ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: இந்தியக் கொடியை ஏந்திச் செல்லும் 20 வயது இளைஞன்!

எனக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய கவுரவம்

ஆசைத் தம்பி

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள், கடைசியாக 2014-ம் ஆண்டு தென் கொரியாவில் உள்ள இன்ஜியான் நகரில் நடந்தது. தற்போது, 18-வது ஆசிய விளையாட்டு போட்டிகள், வரும் ஆகஸ்ட் 17ம் தேதி இந்தோனேசியாவில் தொடங்குகிறது. செப்டம்பர் 2ம் தேதி வரை  இப்போட்டிகள் நடைபெற உள்ளது. இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவிலும், தெற்கு சுமத்ரா தலை நகர் பாலேம்பங்கிலும் இப்போட்டிகள் நடைபெறுகிறது. முதலில் வியட்நாமின் ஹனாயில் தான் போட்டிகள் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், அந்நாட்டின் பொருளாதார வீழ்ச்சி காரணமாக, இந்தோனேசியாவிற்கு மாற்றப்பட்டுள்ளது. 2வது முறையாக, இந்தோனேசியாவில் ஆசிய போட்டிகள் நடைபெறுகிறது.

போட்டிக்கான சின்னங்களாக பின் பின் பறவை (Bhin Bhin – a greater bird-of-paradise), அடுங் மான் (Atung), (Kaka) காண்டாமிருகம் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிக்கான ஜோதி ஓட்டம் கடந்த மாதம் 16ம் தேதி டெல்லியில் தொடங்கியது. ஆசியாவின் 54 நகரங்கள், இந்தோனேஷியாவின் 18 மாகாணங்கள் வழியாக வரும் 17ம் தேதி ஜகார்த்தாவை சென்றடைகிறது.

இந்தத் தொடரில், 15,000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். பல நாடுகளில் இருந்தும் பார்வையாளர்கள் ஆசிய விளையாட்டுப் போட்டியை காண வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்காக ‘டூரிஸம் கோல்டன்’ எனும் டிக்கெட்களை இந்தோனேசியா வழங்கவுள்ளது. இந்த டிக்கெட் மூலம் தெற்கு சுமந்தாரா, பாலி, ஜகர்தா, மெடான் மற்றும் ஜம்பி ஆகிய இடங்களை ரசிகர்கள் இலவசமாக சுற்றிப் பார்க்க முடியும்.

இந்தியா, சீனா, பாகிஸ்தான், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், நேபாளம், ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், வங்கதேசம், பூட்டான், புரூனே, சீன தைபே, கிழக்கு தைமூர், ஹாங் காங், இந்தோனேஷியா, ஈரான், ஈராக், ஜோர்டான், கஜகஸ்தான், வடகொரியா, தென் கொரியா, கிர்கிஸ்தான், லாவோஸ், லெபனான், மக்காவு, மாலத்தீவுகள், மங்கோலியா, மியான்மார், ஓமன், பாலஸ்தீனம், பிலிப்பைன்ஸ், கத்தார், சிரியா, தஜிகிஸ்தான், தாய்லாந்து, துருக்மேனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், வியட்நாம், ஏமன் உள்ளிட்ட நாடுகள் இந்த ஆசிய விளையாட்டுத் தொடரில் பங்கேற்க உள்ளன.

நீச்சல், வில்வித்தை, தடகளம், பாட்மிண்டன், பேஸ்பால், கூடைப்பந்து, குத்துச்சண்டை, சைக்கிளிங், குதிரையேற்றம், வாள்வீச்சு, ஹாக்கி, கால்பந்து, கோல்ஃப் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.

இந்தப் போட்டியில் 620 வீரர்-வீராங்கனைகள் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது. 273 அதிகாரிகள் உள்பட 900 பேர் அடங்கிய அணி பங்கேற்க உள்ளது. 2370 பேர் கொண்ட உத்தேச பட்டியலில் இருந்து 900 பேர் குறைக்கப்பட்டு இறுதி அணி தேர்வு செய்யப்பட்டது.

2014ல் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 541 பேர் கொண்ட அணி கலந்து கொண்டு 28 பிரிவுகளில் பங்கேற்று 57 பதக்கங்களை வென்றது. இம்முறை இந்தியா 34 விளையாட்டுகளில் பங்கேற்கிறது. ஹாக்கி, டேபிள் டென்னிஸ், வில்வித்தை, பாட்மிண்டன், கபடி, தடகளம், மயல்யுத்தம், பளு தூக்குதல், குத்துச்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ் உள்ளிட்டவற்றில் இந்தியா பதக்கங்கள் வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியா 26 தங்கத்துடன் மொத்தம் 66 பதக்கங்களை கைப்பற்றி பதக்கப்பட்டியலில் 3-வது இடத்தை பிடித்திருந்ததால் இம்முறை ஆசிய விளையாட்டு போட்டியிலும் சிறப்பாக செயல்பட நல்ல வாய்ப்புள்ளது.

இந்நிலையில், இந்தோனேசியாவில் நடைபெற இருக்கும் இந்த ஆசிய போட்டியில் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா இந்திய தேசியக் கொடியை ஏந்திச் செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 20 வயதே ஆன, நீரஜ் சோப்ரா இந்திய கொடியை ஏந்திச் செல்வார் என்று இந்திய ஒலிம்பிச் சங்கத் தலைவர் நரிந்தர் பத்ரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நீரஜ் அளித்த பேட்டியில், “ஆசிய போட்டியில் தேசியக் கொடிய ஏந்திச் செல்ல என்னை தேர்ந்தெடுத்ததை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. மிகப்பெரிய தொடரில் எனக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பது எனக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய கவுரவம். இதுகுறித்து எனக்கு முன்னரே யாரும் தகவல் தெரிவிக்கவில்லை. தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் பெருமை எனக்கு கிடைத்திருப்பது இதுவே முதல்முறை. அதுவும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இது கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.

ஆசிய விளையாட்டு போட்டிகளில், 1951ம் ஆண்டு இந்தியா 2-வது இடத்தை பிடித்திருந்ததே இந்திய அணியின் சிறந்த செயல்பாடாகும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

×Close
×Close