/indian-express-tamil/media/media_files/2025/03/05/vhGEdgYp38vHgs7EWMge.jpg)
சாம்பியன்ஸ் டிராபியில் லாகூரில் நடந்த 2-வது அரைஇறுதியில் தென் ஆப்பிரிக்காவை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு அபாரமாக முன்னேறியது.
South Africa vs New Zealand Champions Trophy 2025 Match Highlights: 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிகள் கடந்த 19 ஆம் தேதி முதல் பாகிஸ்தான் மற்றும் துபாயில் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்தத் தொடரில், துபாயில் நேற்று செவ்வாய்க்கிழமை நடந்த முதல் அரைஇறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.
நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்கா மோதல்
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று புதன்கிழமை பிற்பகல் 2:30 மணிக்கு லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் நடந்த 2-வது அரைஇறுதியில் நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
ஆங்கிலத்தில் படிக்கவும்: South Africa vs New Zealand LIVE Cricket Score, Champions Trophy 2025 2nd Semi-Final
டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்து ஆடியது. நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக வில் யங் - ரச்சின் ரவீந்திரா ஜோடி களமிறங்கிய நிலையில், 3 பவுண்டரியை விரட்டிய வில் யங் 21 ரன்னில் அவுட் ஆனார்.
இதன் பின்னர் களத்தில் இருந்த ரச்சின் ரவீந்திரா உடன் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் ஜோடி அமைத்தார். இந்த ஜோடி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் இணைந்து தென் ஆப்ரிக்காவின் பந்துவீச்சை பதம் பார்த்தனர். இதில் ரச்சின் ரவீந்திரா 47 பந்திலும், கேன் வில்லியம்சன் 61 பந்திலும் அரைசதம் அடித்து அசத்தினர்.
தொடர்ந்து தங்களது தரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்த ஜோடி, வலுவான பார்ட்னர்ஷிப்பை அமைத்து அணியின் ஸ்கோர் விறுவிறுவென உயர உதவினர். இதில் 93 பந்துகளில் சதம் விளாசி மிரட்டினார் தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திரா. அவர் 101 பந்துகளில் 13 பவுண்டரிகள், 1 சிக்சருடன் 108 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இதையடுத்து, களத்தில் இருந்த கேன் வில்லியம்சனுடன் டேரில் மிட்செல் ஜோடி அமைத்தார். தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேன் வில்லியம்சன் 98 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். இது அவரது 15-வது ஒருநாள் போட்டி சதமாகும். 94 பந்துகளில் 10 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களை பறக்கவிட்ட அவர், 102 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இதன்பின்னர், களத்தில் ஆடி வந்த டேரில் மிட்செல் - டாம் லாதம் ஜோடியில், டாம் லாதம் 4 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். அவருக்குப் பின் வந்த க்ளென் பிலிப்ஸ் டேரில் மிட்செலுடன் இணைந்தார். இந்த ஜோடி அதிரடியாக பவுண்டரிகளை விரட்டி தென் ஆப்பிரிக்காவுக்கு மேலும் குடைச்சல் கொடுத்தது. இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டேரில் மிட்செல் 49 ரன்னுக்கு அவுட் ஆனார்.
அடுத்து வந்த மைக்கேல் பிரேஸ்வெல் 2 பவுண்டரியை மட்டும் விரட்டி 16 ரன்னுக்கு அவுட் ஆனார். இறுதியில், 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 362 ரன்கள் குவித்தது. ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த க்ளென் பிலிப்ஸ் 49 ரன்களும், கேப்டன் மிட்செல் சான்ட்னர் 2 ரன்னும் எடுத்தனர். தென் ஆப்ரிக்க அணியில் லுங்கி என்கிடி 3 விக்கெட்டையும், ககிசோ ரபாடா 2 விக்கெட்டையும், வியான் முல்டர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
தென் ஆப்ரிக்கா பேட்டிங்
இதையடுத்து, நியூசிலாந்துக்கு எதிராக தென் ஆப்ரிக்கா அணி 363 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தியது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக ரியான் ரிக்கல்டன் - கேப்டன் டெம்பா பவுமா ஜோடி களமிறங்கிய நிலையில், ரியான் ரிக்கல்டன் 17 ரன்னில் அவுட் ஆனார். அவருக்குப் பின் வந்த ரஸ்ஸி வான் டெர்சன் கேப்டன் டெம்பா பவுமாவுடன் ஜோடி அமைத்தார்.
