உலகக்கோப்பைக்கு முன்பு இந்திய அணி கட்டாயம் இதில் மாற வேண்டும்: விராட் கோலி வேதனை!

புவனேஷ்குமார் இப்போதுதான் காயத்தில் இருந்து வந்திருக்கிறார்.

2019 உலகக்கோப்பைக்கு முன்பு இந்திய அணி அனைத்து வகையிலும் சமநிலையில் உள்ள அணியாக மாறுவது அவசியம் என்று விராட் கோலி வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி லீட்ஸ் நகரில் நேற்று நடந்தது. இதில் இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் சேர்த்தது. 259 ரன்கள் வெற்றி இலக்காகவைத்து விளையாடிய இங்கிலாந்து அணி 33 பந்துகள் மீதமிருக்கையில், இலக்கை அடைந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது இங்கிலாந்து அணி. ஏறக்குறைய 7 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணிகைப்பற்றியுள்ளது. போட்டிக்கு பிறகு ஊடகங்களிடம் பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பல்வேறு விஷயங்களை ஆதங்கத்துடனும், வேதனையுடனும் பகிர்ந்துள்ளார்.

விராட் பேசியதாவது, “ இங்கிலாந்து, பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் அருமையாக செயல்பட்டது. அவர்கள் வெற்றிக்கு தகுதியானவர்கள்.25 – 30 ரன்கள் குறைவாக இருந்தது எங்களுக்கு மிகப்பெரிய பின்னடைவைத் தந்திருக்கிறது. அவர்களது சுழற்பந்து வீச்சாளர்கள் மிகச்சிறப்பாக விளையாடினார்கள்.இங்கிலாந்தில் இப்படி ஒரு ஆடுகளத்தை நான் இதற்கு முன் பார்த்தது இல்லை. வியப்பாக இருந்தது. பந்துகள் எழும்பாமல், மெதுவாகவும், எங்குச் சுழலும், ஸ்விங் ஆகும் தெரியாமல் விளையாடினேன். அதேசமயம் புதிய பந்துகள் அதிக வேகத்தில் வந்தன. தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர் சிறப்பாக தொடங்கினாலும், அதை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “ ஷர்துல் தாகூருக்கு இன்னும்வாய்ப்புகள் கொடுக்கப் பட வேண்டும், புவனேஷ்குமார் இப்போதுதான் காயத்தில் இருந்து வந்திருக்கிறார்.அடுத்து எங்கள் முன் இருக்கும் சவால் டெஸ்ட் தொடராகும். டெஸ்ட் போட்டிக்கான அணி வீரர்கள் ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளனர். இந்தத் தொடர் மிக நீண்ட தொடராகும். டெஸ்ட் தொடர் மிகவும் கடினமான தொடராக இருக்கும்.

எங்கள் அணிக்கு முன்னேற்றம் தேவையாக உள்ளது. ஒவ்வொரு அணி தேர்வும் பலம் வாய்ந்ததாக தெரிகிறது. ஆனால் இந்த தோல்வி நாங்கள் இன்னும் உழைக்க வேண்டும். வரும் 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை இந்திய அணி சந்திக்கும் போது அனைத்து வகையிலும் சமநிலையில் உள்ள அணியாக மாறுவது மிகவும் அவசியம்” என்று தெரிவித்துள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

×Close
×Close