New stand at MA Chidambaram Stadium to be named after former TN chief minister M Karunanidhi Tamil News: எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ளது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் முதல் ஐ.பி.எல் மற்றும் உள்ளூர் போட்டிகள் வரை இங்கு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வருகிற 22 ஆம் தேதி இங்கு நடக்கவுள்ளது.
இதனிடையே, எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் அண்ணா பெவிலியன் அமைக்கப்படும் புதிய ஸ்டாண்டிற்கு தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் சூட்டப்பட உள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க வட்டாரங்கள் (டிஎன்சிஏ) இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்துள்ளன.
1969 முதல் 2011 வரை 5 முறை தமிழக முதல்வராக இருந்த மறைந்த தந்தையின் பெயரிடப்பட்ட புதிய ஸ்டாண்டை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மார்ச் 17 அன்று திறந்து வைக்கிறார். இந்த திறப்பு விழாவில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உத்யநிதி ஸ்டாலின் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுடமான எம்.எஸ். தோனி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்த தேதிக்குள் புதிய மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் ஸ்டாண்டும் தயாராகிவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனுக்குப் பிறகு இந்தியாவின் இரண்டாவது மிகப் பழமையான கிரிக்கெட் மைதானமாக எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் உள்ளது. 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் நிலையில், இதனையொட்டி மைதானத்தில் உள்ள ஸ்டாண்டுகள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. மார்ச் 22 அன்று நடக்கும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டிக்கான புதிய ஸ்டாண்டுகள் ரசிகர்களுக்காக திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தின் ஸ்டாண்டுகளுக்கு இதுவரை எந்த முன்னாள் வீரர், நிர்வாகி அல்லது அரசியல்வாதியின் பெயரால் பெயரிடப்படவில்லை. ஆனால், முதல்முறையாக கடந்த 2018ல் மறைந்த 5 முறை முதல்வரைக் கவுரவிப்பதற்காக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் விதிவிலக்கு அளித்துள்ளது. முதுபெரும் அரசியல் தலைவரான கருணாநிதியும் ஒரு கிரிக்கெட் ரசிகர் ஆவார். அவர் பலமுறை இந்த ஸ்டேடியத்தில் இருந்து போட்டிகளை கண்டு களித்துள்ளார். மேலும், அவர் கடந்த இரண்டு முறை முதல்வராக இருந்தபோது அவரை எம்எல்ஏவாக தேர்ந்தெடுத்த தொகுதி சேப்பாக்கம் ஆகும்.

திமுக முன்னாள் தலைவரும், முதல்வருமான சி.என்.அண்ணாதுரை பெயரில் அமைக்கப்பட்டிருந்த பெவிலியனை கருணாநிதி திறந்து வைத்தார். இந்த புதிய ஸ்டாண்ட் அமைக்க தொடங்கியது முதல் அதற்கு கருணாநிதியின் பெயர் சூட்டப்படும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் முடிவு செய்திருந்தது. மேலும், பல ஆண்டுகளாக, சங்கம் அடுத்தடுத்து வந்த திமுக அரசுடன் நெருங்கிய உறவை அனுபவித்து வருகிறது. அதன் தற்போதைய தலைவரான டாக்டர் பி அசோக் சிகாமணி தமிழக உயர்கல்வி அமைச்சர் கே பொன்முடியின் மகன் ஆவார்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க வரலாற்றைக் கண்டறியும் அருங்காட்சியகமும் வரவுள்ளது. இரண்டு புதிய ஸ்டாண்டுகளுடன், மைதானத்தின் மொத்த இருக்கை எண்ணிக்கை சுமார் 38,000 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil