Novak Djokovic Tamil News: ஆஸ்திரேலியாவில் வருகின்ற 17ம் தேதி முதல் 'ஆஸ்திரேலியன் ஓப்பன்' கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் நடைபெற உள்ளது. ஏற்கனவே ஆஸ்திரேலியாவிற்கு வந்துள்ள வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், இப்போட்டியில் பங்கேற்க வந்த உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிச்சின் விசாவை ரத்து செய்துள்ளது ஆஸ்திரேலிய அரசு.
ஜோகோவிச் கொரோனா தடுப்பு நடத்தைகளை பின்பற்றி நாட்டுக்குள் நுழையும் விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை என்றும், அவர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால் தான் அவரை விக்டோரியா மாகாண அரசு தடுத்து வைத்துள்ளது என்றும் ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.
இதனால், 20 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற செர்பியன் டென்னிஸ் வீரர் ஜோகோவிச், தற்போது ஆஸ்திரேலிய ஓப்பனில் பங்கேற்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. முன்னதாக கொரோனா தடுப்பூசி செலுத்திய வீரர்கள் மட்டுமே இந்த தொடரில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஜோகோவிச் அதனை மீற முயன்றுள்ளார்.
மேலும், தனக்கு உடல் ரீதியாக பிரச்சினைகள் இருப்பதால், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என தெரிவித்துள்ள அவர், அதற்கான மருத்துவ அனுமதியுடன் ஆஸ்திரேலிய ஓப்பனில் கலந்துக்கொள்ள விசா பெற்றிருக்க வேண்டும். ஆனால் தவறான விசா பெற்றுவிட்டு, தன்னை உள்ளே அனுமதிக்க வேண்டும் என ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதனால் ஜோகோவிச்சை, நடால் போன்ற முன்னணி வீரர்கள் சாடியுள்ளனர். இது தற்போது புதிய சர்ச்சையாக வெடித்துள்ளது. ஜோகோவிச் இதுபோன்ற சர்ச்சையில் சிக்குவது ஒன்றும் முதல் முறையல்ல. இப்படி அவர் பல சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அதில் 5 பெரும் சர்ச்சையை இங்கு பார்க்கலாம்.
தொற்று பரவலின் போது சுற்றுப்பயணம் ஏற்பாடு
கடந்த 2020ம் ஆண்டு கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது, நோவக் ஜோகோவிச் அட்ரியா சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்தார். இதில் கலந்து கொண்ட வீரர்களில் ஒருவர் பின் ஒருவராக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது பெரும் சர்ச்சை கிளப்பிய நிலையில், ஜோகோவிச்சை பலரும் கடுமையாக சாடி இருந்தனர்.
தீபிகா படுகோனுடன் டேட்டிங்
நோவாக் ஜோகோவிச் கடந்த 2014ம் ஆண்டு தனது சிறுவயது காதலியான ஜெலினாவையே திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு தற்போது 2 குழந்தைகள் உள்ளனர். ஆனால் கடந்த 2019ம் ஆண்டு ஜோகோவிச் தவறான உறவு வைத்திருந்ததால் கனவன் - மனைவி பிரியவுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தன. மேலும், இந்திய நடிகை தீபிகா படுகோன், செர்பியன் பாப் ஸ்டார் நடாஷா பெக்வாலாக் உள்ளிட்டோருடன் அவர் டேட்டிங் செய்து வந்ததாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
நடுவரை தாக்கிய ஜோகோவிச்
ஜோகோவிச் பொதுவாக அதிக முன்கோபம் கொண்டவராக அறியப்படுகிறார். இதை அவர் பல முறை டென்னிஸ் களத்தில் வெளிப்படுத்தியும் இருக்கிறார். சில நேரங்களில் கோபத்தின் உச்சிக்கே சென்று விடும் அவர் தனது டென்னிஸ் பேட்டை உடைத்து கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்தாண்டு நடந்த ஒரு ஆட்டத்தில் களமாடிய ஜோகோவிச், லைன் நடுவராக நின்றிருந்த பெண்மணியை பந்தால் தாக்கினார். இதனால், அந்த பெண்மணி மூச்சுவிடவே திணறினார். இது அப்போது பெரும் பரபரப்பை கிளப்பியது. இதனால், ஜோகோவிச் தொடரில் இருந்து அதிரடியாக தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
ஜோகோவிச்சின் கழிவறை யுத்தி
டென்னிஸ் போட்டி நடந்து கொண்டிருக்கும்போதே பல முறை கழிவறைக்கு செல்லும் வழக்கத்தை கொண்ட வீரராக ஜோகோவிச் இருக்கிறார். கழிவறை செல்லும் அவர், அங்கு தனது கோபத்தை வெளிப்படுத்தி கழிவறையை உடைத்து நாசம் செய்துவிடுவார் என்று சர்ச்சைகள் எழுந்தும் உள்ளது
ஆனால் அப்படி அவர் கழிவறைக்கு சென்ற பிறகு விளையாடிய போட்டிகளில் 83.33 சதவீதம் வெற்றியை பெற்றுள்ளார் என்பது ஆச்சரியம் தரும் விஷயம்.
ஜோகோவிச்சை படுக்கைக்கு அழைத்த மாடல் அழகி
கடந்த 2021ம் ஆண்டு செர்பியன் மாடல் அழகியான நடாலிஜா ஸ்கேகிக், புகழ்பெற்ற டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சை படுக்கைக்கு வருமாறு செய்து, அதனை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும் என தனக்கு தெரிவிக்கப்பட்டது என்றும், இதற்காக தனக்கு ரூ.50 லட்சம் பணம் மற்றும் இலவச இன்ப சுற்றுலாவும் அனுப்பி வைக்க டீல் பேசப்பட்டது என்றும் ஒரு பத்திரிக்கையிடம் தெரிவித்தார். ஆனால், இந்த ஒப்பந்தங்களை தான் ஏற்கவில்லை என்றும் தெரிவித்து இருந்தார்.
மாடல் அழகி நடாலிஜா ஸ்கேகிக் தானாக முன் வந்து இப்படி கூறியது அப்போது பெரும் பேசுப்பொருளானது. மேலும், இது குறி த்து பல கோணங்களில் விசாரணையும் விவாதங்களும் அரங்கேறின.
இப்படி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்த ஜோகோவிச் மாசுபட்ட நீரை குணப்படுத்தும் நீராக மாற்றுவது பற்றிய கருத்து, தனிமைப்படுத்தப்படும் காலத்தை குறைப்பது பற்றி பேசியது என இன்னும் பல சர்ச்சைகளில் அவர் சிக்கியுள்ளார்.
தற்போது அவர் மருத்துவ ரீதியாக சிக்கியுள்ளார். அவருக்கு பொதுவாக ஆங்கில மருத்துவத்தில் உடன்பாடு இல்லை என்ற பேச்சுக்கள் உள்ளன. ஸ்பானிஷ் பயிற்சியாளர் பீபீ -யுடன் சேர்ந்து இயற்கை மருத்துவத்தில் நாட்டம் ஏற்பட்டதாகவும், இதனால் தான் அவர் கொரோனா தடுப்பூசியை செலுத்த மறுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.