Advertisment

2 ஆண்டுகளில் 5,961 ஊக்க மருந்து சோதனை: தடகளத்தை விட கிரிக்கெட்டில் குறைவு - ஆர்.டி.ஐ-யில் அம்பலம்

தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் வீரர்களிடம் 114 சோதனைகளை மட்டுமே நடத்தியுள்ளது ஆர்.டி.ஐ-யில் அம்பலமாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
National Anti-Doping Agency BCCI Tamil News

ஊக்க மருந்து சோதனை: டெஸ்ட் கேப்டன் ரோகித் சர்மா இரண்டு ஆண்டுகளில் அதிகம் சோதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரராக உள்ளார்.

தகவல் அறியும் உரிமை (ஆர்.டி.ஐ) சட்டம், 2005 இன் கீழ் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையிடம் (NADA - நாடா) இருந்து தகவல்களை பெற்றது. இதன்படி, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் 5961 ஊக்கமருந்து சோதனைகள் நடப்பட்டுள்ளது. ஆனால், அதில் 114 சோதனைகள் மட்டுமே இந்திய கிரிக்கெட் வீரர்களிடம் நடத்தப்பட்டுள்ளது என்பது அம்பலமாகியுள்ளது.

Advertisment

ஆகஸ்ட் 2019 முதல் மத்திய அரசால் நடத்தப்படும் தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் கீழ் இந்திய கிரிக்கெட் வாரியமும் (பிசிசிஐ) சேர்க்கப்பட்டது. பல ஆண்டுகளாக வாரியம் சந்தித்து வரும் அவமதிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும், அதே வேளையில், 'அனைத்து கிரிக்கெட் வீரர்களும் நாடா-வால் சோதிக்கப்படுவார்கள்' என்றும், மற்ற கூட்டமைப்புகளை போல் 'பிசிசிஐயும் வேறுபட்டதல்ல' என்றும் அரசு அதிகாரிகள் சபதம் செய்தனர்.

இந்த நிலையில், தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை (NADA - நாடா) வழங்கிய தரவுகளின்படி, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட மொத்தம் 5,961 சோதனைகளில் 114 சோதனைகள் மட்டுமே கிரிக்கெட் வீரர்களிடம் நடத்தப்பட்டுள்ளது என்கிற தகவல் கிடைத்துள்ளது. இதற்கு நேர்மாறாக, தடகளத்தில் 1,717 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இது மற்ற அனைத்து விளையாட்டுகளையும் விட அதிகமாகும்.

ஆ.ர்.டிஐ தரவுகள்

  • டெஸ்ட் கேப்டன் ரோகித் சர்மா இரண்டு ஆண்டுகளில் அதிகம் சோதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரராக உள்ளார். மும்பை, அகமதாபாத், சென்னை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என ஊக்கமருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் அவரை 6 முறை சந்தித்துள்ளனர். அதேநேரத்தில் ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், சேதேஷ்வர் புஜாரா உள்ளிட்ட 7 வீரர்கள் ஒரே ஒரு முறை மட்டுமே சோதனை செய்யப்பட்டுள்ளனர்.
  • இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடன் (பிசிசிஐ) ஒப்பந்தம் செய்த 25 ஆண் வீரர்களில் 12 பேருக்கு ஒரு சோதனையைக் கூட நாடா நடத்தவில்லை. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, தற்போதைய டி20 அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஷர்துல் தாக்கூர் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் சோதிக்கப்படாத கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் உள்ளனர். இதேபோல் பேட்ஸ்மேன்கள் ஸ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் சஞ்சு சாம்சன் மற்றும் ஸ்ரீகர் பாரத் மற்றும் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் இந்தப் பட்டியலில் உள்ளனர்.

ஆனால், இதே காலகட்டத்தில் இந்திய மகளிர் அணியில் உள்ள ஒவ்வொரு வீராங்கனையும் ஒரு முறையாவது சோதனை செய்யப்பட்டுள்ளனர். ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனைகள் அதிகபட்சமாக 3 முறை சோதனை செய்யப்பட்டுள்ளனர்.

இந்தத் தரவு வீரர்கள் தரப்பில் எந்தத் தவறும் இல்லை என்பதையும், ஆனால், சாத்தியமான குற்றவாளிகளைப் பிடிக்க நாடா போதுமான அளவு சோதனைகளை செய்யவில்லை என்ற உலக ஊக்கமருந்து தடுப்பு முகமையின் வலியுறுத்தலை இது மேலும் அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில் உள்ளது.

நாட்டின் ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் நாடா-வின் தொடர்ச்சியான கண்காணிப்புக்கு உட்பட்டு வரும் நிலையில், சமீபத்திய மாதங்களில் ஊக்கமருந்து வலையில் சில முக்கிய வீரர், வீராங்கனைகள் சிக்கினர். இந்த நிலையில், ஊக்கமருந்து சோதனைக்காக நாட்டின் நட்சத்திர ஆண் கிரிக்கெட் வீரர்கள் மாதிரிகளை வழங்குமாறு கேட்கப்படவில்லை என்ற போக்கையும் இது சுட்டிக்காட்டுகிறது.

உதாரணமாக, ஜனவரி 2021 முதல் டிசம்பர் 2022 வரை, இந்தியாவின் ஊக்கமருந்து தடுப்பு அமைப்பினர், ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கம் வென்ற ரவி தஹியாவின் கதவை 18 முறை தட்டியுள்ளனர். அவர்கள் டெல்லி மற்றும் ஹரியானாவில் உள்ள சோனேபட் ஆகிய இடங்களில் உள்ள மல்யுத்த வீரரின் பயிற்சித் தளத்தில் அவரது சிறுநீர் மற்றும் இரத்த மாதிரிகளைச் சேகரிப்பதற்காக முன்னறிவிப்பு ஏதும் வழங்கப்படாமல் வந்து இறங்கினர். பின்னர் தடை செய்யப்பட்ட மருந்துகள் ஏதேனும் உள்ளதா என்றும் ஆய்வு செய்தனர்.

அதே காலகட்டத்தில், நாடாவின் ஊக்கமருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றொரு ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கம் வென்ற பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவை 8 முறை திடீர் விஜயம் செய்து, பாட்டியாலா, காந்திநகர் மற்றும் வெளிநாட்டில் உள்ள பர்மிங்காமில் உள்ள அவரது மாதிரிகளை சேகரித்தனர். டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவை ஊக்கமருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் பாட்டியாலா மற்றும் பின்லாந்து மற்றும் அமெரிக்கா வரை தொடர்ந்து சென்று 5 முறை சோதனை செய்தனர்.

இந்த சோதனைகள் போட்டிக்கு வெளியே நடத்தப்பட்டன. இது ஊக்கமருந்து தடுப்பு திட்டத்தின் அடித்தளத்தை உருவாக்குகிறது. ஏனெனில் விளையாட்டு வீரர்கள் தங்கள் இருப்பிடத்தை ஏஜென்சியுடன் பகிர்ந்து கொண்ட எந்த நாளிலும் முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட நேரத்தில் ஒரு வீரரை சோதிக்க முடியும்.

கிரிக்கெட் வீரர்களுக்கான இந்தியாவின் போட்டிக்கு வெளியே மாதிரி சேகரிப்பு புள்ளிவிவரங்கள் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற மற்ற பெரிய கிரிக்கெட் விளையாடும் நாடுகளை விட குறைவாக உள்ளது. உலக ஊக்கமருந்து தடுப்பு முகமையின் (வாடா) புள்ளிவிவரங்களின்படி, 2021 ஆம் ஆண்டில் இங்கிலாந்து வாரியம் தனது கிரிக்கெட் வீரர்களுக்கு 96 போட்டிகளுக்கு வெளியே சோதனைகளை நடத்தியது. ஆஸ்திரேலியா 69 சோதனைகளை நடத்தியது. இந்தியாவில் அதன் எண்ணிக்கை வெறும் 12 மட்டுமே இருந்தது.

தனியுரிமை மற்றும் பாதுகாப்புக் காரணங்களைக் காரணம் காட்டி தங்களுடைய இருப்பிடத்தைப் பகிர்ந்து கொள்ளத் தயங்கிய கடந்த காலங்களில் கிரிக்கெட் வீரர்களை எரிச்சலடையச் செய்த புள்ளிகளில் இதுவும் ஒன்றாகும்.

அதிகரிக்கும் பணிச்சுமை, ஆண்டு முழுவதும் பயணம் மற்றும் அட்டவணை ஆகியவை சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கு விளையாட்டுகளுக்கு இடையே மீண்டு வருவதற்கு மிகக் குறைந்த நேரத்தையே வழங்குகின்றன. அதிக போட்டி நிறைந்த சர்வதேச கிரிக்கெட், மூன்று வடிவங்கள் மற்றும் நீண்ட ஐபிஎல் தொடர் கிரிக்கெட் வீரர்கள் முன்பை விட உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதாகும். எனவே, வீரியம் மிக்க ஊக்கமருந்து எதிர்ப்பு பொறிமுறையை வைத்திருப்பது கட்டாயமாகும். இதில் வீரர்களை எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் சோதிக்க முடியும். சமநிலையான விளையாட்டு மைதானம் மற்றும் தூய்மையான விளையாட்டு சூழலை உறுதி செய்வதற்கு இது அத்தியாவசியமான ஒன்றாகும்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Sports Cricket Bcci
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment