புரோ கபடி லீக் தொடருக்கான தமிழ் தலைவாஸ் அணியில் முன்னணி வீரராக களமாடி வருபவர் நரேந்தர் கண்டோலா. ஹரியானவைச் சேர்ந்த இவர் இடது பக்க ரைடர் ஆவார். இவர் கடந்த 9-வது சீசனில் களமாடினார். அந்த சீசனில் அதிகபட்ச தொகைக்கு (ரூ. 2.26 கோடி) வாங்கப்பட்ட பவன் செராவத் தொடக்கப் போட்டியில் முதல் 10 நிமிடத்திற்குள் காயம் ஏற்பட்டு வெளியேறினார்.
இதன்பிறகு, அவர் காயம் குணமடைய நேரம் எடுத்துக் கொண்டதால் தொடரில் இருந்து முழுவதுமாக விலகினார். அவருக்குப் பதிலாக களத்தில் இறங்கிய வீரர் தான் நரேந்தர் கண்டோலா. 24 வயதான அவர் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். 23 போட்டிகளில் ஆடிய அவர், 15 சூப்பர் 10-கள் மற்றும் 4 சூப்பர் ரைடர் மூலம் 249 புள்ளிகளை குவித்தார். இதன் மூலம், அவர் அந்த சீசனின் புதிய இளம் வீரர் விருதை வென்று அசத்தினார்.
/indian-express-tamil/media/post_attachments/cf9a5f7e-7c3.png)
இதேபோல், வெறும் 18 போட்டிகளில் 200 புள்ளிகளை எடுத்து, சித்தார்த் தேசாயின் முந்தைய சாதனை முறியடுத்து அசத்தினார். அத்துடன் 2017 ஆம் ஆண்டில் களம் கண்ட தமிழ் தலைவாஸ் அணி முதல் முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற பெரும் பங்காற்றி இருந்தார். அது முதல் அணியில் அவருக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்து வருகிறார்.
நரேந்தர் கண்டோலா இதுவரை 633 ரைடர் புள்ளிகளை எடுத்து அசத்தியுள்ளார். அதில் 60 சூப்பர் 10-கள் ஆகும். கடந்த சீசனில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சூப்பர் 10-ல் 15 புள்ளிகளை குவித்து மிரட்டி இருந்தார். அதன் மூலம் குஜராத் மண்ணைக் கவ்வ வைத்திருந்தார். இந்த சீசனில் அதே போன்ற தனது மிரட்டலான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் தலைவாஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் மோதல்
12 அணிகள் அணிகள் களமாடும் 12-வது புரோ கபடி லீக் தொடர் வருகிற 29 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறுகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா இரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். இம்முறை போட்டிகள் விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர், சென்னை மற்றும் டெல்லி போன்ற முக்கிய நகரங்களில் அடுத்தடுத்து அரங்கேறுகிறது.
முதல் கட்ட லீக் ஆட்டங்கள் விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் வருகிற 29 ஆம் தேதி முதல் செப்டம்பர் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தொடக்கப் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் - தமிழ் தலைவாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் புனேரி பால்டனை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.