ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரை 1-3 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் பறிகொடுத்து, 10 வருடங்களுக்குப்பின் பார்டர் - கவாஸ்கர் கோப்பையை இழந்துள்ளது. இதனால் இந்திய அணி வீரர்கள் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
இதனிடையே, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்டு இருந்தார் இந்திய இளம் வீரரான நிதிஷ் குமார் ரெட்டி. விசாகப்பட்டினத்தை சேர்ந்த 21 வயதான இவர், தொடர் முழுதும் ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலிய அணியின் சொந்த மண்ணில் தனது முதல் சதத்தை அடித்த மிரட்டினார். சீனியர் வீரர்கள் ஆஸ்திரேலிய பவுலர்களை எதிர்கொள்ள போராடி வந்த நிலையில், மெல்பர்னில் நடந்த ஆட்டத்தில் 189 பந்துகளில் 11 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 114 ரன்கள் எடுத்தார்.
அவரது சிறப்பான பேட்டிங் அனைவரின் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது. முன்னாள் மற்றும் ஜாம்பவான் வீரர்கள் பலரும் அவரை பாராட்டு புகழ்ந்தனர். அவர் சதம் விளாசியதை மைதானத்தில் இருந்து நேரில் பார்த்த அவரது தந்தை உள்ளிட்ட உறவினர்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.
மேலும், இந்த தொடர் முடிந்து விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த அவரை, ரசிகர்கள், உறவினர்கள் எனப் பலரும் அவருக்கு உற்சாக அளித்தனர். அத்துடன் நிதிஷுக்கு ஒரு பெரிய மஞ்சள் மாலையைப் அணிவித்தனர். கேமராக்களின் க்ளிக்குகளுக்கு இடையே நிதிஷ் குமார் மீது பூக்கள் மலை பொழியப்பட்டது. பின்னர் அவர் திறந்த ஜீப்பில் தனது தந்தையுடன் வலம் வந்தார். அங்கிருந்தவர்கள் உற்சாகமாக அவரை வாழ்த்தினர்.
இந்த் நிலையில், நிதிஷ் குமார் ரெட்டி திருப்பதி கோயிலுக்குச் சென்று காணிக்கை செலுத்தியதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக பகிர்ந்துள்ளார். அதில் அவர் திருப்பதி கோயிலின் படிக்கட்டுகளில் முழங்காலில் ஏறி தனது காணிக்கையை செலுத்துகிறார். இது தொடர்பாக வீடியோ ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.