National level runner sexual, mental abuse case Chennai Nagarajan Tamil News : மே மாதத்தில் சென்னையைச் சேர்ந்த தடகள பயிற்சியாளர் பி.நாகராஜன் மீது 19 வயது தேசிய அளவிலான ஓட்டப்பந்தய வீராங்கனை பாலியல் துன்புறுத்தல் புகாரை அளித்த பிறகு, இந்தியாவைச் சேர்ந்த மேலும் ஏழு பெண் விளையாட்டு வீராங்கனைகள், 59 வயது முதியவர் மீது இதே போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
புகார் அளித்தவர்களில் சிலர் நீண்டகாலமாகப் பணி ஓய்வில் இருப்பவர்கள். மேலும், நாகராஜனிடம் ஜூனியர்களாகபயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பல வருடங்களாக இந்த முறைகேடு நடந்ததாகவும் கூறப்படுகிறது.
மூன்று தசாப்தங்களாக பல தேசியப் பதக்கம் வென்றவர்களுக்கு வழிகாட்டியவர் நாகராஜன். அப்படிப்பட்ட பயிற்சியாளர், இபிகோ மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறார். பாதிக்கப்பட்டவர்கள் மேஜிஸ்ட்ரேட்டிடம் வாக்குமூலம் அளித்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த மாதம், போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்தியன் எக்ஸ்பிரஸ் இப்போது பாதிக்கப்பட்ட இரண்டு பேரிடம் பேசியது.
தங்கள் டீனேஜ் பருவத்தில் வீராங்கனைகள் இருவரையும் தனிப்பட்ட பயிற்சிக்காக வருமாறு கூறி, அவர்களை மற்ற குழுவிலிருந்து தனிமைப்படுத்தி, மசாஜ் செய்து கொண்டிருக்கும் போது யாரும் இல்லாத சமயத்தில் அவர்களைத் தவறாகத் தொட்டு பயிற்சியாளர் பி.நாகராஜன் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக இருவரும் நினைவுகூர்ந்தனர்.
ஒரு விளையாட்டு வீரர், அவருடைய காலத்தில் தேசிய ஜூனியர் சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர், அமைதியான குணம் கொண்டவர் என்பதால் பயிற்சியாளரிடம் மீண்டும் பேசப் பயப்பட்டதாகக் கூறினார். மற்றொரு விளையாட்டு வீரர் பதின்ம வயதில் தற்கொலைக்கு முயற்சி செய்து அதனால் அவருக்கு நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. தற்போது தனது 30-களின் பிற்பகுதியில் அவர் உறவுகளை உருவாக்கிக் கொள்வதற்கும் வயதான ஆண்களை நம்புவதில் இருக்கும் கடினங்களையும் எதிர்த்துப் போராடி வருவதாகக் கூறுகிறார்.
மேலும், இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்த இரண்டு விளையாட்டு வீரர்களுடன் தனித்தனியாகப் பேசியது. அவர்கள் வெவ்வேறு காலங்களில் நாகராஜனால் பயிற்றுவிக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் மாஜிஸ்திரேட்டுக்கு வாக்குமூலம் அளித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பயிற்சியாளரால் கொடுக்கப்படும் மசாஜ் அமர்வுக்கு முன்பாக விளையாட்டு வீரர்கள் வெளியேற முயற்சி செய்தால், அவர்கள் அடுத்த சில நாட்களுக்கு மோசமாக நடத்தப்படுவார்கள் அல்லது அந்த நபருக்கு எதிராக அவதூறு பேசுவதைப் பயிற்சியாளர் வழக்கமாகக் கொண்டிருப்பார்.
