Nellai Royal Kings vs Dindigul Dragons, 23rd Match Tamil News: 8 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் தமிழகத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கோவையில் 6 லீக் ஆட்டங்களும், திண்டுக்கல்லில் (நத்தம்) 7 ஆட்டங்களும், சேலத்தில் 8 ஆட்டங்களும் நடந்தன. சேலத்திற்குரிய சுற்று நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது.
சேலம் சுற்று முடிவில் கோவை கிங்ஸ் 6 ஆட்டங்களில் ஆடி 5-ல் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்று இருப்பதுடன் புள்ளிபட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. நெல்லை அணி (8 புள்ளி) 2-வது இடத்திலும், திண்டுக்கல் அணி (8 புள்ளி) 3-வது இடத்திலும், மதுரை அணி (6 புள்ளி) 4-வது இடத்திலும், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (4 புள்ளி) 5-வது இடத்திலும் உள்ளன. புதிய அணியான பால்சி திருச்சி 5 ஆட்டங்களிலும் தோல்வி கண்டு அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது.
போட்டியில் நேற்று ஓய்வு நாளாகும். முதல்தர போட்டிகளில் விளையாட இருப்பதால் ஆர்.அஸ்வின் (திண்டுக்கல்), சாய் சுதர்சன் (கோவை), சாய் கிஷோர் (திருப்பூர்) உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இனி வரும் ஆட்டங்களில் இருந்து விலகி இருக்கின்றனர். இந்த நிலையில் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் நெல்லை சங்கர் நகரில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. அங்கு 7 லீக் ஆட்டங்களுடன் இறுதிப்போட்டியும் அரங்கேறுகிறது.
இன்றைய ஆட்டம்
இந்நிலையில், இரவு இரவு 7.15 மணிக்கு நடக்கும் 23வது லீக் ஆட்டத்தில் அருண் கார்த்திக் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ்-பாபா இந்திரஜித் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன. தலா 8 புள்ளிகளுடன் உள்ள இவ்விரு அணிகளும் இன்னும் ஒரு வெற்றி பெற்றால் அடுத்த சுற்றை உறுதி செய்து விடும். உள்ளூர் ரசிகர்களின் முன்னிலையில் ஆடுவது நெல்லை அணிக்கு கூடுதல் சாதகமாக இருக்கும். எனவே, இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது
இரு அணி விளையாடும் வீரர்கள் விவரம்
நெல்லை ராயல் கிங்ஸ் : அருண் கார்த்திக் (கேப்டன்), ஸ்ரீ நெரஞ்சன், ரித்திக் ஈஸ்வரன், அஜிதேஷ் குருசுவாமி (விக்கெட் கீப்பர்), லக்ஷ்மேஷா சூர்யபிரகாஷ், நிதிஷ் ராஜகோபால், சோனு யாதவ், என்எஸ் ஹரிஷ், எம் பொய்யாமொழி, எஸ் மோகன் பிரசாத், சந்தீப் வாரியர்
திண்டுக்கல் டிராகன்ஸ் : விமல் குமார், பூபதி குமார், ஆதித்ய கணேஷ், பாபா இந்திரஜித் (கேப்டன், விக்கெட் கீப்பர்), சி சரத் குமார், சுபோத் பதி, பி சரவண குமார், எம் மதிவண்ணன், வருண் சக்கரவர்த்தி, ஆஷிக் ஸ்ரீனிவாஸ், ஜி கிஷூர்
நெல்லை பேட்டிங்
நெல்லை அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அருண் கார்த்திக் மற்றும் நெரஞ்சன் களமிறங்கினர். நெரஞ்சன் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் அருண் சிறப்பாக விளையாடி ரன் சேர்த்து வந்தார். அடுத்து களமிறங்கிய சதீஷ் 13 ரன்களில் அவுட் ஆனார். அடுத்தாக அஜிதேஸ் களமிறங்கிய நிலையில், சிறப்பாக ஆடி வந்த அருண் 39 ரன்களில் அவுட் ஆனார். சிறிது நேரத்தில் அஜிதேஸ் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ரித்திக் 18 ரன்களிலும், சோனு யாதவ் 22 ரன்களிலும் அவுட் ஆகினர்.
அடுத்ததாக களமிறங்கிய ஹரீஷ் கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடினார். மறுமுனையில் களமிறங்கிய சூர்யபிரகாஷ் டக் அவுட் ஆனார். அடுத்ததாக பொய்யாமொழி களமிறங்கிய நிலையில் நெல்லை அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. நெல்லை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. திண்டுக்கல் பந்துவீச்சில், சுபோத் மற்றும் மதிவண்ணன் தலா 2 விக்கெட்களையும், கிஷோர் மற்றும் வருண் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
திண்டுக்கல் பேட்டிங்
திண்டுக்கல் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக விமல் குமார் மற்றும் சிவம் சிங் களமிறங்கினர். இருவரும் சிறப்பாக ஆடி ரன் சேர்த்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 117 ரன்கள் எடுத்தது. சிறப்பாக ஆடி அரை சதம் விளாசிய சிவம் சிங் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக ஆதித்யா கணேஷ் களமிறங்கினார். இந்தநிலையில் சிறப்பாக ஆடி அரை சதம் அடித்த விமல் குமார் 62 ரன்களில் ரன் அவுட் ஆனார்.
அடுத்து களமிறங்கிய சுபோத் 10 ரன்களில் வெளியேறினார். அடுத்தாக வந்த பாபா இந்திரஜித் 8 ரன்கள் எடுக்க திண்டுக்கல் அணி வெற்றி பெற்றது. ஆதித்யா 13 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தார். திண்டுக்கல் அணி 19.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் நெல்லை அணியை வீழ்த்தியது. நெல்லை பந்துவீச்சில், மோகன் மற்றும் பொய்யாமொழி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றி மூலம் திண்டுக்கல் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.