ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசின் இறுதிப்போட்டியில் ரபேல் நடாலை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் செர்பியாவின் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச்சும், 2ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடாலும் மோதினர்.
ஜோகோவிச் ஆட்டத்திற்கு நடாலினால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் ஜோகோவிச் 6-3, 6-2, 6-3 என நேர்செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம், ஆஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிச் ஏழாவது முறையாக பட்டம் வென்றார்.
இதுகுறித்து போட்டி முடிந்த பிறகு பேசிய ஜோகோவிச், "சில பெரிய காயங்களால் உங்கள் கேரியரில் எதிர்பார்க்காத சில சறுக்கல்கள் ஏற்பட்டுவிட்டது. ஆனால், சக வீரர்களுக்கும் சரி, உங்கள் அருகில் இருப்பவர்களுக்கும் சரி, போராட்ட குணம் என்றால் என்னவென்றும், மீண்டு வருவது என்றால் என்னவென்றும் நிரூபித்துவிட்டீர்கள். அதற்காக உங்களுக்கு நன்றி" என்று நடாலை புகழ்ந்து உருக்கமாக தெரிவித்தார்.
முன்னதாக, நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில், பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு), ஜப்பானின் நவோமி ஒசாகா மோதினர். இதில், 7-6 (2) 5-7, 6-4 என்ற கணக்கில் ஆட்டத்தை முடித்து ஒசாகா வென்றார். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பட்டம் வென்ற முதல் ஜப்பானிய வீரர் என்ற பெருமையும் தனதாக்கினார்.