worldcup 2023 | new-zealand-vs-south-africa: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று (புதன்கிழமை) புனேயில் நடந்த 32-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் 190 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா அபார வெற்றியைப் பெற்றது.
இந்த அசத்தல் வெற்றியின் மூலம் தென்ஆப்பிரிக்கா 12 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது. 8 புள்ளிகளுடன் 3ம் இடத்தில் இருந்த நியூசிலாந்து 4ம் இடத்துக்கு சறுக்கியுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: World Cup: After Kiwis’ loss to South Africa, why New Zealand vs Pakistan on Saturday becomes important
இந்நிலையில், நியூசிலாந்தின் தொடர்ச்சியான 3வது தோல்வி அவர்களின் அடுத்த ஆட்டத்திற்கு கூடுதல் முக்கியத்துவத்தை அளித்துள்ளது. 10 நாட்களுக்கு முன்பு புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த அந்த அணி, அடுத்ததாக வருகிற சனிக்கிழமை வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடித்துக் கொண்டிருக்கும் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிக்கு முன்னேற பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி மீதமுள்ள இரண்டு லீக் ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டும். அவர்கள் தங்கள் கடைசி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை எதிர்கொள்கிறார்கள். மேலும், நியூசிலாந்து அவர்களின் கடைசி போட்டியில் இலங்கையை வென்றாலும் கூட பாகிஸ்தான் அரையிறுதிக்கான போட்டியில் இருக்கும்.
நியூசிலாந்து பாகிஸ்தானிடம் மிக மோசமாக தோற்கவில்லை என்றால், அந்த அணி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும். ஆனால் அரையிறுதிக்கு செல்லும் நம்பிக்கையை கைவிடாத மற்ற அணிகளும் உள்ளன. தற்போதைய நிலவரப்படி, வங்கதேசம் அரையிறுதி போட்டியில் இருந்து வெளியேறி உள்ளது. மற்ற அனைத்து அணிகளும் கணித ரீதியாக இன்னும் போட்டியில் உள்ளன.
இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் அரையிறுதிக்கு உறுதியாக முன்னேறலாம். அது இப்போது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. தொடர்ந்து நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள ஆஸ்திரேலியா மீதமுள்ள 3 போட்டிகளில் இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகிய அணிகளுக்கு எதிர்கொள்கிறது. இதில் 2ல் வெற்றி பெற்றால் கூட முதல் 4 இடங்களுக்குள் வந்துவிடும்
பாகிஸ்தான் மற்றும் இலங்கையை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அடுத்ததாக நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. அவர்களும் அரையிறுதி நம்பிக்கையையும் விட்டுக் கொடுத்திருக்க மாட்டார்கள். ஆனால் ஆப்கானிஸ்தானின் கடைசி இரண்டு ஆட்டங்கள் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரானவை. அதிலும் வெற்றியை ருசிக்க போராடுவார்கள்.
நெதர்லாந்து அணியினர் தங்கள் கடைசி இரண்டு ஆட்டங்களில் இங்கிலாந்து மற்றும் இந்தியாவை எதிர்கொள்கிறார்கள். இந்த 2 போட்டிகளும் அவர்களுக்கு மிகுந்த சவாலாக இருக்கும்.
வருகிற சனிக்கிழமை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து தோல்வியடைந்தால், அவர்கள் அதிகாரப்பூர்வமாக தொடரில் இருந்து வெளியேறுவார்கள். இன்றைய போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளும் இலங்கை அணி இப்போட்டி உட்பட மீதமுள்ள 2 போட்டிகளிலும் அவசியம் வெற்றி பெற வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“