மிகவும் நிதானமாக ஆடி நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்த இந்த ஜோடியில் கேப்டன் டெம்பா பவுமா அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 71 பந்தில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரியை விரட்டி 56 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அவருடன் ஜோடி அமைத்த ரஸ்ஸி வான் டெர்சன் அதிரடியாக மட்டையைச் சுழற்றி அரைசதம் விளாசி அசத்தினார்.
அவர் சீரான இடைவெளியில் 4 பவுண்டரியையும், 2 சிக்ஸரையும் பறக்கவிட்டு அணி வலுவாக இருப்பதை வெளிப்படுத்தினார். அப்போது 26.5-வது ஓவரை வீசிய நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர் சுழல் வித்தை காட்டி வான் டெர்சனின் பின்புறம் இருந்த மிடில் ஸ்டம்ப்பை பதம் பார்த்தார். இந்தப் பந்தை சற்றும் எதிர்பார்க்காத வான் டெர்சன் கதிகலங்கிப் போனார். அவர் 69 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றத்துடன் வெளியேறினார்.
இதன்பின்னர் களத்தில் இருந்த ஐடன் மார்க்ரம் - ஹென்ரிச் கிளாசென் ஜோடியில், 3 ரன் எடுத்த கிளாசென் சான்டனர் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். நீண்ட நேரம் தாக்குப்பிடித்து நிதானமாக ஆடி வந்த ஐடன் மார்க்ரம் 31 ரன்னுக்கு அவுட் ஆனார்.
அடுத்து வந்த வீரர்களில் வியான் முல்டர் (8), மார்கோ ஜான்சன் (3), கேசவ் மஹராஜ் (1), ககிசோ ரபாடா (16) உள்ளிட்டோர் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினர். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் களத்தில் இருந்த டேவிட் மில்லர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார். டெத் ஓவர்களில் அதிரடியாக ஆடிய அவர் கடைசி பந்தில் இரண்டு ரன்கள் எடுத்து சதம் விளாசி அசத்தினார்.
ஆனாலும், தென் ஆப்ரிக்கா நியூசிலாந்து நிர்ணயித்த இலக்கை எட்டிப்பிடிக்க முடியாமல், 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 50 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்திய நியூசிலாந்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. அதிரடியாக ஆடிய ரச்சின் ஆட்ட நாயகன் விருதை வென்றார். சூழல் ஜாலம் செய்த நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர் 3 விக்கெட்டையும், மாட் ஹென்றி, க்ளென் பிலிப்ஸ் தலா 2 விக்கெட்டையும், மைக்கேல் பிரேஸ்வெல், ரச்சின் ரவீந்திரா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்த அபார வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி வருகிற ஞாயிற்றுக்கிழமை துபாயில் அரங்கேறும் இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்துகிறது.
இரு அணிகளின் பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல்:
தென் ஆப்பிரிக்கா: ரியான் ரிக்கல்டன், டெம்பா பவுமா (கேப்டன்), ரஸ்ஸி வான் டெர்சன், ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), டேவிட் மில்லர், ஐடன் மார்க்ரம், வியான் முல்டர், மார்கோ ஜான்சன், கேசவ் மஹராஜ், ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி.
நியூசிலாந்து: வில் யங், ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), மாட் ஹென்றி, கைல் ஜேமிசன், வில்லியம் ஓர்ர்கே.
நேருக்கு நேர்
சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் நியூசிலாந்து - தென் ஆப்ரிக்கா அணிகள் இதுவரை 73 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 26-ல் நியூசிலாந்தும், 42-ல் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ளன. 5 ஆட்டத்தில் முடிவில்லை. சாம்பியன்ஸ் கோப்பையில் மோதி உள்ள இரு ஆட்டங்களில் தலா ஒன்றில் வெற்றி கண்டுள்ளன.
2011 ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2015 ஒருநாள் உலகக் கோப்பை ஆகிய ஐ.சி.சி நாக் அவுட்களில், தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் இதுவரை இரண்டு முறை சந்தித்துள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து அணியே வெண்றுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.