Asian-games 2023 | Dipendra Singh | Nepal vs Mongolia | Yuvraj Singh : சீனாவின் ஹாங்சோ நகரில் 9-வது ஆசிய விளையாட்டு போட்டி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், மகளிருக்கான கிரிக்கெட் போட்டியில் இலங்கையை வீழ்த்திய இந்தியா தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து, இன்று (புதன்கிழமை) முதல் ஆடவருக்கான கிரிக்கெட் போட்டிகள் தொடங்குகிறது.
டி20 ஃபார்மெட்டில் விளையாடப்படும் இந்தத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நேபாளம், மங்கோலியா, ஜப்பான், கம்போடியா, மலேசியா, சிங்கப்பூர், மாலத்தீவு, ஹாங்காங், தாய்லாந்து, என மொத்தம் 13 அணிகள் களமாடியுள்ளன. இந்த அணிகளில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய 4 அணிகளும் நேரடியாக காலிஇறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
காலிஇறுதிப் போட்டிகள் வருகிற அக்டோபர் 3ம் தேதி முதல் தொடங்குகிறது. இதனிடையே, லீக் சுற்று போட்டிகள் நடக்கிறது. இந்த சுற்றில் மீதமுள்ள 9 அணிகள் ஏ, பி, சி என 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் நேபாளம், மாலத்தீவு, மங்கோலியா அணிகளும், பி பிரிவில் கம்போடியா, ஹாங்காங், ஜப்பான் அணிகளும், சி பிரிவில் மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன.
நேபாளம் - மங்கோலியா அணிகள் மோதல்
இந்நிலையில், இன்று காலை நடந்த தொடக்கப் போட்டியில் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள நேபாளம் - மங்கோலியா மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நேபாளம் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 314 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிரடியாக விளையாடிய குஷால் மல்லா 50 பந்துகளில் 8 பவுண்டரிகள் 12 சிக்ஸர்களுடன் 137 ரன்கள் குவித்தார். அரைசதம் விளாசிய கேப்டன் ரோஹித் பவுடல் 61 ரன்களும், தீபேந்திர சிங் 52 ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து, 315 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய மங்கோலியா அணி 41 ரன்னில் சுருண்டது. இதனால், நேபாளம் அணி 273 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் 2 புள்ளிகளையும் பெற்றுள்ளது.
யுவராஜின் 16 ஆண்டுகால சாதனையை முறியடிப்பு
இந்நிலையில், நேபாளம் - மங்கோலியா அணிகள் மோதிய இன்றைய ஆட்டத்தில் யுவராஜ் சிங்கின் 16 ஆண்டுகால சாதனையை தகர்த்துள்ளார் நேபாள வீரர் திபேந்திர சிங் ஐரி. டி20 கிரிக்கெட்டில் 9 பந்துகளில் அதிவேக அரைசதம் அடித்த அவர் கடந்த 2007 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பையில் யுவராஜ் சிங்கின் படைத்த 16 ஆண்டுகால சாதனையை முறியடித்தார்.
/indian-express-tamil/media/post_attachments/f751bfcc-0a8.jpg)
இந்த ஆட்டத்தில் 10 பந்துகளை எதிர்கொண்ட தீபேந்திரா சிங் 8 சிக்ஸர்களை மட்டும் 52 ரன்கள் எடுத்தார். மேலும், கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 34 பந்துகளில் ஆட்டமிழக்காமல் சதம் விளாசிய குஷால் மல்லா, டி20 கிரிக்கெட்டில் சதம் அடித்த முதல் நேபாள வீரர் என்ற சாதனையை படைத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“