இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. பிப்ரவரி 5-ம் தேதி தொடங்கும் இந்த போட்டியில் பங்கேற்க இரு அணிகளும் ஜனவரி 27-ம் தேதி சென்னை வரவுள்ளன. சென்னையில் கொரோனா பெருந்தொற்று அச்சம் நீடித்து வருவதால், இரு அணிகளுக்கும் பாதுகாப்பு நடவடிக்கை துரிதப்படுத்தியதோடு, மூன்று கட்ட கொரோனா பரிசோதனையும் நடக்கவுள்ளது. மற்றும் போட்டி நடக்கும் மைதானத்திற்குள் இரு அணியினரை தவிர வேறு யாருக்கும் அனுமதில்லை என தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
"போட்டி நடக்கும் சேப்பாக்கம் மைதானத்திற்குள் பார்வையாளர்கள், பத்திரிக்கையாளர்கள் என யாருக்கும் அனுமதியில்லை. பூட்டப்பட்ட மைதானத்திற்குள் டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது. பிசிசிஐ உத்தரவு பிறப்பிக்கும் வரை யாரையும் மைதானத்திற்குள் அனுமதிக்க போவதில்லை" என தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தின் (டி.என்.சி.ஏ) செயலாளர் ஆர்.எஸ்.ராமசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து ஆர்.எஸ். ராமசாமி கூறியதாவது:
இரு அணி வீரர்களும் சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள மொத்த அறைகளையும் 'ப்ளாக்' செய்துள்ளோம். அதோடு உயிர் தடுப்பு பாதுகாப்பு முறையை ஓட்டல் முழுவதும் அமலில் உள்ளது. டெஸ்ட் போட்டியுடன் தொடர்புடைய வீரர்கள், பயிற்சியாளர்கள் என அனைவருக்கும் மூன்று கட்ட கோவிட் - 19 சோதனை நடத்தப்படவுள்ளது. பயிற்சிக்கான ஆடுகளங்களும் தயார் நிலையில் உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு டெஸ்ட் போட்டி நடத்துவதற்கு ரூ 2.5 கோடி பிசிசிஐ-க்கு தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் வழங்க வேண்டும். போட்டியைக் காண பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்றால் சுமார் 1 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகின்றது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil