ஆஸ்திரலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி, 3 டி20 மற்றும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவும், டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியாவும் கைப்பற்றியது.
விலகிய கேப்டன் விராட்கோலி :
தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டி கடந்த டிசம்பர் 17-ந் தேதி அடிலெய்டில் பகல் இரவு போட்டியாக நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தல் தோல்வியடைந்து தொடரில் 1-0 என்ற கணக்கில் பின்தங்கியது. கேப்டன் விராட்கோலியின் மனைவிக்கு பிரசவ நாள் நெருங்கியதை தொடர்ந்து முதல் டெஸ்ட் போட்டி முடிந்த உடன் கேப்டன் விராட் கோலி நாடு திரும்பினார். இதனால் அடுத்த 3 போட்டிகளுக்கும் ரஹானே கேப்டனாக பொறுப்பேற்றார்.
பந்துவீச்சாளர்களை துரத்தும் காயம் :
மேலும் முதல் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியும் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறினார். இவருக்கான மாற்று வீரர் அறிவிக்கப்படாத நிலையில், மெல்போர்னில் 2-வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய இந்திய அணி, ஆஸ்திரேலியவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. ஆனால் இந்த போட்டியில் பந்துவீச்சாளர் உமேஷ்யாதவ் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறினார். இவருக்கு பதிலாக தமிழக வீரர் நடராஜன் மாற்று வீரராக அறிவிக்கப்பட்டார்.
தொடர்ந்து சிட்னியில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில், நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நவதீப் சைனி அறிமுக வீரராக களமிறங்கினார். இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் பின்தங்கிய இந்திய அணி, 407 ரன்கள் இலக்குடன் இரண்டாவது இன்னிசை தொடங்கியது. இதில் 280 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணியில், 6-வது விக்கெட்டுக்கு இணைந்த அஸ்வின் – விஹாரி ஜோடி256 பந்துகளை சந்தித்து 64 ரன்கள் சேர்த்து இந்திய அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றியது.
ஆனாலும் இந்த போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா மற்றும் அஸ்வின் இருவரும் காயம் காரணமாக வெளியேறினார். மேலும் கடந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை தவிர்க்க பெரிதும் போராடிய ஆல்ரவுண்டர் விஹாரி காயம் காரணமாக வெளியேறினார். இதனால் 4-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பந்துவீச்சில் பெரும் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
நடராஜன், வாஷிங்டன் சுந்தர் அறிமுகம் :
அதற்கு ஏற்றார்போல் 4-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன், சுழற்பந்துவீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் அறிமுக வீரர்களாக களமிறங்கியுள்ளனர். குறுகிய காலத்தில் இந்திய அணியில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்திய டி.நடராஜன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான, தனது முதல் தொடரிலேயே இந்தியாவின் 3-வது வகை அணிகளிலும் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இடம்பிடித்தார்.
ஆனால் முதல் 2 போட்டிகளில் ஒருநாள் போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காத நிலையில், 3-வது போட்டியில் வாய்ப்பு பெற்ற நடராஜன் அந்த போட்டியில் முக்கிய 2 விக்கெட்டுகளை வீழ்த்தி தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தக்கொண்டார். அதன்பிறகு டி20 தொடரிலும் சிறப்பாக விளையாடிய அவரை டெஸ்ட் தொடருக்கான அணியில் சேர்க்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்த்தனர்.
இதன்படி டெஸ்ட் தொடரில் இடம்பிடித்த நடராஜன் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி விடுவார் என ஐபிஎல் தொடரில் அவரது கேப்டனான டேவிட் வார்னர் தெரிவித்திருந்தார். இதனால் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த நடராஜனுக்கு 3-வது போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த போட்டியில் நழுவிப்போன வாய்ப்பு 4 போட்டியில் கிடைத்துள்ளது. இதில் வார்னாரின் கருத்துக்கு தனது ஆட்டத்தின் மூலம் பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் நடராஜன்.
வாஷிங்டன் சுந்தர் :
கடந்த 2017-ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் அறிமுகமான வாஷிங்டன் சுந்தருக்கு டெஸ்ட் அறிமுகம் எட்டாக்கனியாகவே இருந்தது. மேலும் தற்போது டி20 அணியில் மட்டுமே அங்கம் வகித்து வருகிறார். இதில் கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான விளையாடியதன் மூலம், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வகை தொடர்களிலும் இடம் பிடித்திருந்தார். ஆனால் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் சரிவர வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், டெஸ்ட் தொடரிலும் வாய்ப்பு கிடைக்காமல் வெளியில் அமர்ந்திருந்தார்.
ஆனால் 3-வது டெஸ்ட் போட்டி முடிந்து இந்திய அணியில், முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், ஜடேஜா மற்றும் ஆல்ரவுண்டர் விஹாரி ஆகியோர் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியதை தொடர்ந்து அஸ்வின் இடத்தில் சுந்தருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் தமிழக ரஞ்சி அணியில் ஆல்ரவுண்டராக விளையாடி வரும் வாஷிங்டன் சுந்தர் இந்த போட்டியில் கடைசி கட்ட பேட்டிங்கிற்கு கை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய டெஸ்ட் அணியில் ஒரே நேரத்தில் இரண்டு தமிழக வீரர்கள் அறிமுகமாவது ரசிகர்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.