worldcup 2023 | New Zealand vs bangladesh: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று மதியம் 2 மணிக்கு சென்னையில் உள்ள சேப்பாக்கத்தில் தொடங்கிய 11வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - வங்கதேசம் அணிகள் மோதி வருகின்றன.
ஆங்கிலத்தில் படிக்க: New Zealand vs Bangladesh Live Score, World Cup 2023
டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங்; வங்கதேசம் பேட்டிங்
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், பங்களாதேஷ் மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 11-வது லீக் ஆட்டம் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து பங்களாதேஷ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள், லிட்டன் தாஸ் மற்றும் தன்சித் ஹசன் பேட்டிங் செய்ய களம் இறங்கினர். ட்ரெண்ட் போல்ட் வீசிய முதல் ஓவர் முதல் பந்திலேயே லிட்டன் தாஸ் மேட் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி அந்த அணிக்கு அதிர்ச்சி அளித்தார். இவரை அடுத்து, மெஹிந்தி ஹசன் பேட்டிங் செய்ய வந்தார்.
வங்கதேசம் அணி 7.6 ஓவரில் 40 ரன் எடுத்திருந்தது. அப்போது தன்சித் 17 பந்துகளில் 4 பவுண்டரிகளை அடித்து 16 ரன் எடுத்திருந்த நிலையில், ஃபெர்குசன் பந்தில் டெவோன் இடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்து, நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ பேட்டிங் செய்ய வந்தார். இதையடுத்து, 11.4 ஓவரில் வங்கதேசம் 56 ரன் எடுத்திருந்த நிலையில், அப்போது ஹெஹிந்தி ஹசன் 46 பந்துகளில் 30 ரன் எடுத்திருந்தபோது, ஃபெர்குசன் பந்தில் மேட் ஹென்றி இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இவரை அடுத்து, ஷகிப் அல் ஹசன் பேட்டிங் செய்ய வந்தார். ஷாண்டோ 7 ரன் எடுத்திருந்த நிலையில், கிளென் பிலிஸ் பந்தில் டெவோன் கான்வேயிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.அடுத்து முஷ்ஃபிகுர் ரஹிம் பேட்டிங் செய்ய வந்தார்.
ஷகிப் அல் ஹசன் - முஷ்ஃபிகுர் ரஹிம் ஜோடி பொறுப்புடன் விளையாடியது. வங்கதேசம் அணி 29.5 ஓவரில் 152 ரன் எடுத்திருந்தது. அப்போது ஷகிப் அல் ஹசன் 51 பந்தில் 40 ரன் எடுத்திருந்த நிலையில், ஃபெர்குசன் பந்தில் டாம் லதம் இடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இவரையடுத்து, டோவ்ஹிட் ஹிரிதோய் பேட்டிங் செய்ய வந்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய முஷ்ஃபிகுர் ரஹிம் அரைசதம் அடித்து 75 பந்துகளில் 66 ரன் எடுத்திருந்தபோது, மேட் ஹென்றி பந்தில் போல்ட் அவுட் ஆனார். அடுத்து மஹ்மதுல்லா பேட்டிங் செய்ய வந்தார்.
வங்கதேசம் 37.5 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 180 ரன் எடுத்திருந்தது. அப்போது, ஹிரிதோய் 25 பந்தில் 13 ரன் எடுத்திருந்த நிலையில், ட்ரெண்ட் போல்ட் பந்தில் சாண்ட்னரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இவரையடுத்து, தஸ்கின் அஹமது பேட்டிங் செய்ய வந்தார்.
வங்கதேசம் 44.6 ஓவரில் 214 ரன் எடுத்திருந்தது. அப்போது தஸ்கின் அஹமது 17 ரன் எடுத்திருந்த நிலையில், சாண்ட்னர் பந்தில் டேரில் மிட்செல்லிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து முஸ்தஃபிசுர் ரஹ்மான் பேட்டிங் வந்தார். 4 ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில், மேட் ஹென்றி பந்தில் டாம் லதாம் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இவரையடுத்து, ஷோரிஃபுல் இஸ்லாம் பேட்டிங் செய்ய் வந்தார். விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் அடித்து விளையாடிய மஹ்மதுல்லா 49 பந்தில் 41 ரன் எடுத்தார். இவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில் வங்கதேசம் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 245 ரன் எடுத்தது. நியூசிலாந்து அணி ஃபெர்குசன் 3 விக்கெட்டுகளும், ட்ரெண்ட் போல்ட், மேட் ஹென்றி தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதன் மூலம், 246 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டேவான் கான்வே - ரச்சின் ரவிந்திரா பேட்டிங் செய்ய வந்தனர். நியூசிலாந்து அணி 3.5 ஓவரில் 14 ரன் எடுத்திருந்தபோது, 13 பந்துகளில் 9 ரன் எடுத்திருந்த ரச்சின் ரவிந்திரா முஸ்தாஃபிசுர் ரஹ்மான் பந்தில் அவுட் முஷ்ஃபிகுர் ரஹிம் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இவரையடுத்து, நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங் செய்ய வந்தார்.
நியூசிலாந்து அணி 20.1 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 92 ரன் எடுத்திருந்தபோது, சிறப்பாக விளையாடிய டெவோன் கான்வே 59 பந்துகளில் 45 ரன் எடுத்திருந்த நிலையில், ஷகிப் அல் ஹசன் பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆகி வெளியேறினார்.
அடுத்து டேரில் மிட்செல் பேட்டிங் செய்ய வந்தார். கேன் வில்லியம்சன் மற்றும் டாரில் மிட்செல் நிதானமாக விளையாடியது. சிறப்பாக விளையாடிய கேப்டன் கேன் வில்லியம்சன் 81 பந்துகளில் 50 அரைசதம் அடித்தார். அதே போல, டாரில் மிட்செல்லும் அரைசதம் அடித்தார்.
நன்றாக விளையாடி வந்த கேன் வில்லியம்சன் 78 ரன் எடுத்திருந்தபோது அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதனால், அவர் தொடர்ந்து விளையாடாமல் காயம் காரணமாக ஓய்வெடுப்பதற்காக பெவிலியன் சென்றார்.
அடுத்து, கிளென் பிலிப்ஸ் பேட்டிங் செய்ய வந்தார். டேரில் மிட்செல் - கிளென் பிலிப்ஸ் ஜோடி நியூசிலாந்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றது. 42.5 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 248 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டேரில் மிட்செல் 67 பந்துகளில் 89 ரன்னும் கிளென் பிலிப்ஸ் 11 பந்தில் 16 ரன்னும் எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்கமால் இருந்தனர்.
இந்த போட்டியில் வங்கதேச வீரர்கள் 4 கேட்ச்களை கோட்டைவிட்டு நியூசிலாந்து வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்த தவறிவிட்டனர். இதனால், நியூசிலாந்து வீரர்கள் டேரில் மிட்செல், கேன் வில்லியம்சன் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு ரன் குவித்தனர்.
இரு அணிகளின் பிளேயிங் லெவன்:-
வங்கதேசம்:
லிட்டன் தாஸ், தன்சித் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, மெஹிதி ஹசன் மிராஸ், ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), தவ்ஹித் ஹிரிடோய், மஹ்முதுல்லா, தஸ்கின் அகமது, ஷோரிபுல் இஸ்லாம், முஸ்தாபிசுர் ரஹ்மான்.
நியூசிலாந்து:
டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), டேரில் மிட்செல், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னர், மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன், டிரென்ட் போல்ட்
நியூசிலாந்து அணி தனது முதலாவது ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தையும், அடுத்த ஆட்டத்தில் 99 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தையும் எளிதில் தோற்கடித்தது. தொடர்ச்சியாக 2 வெற்றிகளை ருசித்துள்ள அந்த அணி 'ஹாட்ரிக்' வெற்றிக்கு தற்போது குறி வைத்துள்ளது. காயம் காரணமாக ஓய்வில் இருந்த கேப்டன் கேன் வில்லியம்சன் இன்றைய ஆட்டத்தில் களம் இறங்குகிறார்.
மறுபுறம், ஷகிப் அல்-ஹசன் தலைமையிலான வங்கதேச அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை பதம் பார்த்தது. அடுத்த ஆட்டத்தில் 137 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டது. அந்த தோல்வியில் இருந்து மீள இன்றைய ஆட்டத்தில் போராடும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
நேருக்கு நேர்
நியூசிலாந்து - வங்கதேச அணிகள் சர்வதேச ஒருநாள் போட்டியில் இதுவரை 41 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 30-ல் நியூசிலாந்தும், 10-ல் வங்காளதேசமும் வென்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. உலகக் கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிராக 5 ஆட்டங்களில் ஆடி அனைத்திலும் நியூசிலாந்தே வெற்றி வாகை சூடி இருக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.