33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 28 ஆம் தேதி முதல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்திய தரப்பில் 117 வீரர் - வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இன்று நடைபெற்ற ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியின் தகுதி சுற்றில் இந்தியாவின் கிஷோர் ஜெனா (குரூப் ஏ), நீரஜ் சோப்ரா (குரூப் பி) ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் தகுதி சுற்றின் குரூப் ஏ பிரிவில் கலந்து கொண்ட கிஷோர் ஜெனா 80.73 மீட்டர் மட்டுமே வீசி இறுதி சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறினார்.
இந்த நிலையில், தகுதி சுற்றின் குரூப் பி பிரிவில் கலந்து கொண்ட நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியிலேயே 89.34 மீட்டர் வீசி இறுதி சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தி இருக்கிறார்.
ஆடவருக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டி வியாழக்கிழமை (ஆகஸ்ட் 8) பகல் 11:55 மணிக்கு தொடங்கி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“