Hardik Pandya – Rohit Sharma – BCCI Tamil News: 8-வது டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்றது. இந்த தொடருக்கான அரையிறுதி போட்டியில் இந்திய அணி இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்து வெளியேறியது. இதனால் இந்திய அணியில் வீரர்கள் தேர்வு குறித்து பல விமர்சனங்கள் எழுந்தது. இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், அணியை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தோல்வி எதிரொலியாக, சேத்தன் சர்மா தலைமையிலான இந்திய அணியின் தேர்வு குழுவில் உள்ள அனைவரையும் நீக்கம் செய்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அதிரடி உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஹர்விந்தர் சிங், சுனில் ஜோஷி மற்றும் தேபாசிஷ் மொகந்தி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் தேர்வு குழுவில், தலைவர் உள்ளிட்ட 5 பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
மேலும், இந்த ஐந்து பதவிகளுக்கு விண்ணப்பிப்போரின் தகுதிகளாக, ‘அவர் குறைந்தபட்சம் ஏழு டெஸ்ட் போட்டிகள் அல்லது 30 முதல்தர போட்டிகள் விளையாடி இருக்க வேண்டும். அல்லது 10 ஒருநாள் மற்றும் 20 முதல்தர போட்டிகளில் விளையாடியிருக்க வேண்டும்.’ என்று பிசிசிஐ குறிப்பிட்டுள்ளது. தற்போதைய தேர்வுக் குழு உறுப்பினர்கள் விரும்பினால், மீண்டும் அந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், அனைத்து சாத்தியக்கூறுகளிலும், தற்போதைய பேனலைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக வாரியம் புதிய முகங்களை தேர்வு செய்யவே அதிக வாய்ப்புள்ளது. அவர்கள் ஏன் தேர்வுக் குழுவைத் தக்கவைக்கவில்லை என்பதற்கு வாரியம் எந்த காரணத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால், டி20 உலகக் கோப்பையில் இருந்து இந்தியா வெளியேற்றப்பட்ட ஏமாற்றம் ஒரு காரணமாக இருக்கலாம். சுவாரஸ்யமாக, தற்போதைய குழுவின் பல உறுப்பினர்கள் நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் நடந்து வரும் விஜய் ஹசாரே டிராபி போட்டிகளைப் பார்ப்பதில் பிஸியாக உள்ளனர்.
டி20 நிரந்தர கேப்டனாக ஹர்திக்? பதவியை பிரிக்கும் புதிய தேர்வாளர்கள்
இதுஒருபுறமிருக்க, புதிதாக தேர்வு செய்யப்பட உள்ள இந்திய அணியின் தேர்வு குழு, ஒவ்வொரு ஃபார்மெட்டிலும் அணிக்கு தனித்தனி கேப்டனை நியமிக்க உள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகின்றன.

தற்போது, ரோகித் சர்மா அனைத்து ஃபார்மெட்டிலும் (வடிவங்களிலும்) அணியை வழிநடத்துகிறார். ஆனால், நியூசிலாந்து உடனான டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பாண்டியா, இந்தியன் பிரீமியர் லீக்கின் அறிமுக தொடரிலே குஜராத் டைட்டன்ஸ் அணியை சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். மேலும் அவர் அதிரடியான ஆல்ரவுண்டராவும் செயல்பட்டு வருகிறார். எனவே, அவரே டி20 அணியின் நிரந்தர கேப்டனாக நியமிக்கபடலாம்.
கேப்டன் பதவிக்கான மற்றொரு சாத்தியமான போட்டியாளர் ஜஸ்பிரித் பும்ரா பார்க்கப்படுகிறார். தற்போது அவர் காயம் அடைந்து இருந்தாலும், அவர் அணிக்கு திரும்பும்போது என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ரோகித்தைப் பொறுத்தவரை, அவருக்கு ஏற்கனவே 35 வயதாகிறது. அடுத்த ஆண்டு சொந்த மண்ணில் நடக்கும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு அவரை கேப்டனாக வைத்திருக்க நிர்வாகம் விரும்பலாம். 2024-ல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கவுள்ள அடுத்த டி20 உலகக் கோப்பையை மனதில் வைத்து பாண்டியா வளர்க்கப்படுகிறார். நடப்பு டி20 உலக் கோப்பையில் இடம்பெற்ற பெரும்பாலான மூத்த வீரர்கள் அடுத்த தொடருக்கான அணியில் இடம்பெற வாய்ப்பில்லை.
தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பணிக்கு அச்சுறுத்தல் இல்லை என்றும் தெரியவந்துள்ளது.
வந்ததும் நடையைக் கட்டும் தொடக்க ஆட்டக்காரர்கள், திறமையான ஃபினிஷர் இல்லாமை, பந்துவீச்சு வரிசையில் எக்ஸ்பிரஸ் வேகம் இல்லை, மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர் உள்ளிட்ட பல பலவீனங்களால் பெரும் பின்னடைவை இந்திய அணி சந்தித்தது. டி20 ஃபார்மெட்டில் நம்பர் 1 பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவின் பைரோடெக்னிக்குகள்தான் இந்தியாவின் ப்ளஷ்ஸைக் காப்பாற்றியது. ஒயிட்-பால் செட்-அப்பில் உள்ள இடங்களுக்காக போட்டியிடக்கூடிய பல வீரர்கள் தற்போது நியூசிலாந்துக்கான இந்திய அணி சுற்றுப்பயணத்தில் உள்ளனர். மேலும் அவர்கள் தங்களின் திறனை கிரிக்கெட் உலகிற்கு வெளிக்காட்ட தயாராகி வருகிறார்கள்.
நடப்பு உலகக் கோப்பையில், இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் பரபரப்பான போட்டியில் பாகிஸ்தானை வென்றது. தொடர்ந்து நெதர்லாந்திற்கு எதிரான எளிதான வெற்றிக்குப் பிறகு, பெர்த் ஆடுகளத்தில் தென்ஆப்பிரிக்காவிடம் அடிபணிந்தது. வங்கதேச அணி மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டத்தில் இந்தியாவுக்கு நெருங்கடி கொடுத்தனர். ஜிம்பாப்வேக்கு எதிரான அபார வெற்றிக்கு முன், சூர்யகுமார் யாதவ் மீண்டும் நட்சத்திரமாக மாறி இருந்தார்.
ஆனால் ஜோஸ் பட்லர் தலைமையிலான நடப்பு சாம்பியன் அணி, இந்தியாவை அரையிறுதி ஆட்டத்தில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் இந்திய அணியில் உள்ள பலவீனமான பகுதிகள் வெளியுலகிற்கு அம்பலலமானது. கே.எல்.ராகுல் ரன் மற்றும் ஸ்ட்ரைக் ரேட் ஆகிய இரண்டிலும் எதிரணிக்கு எதிராக ஏமாற்றம் அளித்தார். விராட் கோலியின் அரை சதம் மற்றும் பாண்டியாவின் தாமதமான அதிரடி ஆட்டத்தால் இந்தியா 168 ரன்கள் எடுத்தது. இது முற்றிலும் போதுமானதாக இல்லை என்பதை நிரூபித்தது.
பிசிசிஐ நிர்ணயித்த தேர்வாளர்கள் தகுதிகளின்படி, புதிய தேர்வுக் குழு மூத்த ஆண்கள் அணிக்கு வலுவான பெஞ்சைத் திட்டமிட்டு தயார் செய்ய வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil