worldcup 2023 | netharlands vs bangladesh: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று (சனிக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் தொடங்கும் 28வது லீக் போட்டியில் நெதர்லாந்து - வங்கதேசம் அணிகள் மோதியது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Netherlands vs Bangladesh Live Score, Cricket World Cup 2023
டாஸ் வென்ற நெதர்லாந்து பேட்டிங்
இந்தப் போட்டியில் டாஸ் நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக விக்ரம்ஜித் சிங் - மேக்ஸ் ஓடோவ்ட் களமிறங்கிய நிலையில், விக்ரம்ஜித் சிங் 3 ரன்னுக்கு, மேக்ஸ் ஓடோவ்ட் டக்-அவுட் ஆகி வெளியேறினர். பின்னர் களம்புகுந்த வெஸ்லி பாரேசி - கொலின் அக்கர்மேன் ஜோடியில் 8 பவுண்டரிகளை மட்டும் விரட்டிய வெஸ்லி 41 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அவருடன் மறுமுனையில் இருந்த அக்கர்மேன் 15 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த பாஸ் டி லீட் 2 பவுண்டரிகளை விரட்டி 17 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.
அதன்பறகு கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் - சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் ஜோடி களத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் கேப்டன் எட்வர்ட்ஸ் அரைசதம் 78 பந்துகளில் அரைசதம் விளாசினார். தொடர்ந்து நிதானமாக விளையாடிய எட்வார்ட்ஸ் 89 பந்துகளில் 68 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த இங்கில் பிரிஜித் 35 ரன்களும், வான் பீக் 23 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். இதனால் நெதர்லாந்து அணி 229 ரன்களில் சுருண்டது. வங்கதேச அணி தரப்பில் மெஹந்தி ஹசன், ரஹ்மான், டஸ்கின் அகமது, இஸ்லாம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஷாகிப் அல் ஹசன் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 230 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியில் லிட்டன் தாஸ், டன்சிடு ஹாசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், 12 பந்துகளை சந்தித்த லிட்டன் தாஸ் 3 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மெஹந்தி ஹசன் மிர்சா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், 16 பந்துகளை சந்தித்த டன்சிடு ஹாசன் 3 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் வங்கதேச அணி 11 ஓவர்களில் 40 ரன்களுக்கு முக்கிய 2 விக்கெட்டுகளை இழந்தது.
தொடர்ந்து சாண்டோ 9 ரன்களுக்கும், கேப்டன் சாகிப் அல் ஹாசன் 5 ரன்களுக்கும், முக்பிகூர் ரஹீம் 1 ரன்னுக்கும் ஆட்டமிழந்த நிலையில், சிறிது நேரம் தாக்குபிடித்த ஹசன் மிஸ்ரா 40 பந்துகளில் 5 பவுண்டரி ஒரு சிக்சருடன் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் வங்கதேச அணி 70 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
7-வது விக்கெட்டுக்கு இணைந்த முகமதுல்ல – மெகந்தி ஹசன் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட்ட நிலையில், கிடைத்த பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி ரன்கள் சேர்த்தனர். இந்த ஜோடி 38 ரன்கள் சேர்ந்த நிலையில், மெஹந்தி ஹசன் 17 ரன்களில் ரன் அவுட் ஆனார். அதனைத் தொடர்ந்து முகமதுல்ல 41 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து களமிறங்கிய டஸ்கின் அகமது 11 ரன்களுக்கும், முஸ்தாபிசூர் ரஹ்மான் 20 ரன்களுக்கும் ஆட்டமிழந்த நிலையில், வங்கதேச அணி 42.2 ஓவர்களில் 142 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனாது. இதன் மூலம் 87 ரன்கள் வித்தியாசத்தில வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி இந்த உலககோப்பை தொடரில் 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. ஏற்கனவே தனது 3-வது ஆட்டத்தில் தென்ஆப்பிரிகக் அணியை வீழ்த்தியது குறிப்பிடடத்தக்கது.
இந்த வெற்றியின் மூலம் 6 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி பெற்றுள்ள நெதர்லாந்து அணி 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்திலும், வங்கதேசம் ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகள் பெற்று 9-வது இடத்திலும் உள்ளது.
இரு அணிகளின் பிளேயிங் லெவன்:
வங்கதேசம்: தன்சித் ஹசன், லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), மஹ்முதுல்லா, மெஹிதி ஹசன் மிராஸ், மஹேதி ஹசன், தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிபுல் இஸ்லாம்.
நெதர்லாந்து: விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடோவ்ட், வெஸ்லி பாரேசி, கொலின் அக்கர்மேன், ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), பாஸ் டி லீட், சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட், லோகன் வான் பீக், ஷாரிஸ் அகமது, ஆர்யன் தத், பால் வான் மீகெரென்.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் இரு அணிகளும் 5 ஆட்டங்களில் ஆடி தலா 1 வெற்றி, 4 தோல்வி கண்டுள்ளன. இந்த ஆட்டத்தில் தோல்வி அடையும் அணியின் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்துவிடும். எனவே, இந்தப் போட்டியில் வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“