“நான் ஒருமுறை 16 வயதுக்குட்பட்ட தேசிய சாதனையை முறியடித்தேன். அப்போதுதான் பாலியல் துன்புறுத்தல் தொடங்கியது. ‘பயிற்சிக்கு பிறகும் நீ இங்கு தங்கி இருக்கவேண்டும். அப்போதுதான் மேலும் பயிற்சி பெறலாம்’ என்று அவர் கூறுவார். எனக்கு முழங்கால் வலி இருந்தால், அவர் ‘நான் வலியைக் குறைக்க உதவி செய்கிறேன்’ என்று சொல்வார். அப்படியே அவர் என் அந்தரங்க உறுப்புகளைத் தொடுவார். நான் மிகவும் சங்கடமாக உணர்ந்தேன். அனால், அது என் அம்மாவை பாதிக்கும் என்பதால் நான் அம்மாவிடம் சொல்லவில்லை. முதல் முறையாக இது எனக்கு நடந்தபோது எனக்கு 15 வயது” என்று 10 வருடங்களுக்கு மேல் நாகராஜன் பயிற்சியாளராக இருந்த விளையாட்டு வீரர்களைக் குற்றம் சாட்டினார்.
பயிற்சியாளருக்கு பயந்து இருந்ததால், அவர் செய்வதற்கு ‘முடியாது’ என எப்படிச் சொல்வது என்று அந்த வீராங்கனைக்குத் தெரியவில்லை. சாம்பியன்களை உருவாக்கும் சாதனையை மட்டுமே அந்த வீராங்கனை முதலில் அந்தப் பயிற்சியாளரிடம் பார்த்திருக்கிறார். “நீ ஸ்ட்ரெட்ச் செய்ய நான் உதவுகிறேன்” என்றுகூறி அவர் என் மீது கைகளை வைக்கத் தொடங்கினார். அவர் என்னை அவருடைய மடியில் உட்கார வைப்பார். ‘நான் ஒரு தந்தையைப் போன்றவன்’ என்று அவர் என்னிடம் கூறினார். அந்த வயதில் எனக்கு எப்படி நடந்துகொள்வது என்று தெரியவில்லை. இப்போதுதான் பெற்றோர்கள் அவர்கள் குழந்தைகளுக்கு ‘நல்ல தொடுதல்’ மற்றும் ‘கெட்ட தொடுதல்’ என்றால் என்ன என்று கற்பிக்கிறார்கள். ஆனால், அந்த காலத்தில் எங்களுக்கு அதெல்லாம் தெரியாது. பயிற்சியின் முடிவில் நான் மைதானத்தை விட்டு ஓடிவிட்டேன். அவரிடம் திரும்பிப் பேசக் கூட எனக்கு பயமாக இருந்தது” என்கிறார்.
இந்த விளையாட்டு வீராங்கனை தனது 10 வயதில் கிளப்பில் சேர்ந்துள்ளார். சில ஆண்டுகளுக்குப் பிறகு பாலியல் துன்புறுத்தல் தொடங்கி, அது நான்கு வருடங்கள் நீடித்ததாகக் குற்றம் சாட்டினார்.
“பாலியல் துன்புறுத்தல் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தது. ஒரு கணவன் மனைவி போல என்னை நெருக்கமாக இருக்கச் சொன்னார். நான் விளையாட்டில் நன்றாக வளர்ந்து வந்ததால், என் பெற்றோர் அவரை ஒரு கடவுள் போன்றவர் என்று நினைத்தனர். அவரைப் பற்றி என் பெற்றோரிடம் சொன்னபோது, அவர் அவர்களிடம், ‘உங்கள் மகளின் நடத்தை நன்றாக இல்லை. அவள் படங்களுடன் பேசுகிறாள் என்றார். என் பெற்றோரைப் பொறுத்த வரை அவர்களின் மகள் ஒரு பையனுடன் பேசுவதைப் பற்றிச் சொன்னால், அது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கும். என் குடும்பத்தில் எனக்கு ஒரு ஆண் நண்பன் இருந்தாலும்கூட அது அவர்களுக்குப் பெரிய பிரச்சினையாகத்தான் கருதுவார்கள்” என்று விளையாட்டு வீராங்கனை கூறினார். இதனைத் தொடர்ந்து அந்தப் பயிற்சியாளர் வெளி உலகத்துடனான அவரது தொடர்புகளை மட்டுப்படுத்தினார் மற்றும் அந்த வீராங்கனை யாருடன் பேசுகிறார் என்பதைக் கண்காணித்தார். “அவர் என்னை ஊடகங்களுடன் பேச அனுமதிக்கவில்லை. என்னிடம் மொபைல் போன் இல்லை. எனவே யார் அழைத்தாலும் என் தந்தை மூலமாகவோ அல்லது அவர் மூலமாகவோதான் பேச வேண்டும்” என்கிறார்.
பெயரைக் கெடுக்கப்போவதாக அச்சுறுத்தல்
பயிற்சியாளரை எதிர்கொள்ள முதல் தடவை விளையாட்டு வீராங்கனை தைரியத்தை வரவழைத்து எதிர்த்தபோது, அவர் வீராங்கனையின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கப்போவதாகக் கூறி மிரட்டியுள்ளார். “அந்த நேரத்தில் நான் நன்றாக விளையாடிக்கொண்டிருந்த சமயம். அப்போது, நான் நாகராஜனிடம் சென்று, ‘நீங்கள் பாலியல் துன்புறுத்தலைத் தொடர்ந்தால், நான் அதை ஊடகங்களுக்குத் தெரிவிப்பேன்’ என்று சொன்னேன். ‘நீயும் அதற்கு ஒத்துழைத்தாய் என்பதை மக்களிடம் சொல்வேன்’ என்று கூறி என்னை மேலும் மிரட்டினார். நான் அழ ஆரம்பித்தேன். “
இறுதியில், அந்த வீராங்கனை கிளப்பை விட்டு வெளியேற முடிவு செய்தபோது, பயிற்சியாளர் மன்னிப்பு கேட்டார்.
“அந்த நேரத்தில் அவர் என் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டார். மேலும், அவர் தன்னை தானே செருப்பால் முடித்துக்கொண்டார். நானும் அவரை அதே செருப்பால் அடித்தேன். அதன் பிறகு 2011-ல் பாலியல் துன்புறுத்தல் நிறுத்தப்பட்டது. பயிற்சியாளரால் நான் மட்டுமே துன்புறுத்தப்பட்டுள்ளேன் என்று நான் நினைத்தேன்” என்று பகிர்ந்துகொண்டார். பயிற்சியாளருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முதலில் மே 26 அன்று ஒரு ட்வீட்டில் தோன்றியதாகக் கூறப்படுகிறது.
ட்வீட்கள் வெளியிடப்பட்ட உடனேயே, நாகராஜன் இந்த குறிப்பிட்ட விளையாட்டு வீரரை அழைத்து அவதூறு பரப்புவதிலிருந்து அவரைக் காப்பாற்றச் சொன்னார். பயிற்சியாளர் தனது கவனத்திற்குக் கொண்டு வருவதற்கு முன்பு வரை அந்த வீராங்கனை ட்வீட்களைப் பார்க்கவில்லை. ஆனால், அவர் போனை வைத்தவுடன், இதைப் பற்றி வெளியே பேச முடிவு செய்தார்.
“அவர் மிகவும் செல்வாக்கு மிக்கவர் என்பதால் அவரை பற்றிப் பேச எந்தத் திட்டமும் இல்லை. நான் அவருக்கு எதிராகத் தனியாக நின்றால், அவர் என்னை ஒன்றும் செய்யமாட்டார். இதைப் பற்றி நான் என் பெற்றோரிடம் முன்பே கூறியிருந்தேன் ஆனால், அவர்கள் அதை முதலில் நம்பவில்லை. இந்த பிரச்சினை வெளிவந்தபோது (பயிற்சியாளருக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு) நான் ஊடகங்கள் அல்லது காவல்துறையினரிடம் பேசுவது பற்றி என் பெற்றோர் கவலைப்பட்டனர். கற்பனை செய்து பாருங்கள், 15 ஆண்டுகளுக்கு முன்பு துன்புறுத்தல் நடந்திருந்தாலும் என் பெற்றோர் இன்னும் பயப்படுகிறார்கள்” என்றார்.
