வங்க தேச அணியுடன் இந்தியா தோல்வி அடைந்தது வருத்தத்தை தந்தாலும், காயத்திற்கு பிறகும் களத்தில் இறங்கி ரோகித் அதிரடி காட்டியதால் உற்சாகமடைந்துள்ள ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ரோகித்க்கு பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் கடைசி விக்கெட்டில் வங்கதேச அணி வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் இந்தியா 186 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது. இருப்பினும் விரைவாக வங்கதேச அணியின் டாப் ஆர்டர்களை வீழ்த்தி, வெற்றியை நோக்கி நகர்ந்தது. ஆனால் அந்த அணியின் மெஹிடி அணிக்கு வெற்றியை தேடித் தந்தார். இதனால் வங்கதேச அணி தொடரில் முன்னிலை பெற்றது.
இதையும் படியுங்கள்: IND VS BAN: காயம் அடைந்த ரோகித்துக்கு ஸ்கேன் பரிசோதனை – பி.சி.சி.ஐ தகவல்
இதனையடுத்து 2 ஆவது போட்டியில் வெற்றி பெற்று தொடரை தக்க வைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட இந்திய அணி தோல்வியைத் தழுவி தொடரை இழந்தது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கை தேர்வு செய்து 271 ரன்களை அடித்தது.
இந்தப்போட்டியில் பீல்டிங்கின் போது இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் தொடக்க வீரராக களம் இறங்கவில்லை. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய கோலி, தவான் சொதப்ப இந்திய அணி தடுமாறியது. இருப்பினும் ஸ்ரேயாஸ் மற்றும் அக்சர் ஆட்டத்தால் இந்திய அணி வெற்றியை நோக்கி பயணித்தது. இருவரும் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அவுட் ஆன நிலையில், அதற்கு பின் வந்தவர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்ததால், இந்திய அணி தடுமாறியது. மேலும் காயத்துடன் ரோகித் சர்மா களம் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்திய அணியின் வெற்றிக்கு 44 பந்துகளில் 65 ரன்கள் தேவை என்ற நிலையில் களம் இறங்கினார் ரோகித் சர்மா. தொடக்கம் முதலே அதிரடி காட்டிய ரோகித் சிக்சரும் பவுண்டரிகளுமாக விளாசினார். இந்த ஆட்டத்தில் ரோகித் 28 பந்தில் 51 ரன்கள் அடித்து ரசிகர்களுக்கு விருந்து வைத்தார். இதில் 5 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் அடங்கும். கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், காயத்துடன் விளையாடிய ரோகித் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சரை விளாசினார். கடைசி பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 1 ரன் மட்டுமே எடுத்ததால் இந்திய அணி தோல்வி அடைந்தது.
இந்திய அணி கத்துக்குட்டி என அழைக்கப்படும் வங்கதேசத்திடம் தொடரை இழந்த வருத்தம் இருந்தாலும், காயத்துடன் களமிறங்கி அணியை வெற்றியின் விளிம்பு வரை கொண்டு சென்ற ரோகித் சர்மாவை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். ட்விட்டர் ரோகித் சர்மா என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil