அறிமுக வீரர் நவ்தீப் சைனியின் அசத்தல் பந்துவீச்சால், நிலைகுலைந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை, இந்திய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் செல்லவுள்ள இந்திய அணி, மூன்று 'டுவென்டி-20', மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டிகள் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் நடக்கிறது.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி, பவுலிங்கை தேர்வு செய்தார். 'வேகத்தில்' புவனேஷ்வர் குமார், கலீல் அகமதுடன் அறிமுக வீரராக நவ்தீப் சைனி இடம் பிடித்தார். தமிழக சுழற்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டார்.
ஆரம்பமே அட்டகாசம் : விண்டீஸ் அணிக்கு லீவிஸ், கேம்பெல் ஜோடி மோசமான துவக்கம் கொடுத்தது. சுந்தர் பந்தில் கேம்பெல் டக் அவுட்டானார். சைனி 'வேகத்தில்' பூரன் (20), ஹெட்மயர் (0) சிக்கினர். பாவெல் (4), கேப்டன் கார்லஸ் பிராத்வைட் (9) நிலைக்கவில்லை. போலார்டு (49) அரை சத வாய்ப்பை தவறவிட்டார். விண்டீஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 95 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக சைனி 3 விக்கெட் கைப்பற்றினார்.
அப்போ அப்படி ; இப்போ இப்படி : வெஸ்ட் இண்டீஸ் அணி 95 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்த மைதானத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த டி 20 போட்டியில், இந்திய - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் கிட்டத்தட்ட 400 ரன்களுக்கு மேல் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
96 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி, 17.2 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 98 ரன்கள் எடுத்து, வெற்றி பெற்றது. ரோகித், அதிகபட்சமாக 24 ரன்கள் எடுத்தார். கோலி, மணிஷ் பாண்டே தலா 19 ரன்களில் வெளியேறினர்.
வின்னர் சுந்தர் : தல தோனி இல்லாததால், இந்த முறை வின்னிங் ஷாட்டை தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் சிக்சர் அடித்து போட்டியை முடித்துவைத்தார். வாஷிங்டன் சுந்தர் (8), ஜடேஜா (10) அவுட்டாகாமல் இருந்தனர்.
இரண்டாவது டி20 போட்டி, இன்று ( 4ம் தேதி) நடைபெறுகிறது. போட்டி, இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்க உள்ளது.