மேலும் நம்மோடு பேசிய இரண்டாவது தடகள வீராங்கனை, நாகராஜன் பயிற்சியளித்த பள்ளியில் சேர்ந்தபோது, அவர் 7-ம் வகுப்பில் இருந்ததாகக் கூறுகிறார். ஒரு வருடத்திற்குள், அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். “நான் 8-ம் வகுப்பில் இருந்தபோது, நாகராஜன் ‘நீ நீளம் தாண்டுதல் நுட்பத்தை மேம்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். அதனால், நீ எல்லோருக்கும் ஒரு மணி நேரத்திற்கு முன் வரவேண்டும்’ என்றார். எல்லோரும் மாலை 4 மணிக்கு அங்குச் சென்றால், நான் 3. மணிக்கு அங்குச் செல்வேன். அதனால் நான் அவருடன் தனியாக இருந்தபோது பாலியல் துன்புறுத்தல் தொடங்கியது. இதை என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. நான் வெட்கப்பட்டேன், அதிர்ச்சியடைந்தேன். என்னால் அதைத் தாண்டி செல்ல முடியவில்லை” என்று விளையாட்டு வீராங்கனை கூறினார்.
பயிற்சியாளருடன் தனியாக இருப்பதைத் தவிர்க்க, விளையாட்டு வீராங்கனை ஒரு தோழியையும் சீக்கிரம் வரச் சொல்லியிருக்கிறார். அவர்கள் கூடைப்பந்து விளையாடுவார்கள் மற்றும் மற்ற விளையாட்டு வீரர்கள் மைதானத்திற்கு வரும் வரை காத்திருப்பார்கள். ஆனால், அதையும் மீறி பயிற்சியாளர் அவருடன் மட்டும் தனியாக நேரம் செலவிட ஒரு வழியைக் கண்டுபிடித்ததாக மேலும் அவர் கூறினார்.
“நான் அவரைத் தவிர்க்கத் தொடங்கியவுடன், அவர் என்னை என் பெற்றோரிடம் ஒய்எம்சிஏவுக்கு சிறப்பு உடற்பயிற்சி சோதனைகளுக்கு அழைத்துச் செல்வதாக கூறினார். அவர் என்னை ஒய்எம்சிஏவில் உள்ள அவருடைய அறைக்கு அழைத்துச் சென்றார்.
மேற்கத்திய நாடுகளில் இந்த புதிய மசாஜ் நுட்பம் உள்ளது, இது நீ விரைவாக ரெகவரி ஆக உதவும் என்றார். இது நடந்தபோது நான் மனமுடைந்தேன். இது பள்ளியில் மட்டுமே நடக்கும் என்று நினைத்தேன். ஆனால், 12-ம் வகுப்பு வரை தொடர்ந்தது. இது பாலியல் துன்புறுத்தல் மட்டுமல்ல, வாய்மொழி மற்றும் மன ரீதியான துன்புறுத்தலுக்குக் கூட. இதன் காரணமாக, எனக்கு உறவுகளை உருவாக்குதல் மற்றும் வயதான ஆண்களை நம்புவதில் பிரச்சினைகள் இருந்தன. பள்ளியிலிருந்து மருத்துவக் கல்லூரி மைதானத்திற்கு அகாடமியை மாற்றியபோது பயிற்சியாளர் எளிதாகக் கண்டார்.
அது மருத்துவப் பள்ளியில் இருந்ததால், மைதானத்தைப் பயன்படுத்த யாரும் வரவில்லை. அவர் மேலும், உடல் ரீதியான துன்புறுத்தலைத் தொடரலாம். இதையெல்லாம் மீறி நான் ஆசிய அளவில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தச் சென்றேன். எனக்கு நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டது. நான் கடினமாக உழைப்பதால் இப்படி எனக்கு ஆகிறது என்று என் அம்மா நினைத்தார். நான் தற்கொலைக்கும் முயற்சி செய்திருக்கிறேன்” என்றார்.
இந்த தடகள வீராங்கனை அவருக்கு மட்டுமே இந்த அளவிற்குத் துன்புறுத்தல் செய்யப்படுவதாக நினைத்தார். ஆனால், அகாடமியை விட்டு வெளியேறியவுடன் மற்றவர்களிடமிருந்து இதே போன்ற அனுபவங்களைக் கேட்டறிந்துகொண்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil