அமெரிக்க ஓபன் டென்னிஸில் இன்று நடக்கவுள்ள இறுதிப் போட்டியில் ஜோகோவிச், ஜூவான் மார்ட் டின் டெல் போட்ரோ ஆகியோர் மோதுகின்றனர்.
ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற அரை இறுதி ஆட்டம் ஒன்றில் முதல் நிலை வீரரும் நடப்பு சாம்பியனுமான ஸ்பெயினின் ரபேல் நடால், 3-ம் நிலை வீரரான அர்ஜென்டினாவின் ஜூவான் மார்ட்டின் டெல் போட்ரோவை எதிர்த்து விளையாடினார். இதில் அபாரமாக விளையாடிய மார்ட்டின் டெல் போட்ரோ முதல் செட்டை 7-6 (7-3) என கைப்பற்றினார்.
முதல் செட்டில் 4-3 என முன்னிலையில் இருந்த போது நடாலுக்கு வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் 2-வது செட்டை 2-6 என இழந்தார். இதைத் தொடர்ந்து காயத்தின் தன்மை அதிகரித்ததால் போட்டியில் இருந்து நடால் விலகினார். இதனால் மார்ட்டின் டெல் போட்ரோ இறுதிப் போட்டிக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டது.
2009-ம் ஆண்டு அமெரிக்க ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற மார்ட்டின் டெல் போட்ரோ இம்முறை இறுதிப் போட்டியில் 6-ம் நிலை வீரரும் இரு முறை சாம்பியனுமான செர்பியாவின் ஜோகோவிச்சுடன் மோதுகிறார். ஜோகோவிச் தனது அரை இறுதியில் 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட்டில் 21-ம் நிலை வீரரான ஜப்பானின் நிஷி கோரியை எளிதாக வீழ்த்தினார். ஜோகோவிச்சும், மார்ட்டின் டெல் போட்ரோவும் இதுவரை 18 முறை நேருக்கு நேர் மோதி உள்ளனர். இதில் ஜோகோவிச் 14 முறை வெற்றி பெற்றுள்ளார். இதனால் இம்முறையும் அவரே ஆதிக்கம் செலுத்தக்கூடும் என கருதப்படுகிறது.