worldcup | netharlands | afghanistan: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடக்கும் 34-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Netherlands vs Afghanistan Live Score, World Cup 2023
டாஸ் வென்ற நெதர்லாந்து பேட்டிங்; ஆப்கான் பவுலிங்
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி, நெதர்லாந்து அணியில் தொடக்க வீரர்களாக வெஸ்லி பாரேசி - மேக்ஸ் ஓடோவ்ட் ஜோடி களமிறங்கினர். இதில், வெஸ்லி பாரேசி ஒரு ரன் எடுத்த நிலையில் எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார். களத்தில் இருந்த மேக்ஸ் ஓடோவ்ட் உடன் கொலின் அக்கர்மேன் ஜோடி சேர்ந்த நிலையில், இந்த ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. இவர்களில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ் ஓடோவ்ட் 42 ரன்கள் எடுத்த நிலையில் ரன்-அவுட் ஆகி வெளியேறினார். இதேபோல், 29 ரன்கள் எடுத்த கொலின் அக்கர்மேனும் ரன்-அவுட் ஆகி அவுட் ஆனார்.
அடுத்த வந்த வீரர்களில் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் டக்-அவுட் ஆனார். 3 ரன்களை மட்டும் எடுத்து பாஸ் டி லீட், சாகிப் சுல்பிகர் ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் வந்த லோகன் வான் பீக் 2 ரன்னில் அவுட் ஆனார். 2வது விக்கெட்டுக்குப் பிறகு சைப்ராண்ட் ஏங்கல்பிரெக்ட் களமிறங்கிய நிலையில், அவருடன் மறுமுனையில் களமாடிய வீரர்கள் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறிய வண்ணம் இருந்தனர். இதற்கிடையில் தாக்குப் பிடித்த சைப்ராண்ட் ஏங்கல்பிரெக்ட் 74 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
33 பந்துகளில் 11 ரன் எடுத்து இருந்த வேன் டெர் மெர்வ், அஹமது பந்தில் ஜப்ரான் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இதையடுத்து, 24 பந்துகளில் 4 ரன் மட்டுமே எடுத்த பால் வேன் மீக்ரான் முஹம்மது நபி பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார்.
இறுதியில், நெதர்லாந்து அணி 46.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன் எடுத்தது. ஆப்கானிஸ்தான் வீரர்களின் அசத்தலான பந்துவீச்சைத் தாக்குப் பிடிக்க முடியாமல் நெதர்லாந்து அணி 179 ரன்னுகள் சுருண்டது. இதன் மூலம், 180 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஜாத்ரன் களம் இறங்கி பேட்டிங் செய்தனர்.
ஆப்கானிஸ்தான் அணி 5.3 ஓவரில் 27 ரன் எடுத்திருந்தபோது, 11 பந்துகளில் 10 ரன் அடித்திருந்த ரஹ்மானுல்லா குர்பாஸ், லோகன் வேன் பீக் பந்தில் ஸ்காட் எட்வர்ட்ஸ் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து ரஹ்மத் ஷா பேட்டிங் செய்ய வந்தார்.
ஆப்கானிஸ்தான் அணி 10.1 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 55 ரன் எடுத்திருந்தது. அப்போது, நிதானமாக விளையாடிக்கொண்டிருந்த மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் இப்ராஹிம் ஜாத்ரன் 34 பந்துகளில் 20 ரன் எடுத்திருந்த நிலையில், ரோலோஃப் வேன் டெர் மெர்வ் பந்தில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து, ஹஷ்மதுல்லா ஷாஹிதி பேட்டிங் செய்ய வந்தார்.
ஆப்கானிஸ்தான் அணி 22.4 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 129 ரன் எடுத்திருந்தது. அப்போது சிறப்பாக விளையாடி வந்த ரஹ்மத்ஷா 54 பந்துகளில் 52 ரன் அரை சதம் அடித்த நிலையில், ஷகிப் ஜுல்ஃபிகர் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இவரை அடுத்து, அஸ்மதுல்லா ஒமர்ஜாய் பேட்டிங் செய்ய வந்தார்.
ஷாஹிதி மற்றும் ஒமர்ஜாய் நிலையாக நின்று விளையாடினார்கள். 30.2 ஓவரில் ஷாஹிதி 59 பந்துகளில் 51 ரன் குவித்து அரைசதம் அடித்தார்.
இதையடுத்து, ஆப்கானிஸ்தான் அணி 31 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி 56 ரன்களுடனும், அஸ்மதுல்லா ஒமர்ஜாய் 31 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இரு அணிகளின் பிளேயிங் லெவன்
ஆப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), அஸ்மத்துல்லா உமர்சாய், இக்ராம் அலிகில் (விக்கெட் கீப்பர்), முகமது நபி, ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, நோர்.
நெதர்லாந்து: வெஸ்லி பாரேசி, மேக்ஸ் ஓடோவ்ட், கொலின் அக்கர்மேன், சைப்ராண்ட் ஏங்கல்பிரெக்ட், ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), பாஸ் டி லீட், சாகிப் சுல்பிகர், லோகன் வான் பீக், ரோலோஃப் வான் டெர் மெர்வே, ஆர்யன் தட், பால் வான் மீகெரன்.
ஹஸ்மத்துல்லா ஷகிடி தலைமையிலான ஆப்கானிஸ்தான் 6 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 3 தோல்வி என்று 6 புள்ளிகளுடன் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளனர். வங்கதேசம், இந்தியா, நியூசிலாந்து அணிகளிடம் தோல்வி கண்ட ஆப்கானிஸ்தான், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, முன்னாள் சாம்பியன்களான பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு அதிர்ச்சி அளித்து அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்கிறது. மீதமுள்ள 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் அந்த அணி அரைஇறுதிக்குள் முதல்முறையாக அடியெடுத்து வைக்கும்.
ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணி 6 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி (தென்ஆப்பிரிக்கா, வங்கதேசம்), 4 தோல்வியுடன் (பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, ஆஸ்திரேலியா) அரைஇறுதி வாய்ப்பில் லேசாக ஒட்டிக்கொண்டிருக்கிறது. அதனை அதிகப்படுத்த அந்த அணி போராடும். உலகக் கோப்பையில் இரு அணிகளும் முதல்முறையாக மோதும் நிலையில், இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
நேருக்கு நேர்
சர்வதேச ஒருநாள் போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 9 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஆப்கானிஸ்தான் 7 ஆட்டத்திலும், நெதர்லாந்து 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.