worldcup 2023 | New Zealand vs Sri Lanka: இந்திய மண்ணில் விறுவிறுப்பாக அரங்கேறி வரும் 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த தொடரில் புள்ளிகள் பட்டியலில் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ள இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.
ஆங்கிலத்தில் படிக்கவும்: New Zealand vs Sri Lanka Live Score, World Cup 2023
மீதமுள்ள ஒரு இடத்துக்கு நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இந்நிலையில், பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் 41-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - இலங்கை அணிகள் மோதுகின்றன.
டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங் - இலங்கை முதலில் பேட்டிங்
இந்நிலையில், இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங்கை தேர்வு செய்தது. அதனால் முதலில் பேட்டிங் செய்ய வந்த இலங்கை அணியில் தொடக்க வீரர்களாக பாத்தும் நிசாங்க - குசல் பெரேரா ஜோடி களமிறங்கிய நிலையில், நிசாங்க 2 ரன்னுக்கும், அடுத்து வந்த கேப்டன் குசல் மெண்டிஸ் 6 ரன்னுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் வந்த சதீர சமரவிக்ரம ஒரு ரன்னுக்கு அவுட் ஆனார்.
இதன்பிறகு களமிறங்கிய சரித் அசலங்கா 8 ரன்னுக்கும், அதிரடியாக விளையாடி 22 பந்துகளில் அரைசதம் அடித்த தொடக்க வீரர் குசல் பெரேரா 51 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து பேட்டிங் செய்ய வந்த வீரர்களில் தலா 2 பவுண்டரியை விரட்டிய ஏஞ்சலோ மேத்யூஸ் 16 ரன்னிலும், தனஞ்சய டி சில்வா 19 ரன்னிலும், சாமிக்க கருணாரத்னே 6 ரன்னுக்கு ஆட்டமிழந்து வெளியேறினர். துஷ்மந்த சமீரா ஒரு ரன்னுக்கு அவுட் ஆனார்.
நியூசிலாந்து பந்துவீச்சு தாக்குதல் தொடுத்து வரும் நிலையில், கடைசி விக்கெட்டுக்கு மஹீஷ் தீக்ஷனா - டில்ஷான் மதுஷங்கா ஜோடி நிதானமாக விளையாடிய நிலையில், தில்ஷன் மதுஷங்கா 19 ரன் எடுத்திருந்தபோது, ரச்சின் ரவிந்திரா பந்தில் டாம் லாதம் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதன் மூலம், இலங்கை அணி 46.4 ஓவரில் 171 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால், 172 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன், நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக் காரர்கள் டெவோன் கான்வே மற்றும் ரச்சின் ரவிந்திரா இருவரும் பேட்டிங் செய்ய களம் இறங்கினர். தொடக்கத்தில் இருந்தே இருவரும் அதிரடியாக அடித்து விளையாடினார்கள்.
நியூசிலாந்து அணி 12.2 ஓவரில் 86 ரன் எடுத்திருந்தபோது, அதிரடியாக விளையாடிய டெவோன் கான்வே 42 பந்துகளில் 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில், துஷ்மந்தா சமீரா பந்தில் தனஞ்செய டி சில்வா இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து கேன் வில்லியம்ஸன் பேட்டிங் செய்ய வந்தார்.
டெவோன் கான்வேவைத் தொடர்ந்து, 34 பந்துகளில் 42 ரன் எடுத்திருந்த ரச்சின் ரவிந்திரா, மஹீஷ் தீக்ஷனா பந்தில் தனஞ்செய டி சில்வா இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து டேரில் மிட்செல் பேட்டிங் செய்ய வந்தார்.
நியூசிலாந்து அணி 18.2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 130 ரன் எடுத்திருந்தபோது, கேன் வில்லியம்ஸன் 14 ரன் மட்டுமே அடித்து, ஏஞ்சலோ மேத்யூஸ் பந்தில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து, மார்க் சாப்மேன் பேட்டிங் செய்ய வந்தார்.
மார்க் சாப்மேன் 7 ரன் மட்டுமே எடுத்து வந்த வேகத்திலேயே ரன் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து, கிளென் பிலிப்ஸ் பேட்டிங் செய்ய வந்தார்.
நியூசிலாந்து அணி 22.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன் எடுத்திருந்தபோது, அதிரடியாக விளையாடி வந்த டேரில் மிட்செல் 31 பந்துகளில் 43 ரன் அடித்திருந்த நிலையில், ஏஞ்சலோ மேத்யூஸ் பந்தில் சரித் அசலங்கா இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, டாம் லாதம் பேட்டிங் செய்ய வந்தார்.
நியூசிலாந்து அணி வெற்றி பெற இன்னும் 10 ரன் மட்டுமே தேவைப்பட்டதால் கிளென் பிலிப்ஸ் - டாம் லாதம் நியூசிலாந்து அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர்.
இறுதியில் நியூசிலாந்து அணி 23.2 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கிளென் பிலிப்ஸ் 17 ரன்னுடனும், டாம் லாதம் 2 ரன்னுடனும் கடைசிவரை விக்கெட்டை இழக்காமல் களத்தில் இருந்தனர்.
இலங்கை அணி நிர்ணையித்த 171 ரன் என்ற வெற்றி இலக்கை நியூசிலாந்து அணி 23.2 ஓவரில் 172 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இரு அணிகளின் பிளேயிங் லெவன்
இலங்கை: பாத்தும் நிசாங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், தனஞ்சய டி சில்வா, சாமிக்க கருணாரத்னே, மஹீஷ் தீக்ஷனா, துஷ்மந்த சமீரா, டில்ஷான் மதுஷங்க.
நியூசிலாந்து: டெவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), டேரில் மிட்செல், மார்க் சாப்மேன், க்ளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), டிம் சவுத்தி, லாக்கி பெர்குசன், டிரென்ட் போல்ட்
நடப்பு உலகக் கோப்பை தொடரில் 8 புள்ளிகளுடன் +0.398 என்கிற நெட் ரன்ரேட்டுடன் உள்ள நியூசிலாந்து அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றியை ருசித்தால் அரையிறுதிக்கு வாய்ப்பு அதிகரிக்கும். அதே நேரத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளும் தங்களது கடைசி லீக்கில் வெற்றி பெற்றால் 3 அணிகளும் தலா 10 புள்ளிகளுடன் சமநிலை வகிக்கும். அப்போது அரையிறுதிக்குள் நுழைவது யார்? என்பதை ரன்-ரேட் தான் தீர்மானிக்கும். ரன்-ரேட்டில் நியூசிலாந்து வலுவாக இருப்பதால் அந்த அணிக்கு அரையிறுதி அதிக வாய்ப்புள்ளது.
ஒருவேளை இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து அணி தோற்று, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அணிகளும் தங்களது கடைசி லீக்கில் வீழ்ந்தால் 3 அணிகளும் 8 புள்ளிகளுடன் சமநிலை வகிக்கும். அப்போதும் ரன்-ரேட் தான் அரையிறுதி வாய்ப்பை முடிவு செய்யும். எந்த முடிவு கிடைத்தாலும் நியூசிலாந்து தங்களது நிலையை உறுதி செய்ய இரு நாட்கள் காத்திருக்க வேண்டி இருக்கும்.
முன்னாள் சாம்பியனான இலங்கை 8 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி (நெதர்லாந்து, இங்கிலாந்து), 6 தோல்வி (தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இந்தியா, வங்காளதேசத்துக்கு எதிராக) அடைந்து அரையிறுதி வாய்ப்பை இழந்து விட்டது. அந்த அணி ஆறுதல் வெற்றிக்காக போராடும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.