Advertisment

தென் ஆப்பிரிக்கா அதிர்ச்சி தோல்வி: கேரி கிர்ஸ்டன் நெதர்லாந்து பயிற்சியாளருக்கு உதவியது எப்படி?

நெதர்லாந்து அணி போட்டியைத் தொடங்குவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்தியா வந்தனர். அவர்கள் கர்நாடகாவுக்கு எதிராக மூன்று பயிற்சி ஆட்டங்களில் விளையாடினர்.

author-image
WebDesk
New Update
Netherlands stun South Africa How coach Ryan cook get help from Gary Kirsten Tamil News

இந்த உலகக் கோப்பையில் இருந்து குக்கின் ஒரே நோக்கம், அவர் தனது அணியை சிறந்த முறையில் செயல்பட வேண்டும் என்றும், மூன்று அல்லது நான்கு போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற உயரிய லட்சியத்தை அமைக்க வேண்டும் என்பதுதான்.

worldcup | south-africa vs netharlands: நேற்று செவ்வாய்க்கிழமை இமாச்சல பிரதேசம் மாநிலம் தர்மசாலாவில், நெதர்லாந்து அணி ஐசிசி ஆடவர் கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாற்றில் மிகப்பெரிய அதிர்ச்சி கொடுத்தது. இந்த தொடரில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவை சாய்த்து வெற்றிகரமான அணியாக வலம் வந்த தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாதனை படைத்தது. 

Advertisment

இந்த அசத்தல் வெற்றி நெதர்லாந்து அணியின் பயிற்சியாளர் ரியான் குக்-கிற்கு பல மடங்கு மகிழ்ச்சியை கொடுத்தது. இருப்பினும், பயிற்சியாளர் ரியான் குக் தனது பதவிக்காலத்தில் சிறந்த தொடக்கங்களைக் கொண்டிருக்கவில்லை. ஏப்ரல் 2022ல் அப்போதைய பயிற்சியாளர் ரியான் காம்ப்பெல் தொடர்ச்சியான மாரடைப்புக்கு ஆளானதை அடுத்து அவருக்கு இந்த பதவி கிடைத்தது. ஜூன் 2022ல் பயிற்சியாளராக குக்கின் முதல் போட்டியில் அவரது அணி இங்கிலாந்தை எதிர்கொண்டது. 

அந்தப் போட்டியில் நெதர்லாந்தை வெளுத்து வாங்கிய இங்கிலாந்து கிட்டத்தட்ட 500 ரன்களை (4 விக்கெட்டுக்கு 498 ரன்கள்) தாண்டியது. ஆனால் ஆரம்ப கொந்தளிப்புக்குப் பிறகு, விஷயங்கள் சீராகின. நெதர்லாந்து பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு ஒருநாள் போட்டிகளில் 17 ரன்கள் மற்றும் 9 ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே தோல்வியடைந்து இருந்தனர். அதுமுதல் ரியான் குக் தனது அணியை சிறந்ததாக மாற்ற வழிவகை செய்து கொண்டிருந்தார். 

அவர் தனது பயிற்சியில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டனைப் போல் சிந்தனைப் பயன்படுத்தத் தொடங்கினார். முதலில் நெதர்லாந்து அணி ஆஸ்திரேலியாவில் நடந்த ஐ.சி.சி டி20 உலகக் கோப்பையில் ஜிம்பாப்வே மற்றும் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது. அதன்பிறகு ஒருநாள்  உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் அபாரமான ரன் எடுத்தனர். 2 முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டி டை ஆனதும், சூப்பர் ஓவரில் அவர்கள் அதனை வென்றதும் சிறப்பம்சமாகும்.

