறியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
நமீபியா அணியில் அதிகப்பட்சமாக ஜன் ப்ரைலின்க் 28 பந்துகளில் 44 ரன்கள் குவித்து ரன்அவுட் ஆனார். நமீபியா முதல் சுற்றில் ஏ பிரிவில் இலங்கை, நெதர்லாந்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. அடுத்த செவ்வாய்க்கிழமை (அக்.18) நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil