கிறிஸ்ட்சர்ச்சில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும், நியூசிலாந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றியது.
இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 242 ரன்களும், நியூசிலாந்து 235 ரன்களும் எடுத்தன. 7 ரன்கள் முன்னிலையுடன் ஓரளவு நம்பிக்கையுடன் இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய பேட்ஸ்மேன்கள், 'அம்மாட்ட போகணும்' மோடுக்கு வந்தார்களோ என்னவோ, வெறும் 124 ரன்களுக்கு சுருண்டார்கள். நியூஸி.,யும் எளிதாக வென்றது.
வில்லியம்சன் அவுட் ஆனதும், விராட் அப்படி செய்திருக்க கூடாது: வெடித்த சர்ச்சை வீடியோ
போட்டிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கோலி, "ஒட்டு மொத்தமாக நாங்கள் சிறப்பாக வளையாடவில்லை. அணியாக இருந்தாலும், பேட்டிங் வரிசை என்றாலும் நாங்கள் இணைந்தே பொறுப்பை ஏற்றுக் கொள்வோம்.
எந்தவொரு வீரருக்கும் அணியில் நிரந்தரமாக இடம் உண்டு என்பதை நான் பார்க்கவில்லை. அணியில் இப்படி ஒரு கொள்கையைத்தான் நாங்கள் உருவாக்கி வைத்திருக்கிறோம். வீரர்கள் பொறுப்பை ஏற்றுக் கொண்டு கடினமாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறார்கள்" என்றார்.
இந்நிலையில், இத்தோல்வி குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், விமர்சகர்கள் தங்கள் கருத்துகளை சற்று காட்டமாகவே பதிவிட்டு வருகின்றனர்.
முன்னாள் டெஸ்ட் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் தனது ட்விட்டர் பதிவில், "இந்திய அணியால் ஒரு தேவையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் போனது மிகவும் அதிருப்திக்கு உள்ளாக்கிவிட்டது" என்று குறிப்பிட்டுள்ளார்.
கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்ளே, "முதல் டெஸ்டில் இஷாந்தின் அபார பவுலிங்கும், இரண்டாவது டெஸ்ட்டில் பும்ராவின் ஆக்ரோஷ பவுலிங்கும் அணிக்கு கைக்கொடுத்தும், நியூசிலாந்து அதை கடந்து வந்துவிட்டது" என்று குறிப்பிட்டுள்ளார். இந்திய அணியின் ஓப்பனிங் தடுமாற்றம் குறித்தும் விமர்சித்துள்ளார்.
ஸ்விங் பந்துவீச்சாளர்களின் தேவை எந்தளவுக்கு முக்கியத்துவம் என்பதே இந்த சீரிஸில் இந்திய அணியின் படிப்பினை என்று பதிவிட்டுள்ளார் சஞ்சய் மஞ்சரேக்கர்.
இவ்வளவு சூதானமான வெற்றியை பதிவு செய்த பிறகும் நியூசிலாந்து கடைபிடித்த அமைதியையும், பொறுமையையும் நாம் பாராட்டியே ஆக வேண்டும் என்று பதிவிட்டு, மறைமுகமாக இந்திய கேப்டன் கோலியின் ஆக்ரோஷத்தை விமர்சித்துள்ளார் முன்னாள் வீரர் பிஷன் சிங் பேடி.
இத்தொடரில் இந்தியா கலந்து கொண்டது அவ்வளவே. பேட்டிங்கும், நியூசிலாந்தின் லோ பேட்டிங் ஆர்டரை குலைக்கும் திறனும் இல்லாத காரணத்தால், இந்தியா சரிவை சந்தித்து இருக்கிறது என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இனி என்ன சொல்லி என்ன... ஜோலி முடிஞ்சு போச்சு!! அம்புட்டு தான்!!
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்.