ஆங்கிலத்தில் படிக்கவும்: Cricket World Cup: How Netherlands coach Ryan cooked up the perfect recipe, with help from Gary Kirsten, as Netherlands stun South Africa

பயிற்சியாளர் ரியான் குக்கைப் பொறுத்தவரை, இது அனைத்தும் 2013ல் தொடங்கியது. அவர் தென் ஆப்பிரிக்கா U-19 அணியின் உதவி பயிற்சியாளராக இந்தியாவுக்குச் சென்றபோது, இந்தியாவின் நிலைமைகளைப் புரிந்துகொள்ள முயன்று வருவதாக கேரி கிர்ஸ்டனுக்கு எழுதினார். "பதிலுக்கு அவர் எனக்கு ஒரு பெரிய கடிதம் எழுதினார். அனைத்து இடங்களையும், நிலைமைகளையும் அழகாக விளக்கினார். அதில் மிக நுணுக்கமான விவரம் இருந்தது,” என்று குக் தங்களின் உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்திருந்தார்.

"வீரர்கள் ஏன் முதலில் வைக்கப்பட வேண்டும் என்பது பற்றி கேரி மிகவும் குறிப்பிட்டார். அவர் எழுதிய மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், கிரிக்கெட் ஒரு குழு விளையாட்டு மற்றும் ஒரு ஆட்டத்தில் வெற்றிபெற உங்களுக்கு 11 பேரின் புத்திசாலித்தனம் தேவை. ஒன்றிரண்டு நல்ல செயல்பாடு போதுமானதாக இருக்கக்கூடாது." என்று ரியான் குக் கூறினார். 

ரியான் குக்-கின் மூத்த சகோதரர் ஸ்டீபன் குக் மற்றும் தந்தை ஜிம்மி குக் ஆகியோர் தென் ஆப்பிரிக்காவுக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளனர். முன்னாள் தென் ஆப்பிரிக்கா (புரோடீஸ்) சூப்பர் ஸ்டாரும் இந்தியாவின் உலகக் கோப்பை வென்ற பயிற்சியாளருமான கேரி கிர்ஸ்டன் வழங்கிய உள்ளீடுகளைப் பெற்றார். 

“கேப்டவுனில் உள்ள அவரது கிரிக்கெட் அகாடமியில் அவருடன் சில மாதங்கள் பணியாற்றினேன். இது ஒரு சிறந்த கற்றல் அனுபவமாக இருந்தது. மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை நான் புரிந்துகொண்டேன். ஜிம்பாப்வேயில் நடந்த ஒருநாள் உலகக் கோப்பை தகுதிச் சுற்றுக்கு முன்னதாக, நாங்கள் கேப்டவுனில் மன மற்றும் கலாச்சார முகாம் நடத்தினோம். அணியில் உள்ள ஒவ்வொரு நபரும் தங்கள் ஆசைகளைப் பற்றி பேசும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். அவர்கள் அணியில் என்ன பார்க்க விரும்புகிறார்கள். பாஸ் டி லீட், ‘நாம் இந்தியாவுக்குச் சென்று, நாங்கள் கத்துக்குட்டி அணி அல்ல என்பதை அவர்களுக்குக் காட்டுவோம்' என்று கூறியது  எனக்கு நினைவிருக்கிறது.

“ஸ்காட் (எட்வர்ட்ஸ்) உத்வேகம் தரும் கேப்டன். அணியில் சிறப்பான சூழலை உருவாக்கியுள்ளார். நெதர்லாந்து அணியில் 11 ரியான் டென் டோஸ்கேட் இருக்க வேண்டும் என்று நான் தனிப்பட்ட முறையில் அவர்களின் கூறினேன். அதுதான் குறிக்கோள், ”என்று கூறினார்.

நெதர்லாந்து அணி தங்களை நம்ப வைத்தது எது என்று கேட்டபோது, ​​இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் பயங்கரமான அனுபவத்தை ரியான் குக் நினைவு கூர்ந்தார். “அவர்கள் புக் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள். பில் சால்ட், டேவிட் மலான் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் சதம் அடித்தாலும், எங்கள் தோள்கள் கீழே இறங்கவில்லை என்பதுதான் பிரகாசமான அம்சம். அந்த விளையாட்டில் இருந்து மட்டுமே கற்றுக்கொள்ள முடியும் என்று எங்களுக்குத் தெரியும், ”என்று அவர் கூறினார்.

நெதர்லாந்து உயர்மட்ட கிரிக்கெட் அனுபவத்தில் வெளிப்படையாக குறைவாக இருந்தாலும், அவர்கள் திறமை நிறைந்தவர்கள். எட்வர்ட்ஸ், லோகன் வான் பீக் மற்றும் பாஸ் டி லீட் போன்ற வீரர்கள் ஏராளமான திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் அவர்களில் பலர் இலங்கிலாந்து லீக் கிரிக்கெட்டிலும் விளையாடுகிறார்கள். பால் வான் மீகெரென் போன்ற பல நெதர்லாந்து வீரர்களும் டி20 லீக்குகளில் விளையாடியுள்ளனர்.

“உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நாங்கள் 374 ரன்களைத் துரத்தியபோது. நேபாளத்தின் 167 ரன்கள் இலக்கை 28 ஓவர்களில் நாங்கள் துரத்திவிட்டோம். கடைசி 20 ஓவர்களில் எங்கள் ஸ்கோரை இரட்டிப்பாக்க முடிந்தால், எங்களுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது என்று நான் இடைவேளையில் அணி வீரர்களிடம் சொன்னேன். நாங்கள் ஆட்டத்தை சமன் செய்தோம். பின்னர் சூப்பர் ஓவரில் லோகன் வான் பீக் 30 ரன்கள் (4, 6, 4, 6, 6, 4) விளாசினார். என்ன ஒரு சிறப்பான போட்டி பாருங்கள்” என்று நினைவு கூர்ந்தார்.

நெதர்லாந்து அணி போட்டியைத் தொடங்குவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்தியா வந்தனர். அவர்கள் கர்நாடகாவுக்கு எதிராக மூன்று பயிற்சி ஆட்டங்களில் விளையாடினர். அவை சரியாக நடக்கவில்லை. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அவர்களின் அதிகாரப்பூர்வ 2 பயிற்சி ஆட்டங்களும் கைவிடப்பட்டன. அவர்கள் தொடரை இரண்டு தோல்விகளுடன் தொடங்கினர். 

நேற்று முன்தினம் திங்கள்கிழமை தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான அவர்களின் போட்டிக்கு முன்னதாக தர்மசாலா அவுட்ஃபீல்ட் பற்றி கேட்டபோது, ​​ரியான் குக் அவர்கள் நெதர்லாந்தில் பயிற்சி செய்யும் இடத்தை விட இது சிறந்தது என்று கூறினார். இது அணியின் மனநிலைக்கு சிறப்பான கண்ணோட்டத்தை கொடுத்தது. அவர்கள் தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தால் குக் பேசிய அனைத்து பண்புகளையும் அவர்கள் டிக் செய்து விடுவார்கள் என்று இருந்தது. 

இந்த உலகக் கோப்பையில் இருந்து குக்கின் ஒரே நோக்கம், அவர் தனது அணியை சிறந்த முறையில் செயல்பட வேண்டும் என்றும், மூன்று அல்லது நான்கு போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற உயரிய லட்சியத்தை அமைக்க வேண்டும் என்பதுதான். “மக்கள் எங்களை கிரிக்கெட்டின் கத்துக்குட்டி அல்லது பலம் இல்லாத அணி என்று அடிக்கடி குறிப்பிடுகிறார்கள். ஆனால், நாங்கள் எங்களை நல்ல பாணியில் விளையாடும் கிரிக்கெட் தேசமாக பார்க்கிறோம். உலகின் சிறந்த அணிகளுக்கு எதிராக நாங்கள் போட்டியிடுகிறோம். அந்த மூன்று அல்லது நான்கு வெற்றிகளை பெறுவதற்கு நாங்கள் அனைத்தையும் முயற்சிப்போம், ”என்று அவர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Worldcup Netharlands South Africa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment