டி.என்.பி.எல். 2023: ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் இன்று மோதல்
Nellai Royal Kings vs IDream Tiruppur Tamizhans, 10th Match, TNPL 2023 Tamil News 7-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் தமிழகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 8 அணிகள் களமாடி வரும் நிலையில், அந்த அணி 28 லீக் போட்டிகளில் விளையாடுகின்றன. முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள், பிளே ஆஃப் சுற்றில் பங்கேற்கும்.
Advertisment
தற்போதைய நிலவரப்படி, திண்டுக்கல் டிராகன்ஸ் அணி விளையாடிய 2 போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதேபோல், லைகா கோவை கிங்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் 2 போட்டியில் வெற்றி பெற்று 2வது மற்றும் 3வது இடத்தில் உள்ளன. இன்னும் வெற்றி கணக்கை தொடங்காத அணிகளாக பால்சி திருச்சி (6வது இடம்), ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் (7வது இடம்), சீகம் மதுரை பாந்தர்ஸ் அணியும் (8வது இடம்) உள்ளன.
இந்நிலையில், திண்டுக்கலில் இன்று நடக்கும் 10வது லீக் ஆட்டத்தில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றியை ருசிக்கும் அணி வெற்றிக் கணக்கை தொடங்கும்.
மழை குறுக்கிட்டுள்ளதால் இந்த போட்டியில் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் தமிழன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய நெல்லை அணியில, நிரஞ்சன் 13 ரன்களுக்கும், சூர்யபிரகாஷ் 10 ரன்களுக்கும் வெளியேறிய நிலையில், 3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய அருண்குமார் 2 ரன்களுக்கும், கேப்டன் அருண் கார்த்திக் 4 ரன்களுக்கும், லக்ஷை ஜெயின் 24 பந்துகளில் 8 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
Advertisment
Advertisements
6-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய சோனு யாதவ் சிறிது நேரம் தாக்குபிடித்து ஆடிய நிலையில், 32 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரித்திக் ஈஸ்வரன் 15 ரன்களுக்கும், குருமூர்த்தி 20 ரன்களுக்கும் வெளியேறினர். இதனால் 18.2 ஓவர்களில் நெல்லை அணி 124 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
திருப்பூர் தமிழன்ஸ் அணி சார்பில் புவனேஷ்வரன் 5 விக்கெட்டுகளும், பெரியசாமி 2 விக்கெட்டுகளும், சாய் கிஷோர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 125 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய திருப்பூர் தமிழன்ஸ் அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க வீரர் ராதாகிருஷ்ணன் 34 ரன்களும், துஷார் ரஹிஜா 48 ரன்களும், விவேக் 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
கடைசி வரை களத்தில் இருந்த பாலச்சந்தர் அனிருத் 15 ரன்களிலும் கணேஷ் 3 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் திருப்பூர் அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil