Worldcup 2023 | New-zealand vs Netharlands: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்னை சேப்பாக்கத்தில் நடந்த 5வது லீக் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. மிகவும் பரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் 6வது லீக் போட்டியில் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை நெதர்லாந்து அணி எதிர்கொள்கிறது. ஐதராபாத் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியானது மதியம் 2 மணிக்கு தொடங்கியது.
ஆங்கிலத்தில் படிக்க: New Zealand vs Netherlands Live Score, World Cup 2023
டாஸ் வென்ற நெதர்லாந்து பவுலிங்
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து, நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.
நியூசிலாந்து பேட்டிங்
நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கியுள்ள டெவோன் கான்வே - வில் யங் ஜோடி முதல் 3 ஓவர்களில் ஒரு ரன் கூட எடுக்கவில்லை என்றாலும், இந்த ஜோடி அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். 12 ஓவர்கள் வரை நெதர்லாந்து விக்கெட் வீழ்த்த போராடினர்.
13வது ஓவரை வீசிய வான்டெர் மெர்வே டெவோன் கான்வே விக்கெட்டை வீழ்த்தி தொடக்க ஜோடியை உடைத்தார். கான்வே 32 ரன்னில் ஆட்டமிழந்தார். களத்தில் இருந்த வில் யங் - ரச்சின் ரவீந்திரா ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்த ஜோடியில் வில் யங் அரைசதம் விளாசினார். அவர் 80 பந்துகளில் 7 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு 70 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் இருந்த ரச்சின் ரவீந்திரா அரைசதம் அடித்து 51 ரன்களில் அவுட் ஆனார்.
அடுத்து வந்த டேரில் மிட்செல் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் 48 ரன்னுடன் ஆட்டமிழந்தார். கேப்டன் டாம் லாதமுடன் ஜோடி சேர்ந்த க்ளென் பிலிப்ஸ் 4 ரன்னுக்கு அவுட் ஆனார். தற்போது கேப்டன் டாம் லாதம் - மார்க் சாப்மேன் ஜோடி களத்தில் விளையாடி வருகின்றனர். நியூசிலாந்து அணி 41.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்தது.
ஒரு புறம் லாதம் சிறப்பாக விளையாட, மறுமுனையில் ஆடிய சாப்மன் 5 ரன்களில் அவுட் ஆனார். அவர் ஆர்யன் தத் பந்தில் வான் டெர் மெர்விடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அடுத்து லாதம் உடன் சாண்ட்னர் ஜோடி சேர்ந்தார். இருவரும் கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடி ரன் சேர்த்தனர். சிறப்பாக ஆடி வந்த லாதம் அரைசதம் அடித்து அசத்தினர். இருப்பினும் 53 ரன்களில் லாதம் அவுட் ஆனார். அவர் 46 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் இந்த ரன்களை எடுத்தார்.
அடுத்து களமிறங்கிய மார்க் ஹென்றி ஒரு சிக்சருடன் 10 ரன்கள் எடுத்திருந்த நிலையில், நியூசிலாந்து அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. சாண்ட்னர் 17 பந்துகளில் 36 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் அடங்கும்.
நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் எடுத்துள்ளது. நெதர்லாந்து தரப்பில் ஆர்யன், மீகிரன், மெர்வ் தலா 2 விக்கெட்களையும், லீடே ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
நெதர்லாந்து பேட்டிங்
நெதர்லாந்து அணியில் தொடக்க வீரர்களாக விக்ரம்ஜித் மற்றும் மேக்ஸ் களமிறங்கினார். இருவரும் நிதானமாக ஆடி வந்த நிலையில், விக்ரம்ஜித் 12 ரன்களில் அவுட் ஆனார். மார்க் ஹென்றி அவரை போல்டாக்கினார்.
காலின் அக்கர்மேன் களமிறங்கி, சற்று அதிரடியாக ஆடினார். மறுமுனையில் ஆடிவந்த மேக்ஸ் 16 ரன்களில் அவுட் ஆனார். சாண்ட்னர் அவரை எல்.பி.டபுள்யூ செய்தார்.
அடுத்து களமிறங்கிய லீடே சிறிது நேரம் தாக்குப் பிடித்து ஆடினார். 18 ரன்கள் எடுத்திருந்தப்போது லீடே அவுட் ஆனார். அவர் ரச்சின் பந்தில் போல்ட்டிடம் கேட்ச் கொடுத்தார். அப்போது நெதர்லாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்திருந்தது.
அடுத்து களமிறங்கிய நிடமனுரு சற்று அதிரடியாக ஆடி ரன் சேர்த்தார். அவர் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் அடித்தார். இதற்கிடையில் சிறப்பாக ஆடி வந்த காலின் அரைசதம் அடித்தார். மறுமுனையில் ஆடிய நிடமனுரு 21 ரன்களில் ரன் அவுட் ஆனார்.
அடுத்து களமிறங்கிய கேப்டன் எட்வர்ஸ் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். காலின் உடன் சேர்ந்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார். மறுமுனையில் ஆடிவந்த காலின் 69 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் சாண்ட்னர் பந்தில் ஹென்றியிடம் கேட்ச் கொடுத்தார்.
அடுத்ததாக ஏங்கல்பிரகெட் களமிறங்கிய நிலையில், எட்வர்ட்ஸ் 2 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் அடித்தார். இருப்பினும் எட்வர்ட்ஸ் 30 ரன்களில் அவுட் ஆனார். அவர் சாண்ட்னர் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்தார். இதனால் நெதர்லாந்து அணி 35 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய மெர்வ் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அவர் சாண்ட்னர் பந்தில் ஹென்றியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ரியான் 8 ரன்கள் மட்டும் எடுத்து சாண்ட்னர் பந்தில் எல்.பி.டபுள்யூ ஆனார்.
அடுத்ததாக ஆர்யன் களமிறங்கிய நிலையில், நெதர்லாந்து அணி 200 ரன்களைக் கடந்தது. இருப்பினும் சற்று நிலைத்து ஆடிவந்த ஏங்கல்பிரெக்ட் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் ஹென்றி பந்தில் கான்வேயிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்ததாக மீக்ரன் களமிறங்கி 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மறுமுனையில் ஆடிவந்த ஆர்யன் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் ஹென்றி பந்தில் போல்டானார்.
நெதர்லாந்து அணி 46.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 223 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், நியூசிலாந்து அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்து தரப்பில் சாண்ட்னர் 5 விக்கெட்களையும், ஹென்றி 3 விக்கெட்களையும், ரச்சின் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இரு அணிகளின் ஆடும் லெவன்:
நியூசிலாந்து:
டெவோன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லாதம் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னர், மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன், டிரென்ட் போல்ட்.
நெதர்லாந்து
விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடோவ்ட், கொலின் அக்கர்மேன், பாஸ் டி லீடே, தேஜா நிடமனுரு, ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட், ரோலோஃப் வான் டெர் மெர்வே, ரியான் க்ளீன், ஆர்யன் தட், பால் வான் மீகெரன்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.