/indian-express-tamil/media/media_files/2025/02/24/hSt8OlDHC6fF6mDFk6BC.jpg)
நியூசிலாந்து vs வங்கதேசம், லைவ் கிரிக்கெட் ஸ்கோர், சாம்பியன்ஸ் டிராபி 2025
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ராவல்பிண்டி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 2:30 மணி முதல் தொடங்கி நடந்து வரும் 6-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - வங்கதேசம் அணிகள் மோதி வருகின்றன.
ஆங்கிலத்தில் படிக்கவும்: New Zealand vs Bangladesh LIVE Cricket Score, Champions Trophy 2025
டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங் - வங்கதேசம்
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் சாண்ட்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, வங்கதேசம் முதலில் பேட்டிங் ஆடியது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக தன்சித் ஹசன் - கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ ஜோடி களமாடினர். அணிக்கு அதிரடியான தொடக்கம் கொடுக்க நினைத்த இந்த ஜோடியில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியை பறக்க விட்ட தன்சித் ஹசன் 24 ரன்னில் அவுட் ஆனார்.
அடுத்து வந்த மெஹிதி ஹசன் மிராஸ் (13 ரன்), தௌஹித் ஹிரிடோய் (7 ரன்), முஷ்பிகுர் ரஹீம் (2 ரன்), மஹ்முதுல்லா (4 ரன்) ஆகிய வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினர். லோ-ஆடரில் களமாடிய ஜாக்கர் அலி களத்தில் இருந்த கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோவுடன் ஜோடி அமைத்தார். இந்த ஜோடி அடுத்த 11 ஓவர்களுக்கு விக்கெட் சரிவை மீட்டு இருந்தது.
இதனிடையே, தனது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ அரைசதம் அடித்து அசத்தினார். 110 பந்துகளில் 9 பவுண்டரிகளை விரட்டியிருந்த அவர் 77 ரன்னுக்கு அவுட் ஆனார். அவருக்குப் பின் வந்த ரிஷாத் ஹொசைன் 26 ரன்னுக்கும், தஸ்கின் அகமது 10 ரன்னுக்கும் அவுட் ஆகி வெளியேறினர்.
இறுதியில், 50 ஓவர்கள் முடிவில் நஹித் ராணா (0), முஸ்தாபிசுர் ரஹ்மான் (3 ரன்) களத்தில் இருக்க, 9 விக்கெட்டை இழந்த வங்கதேச அணி 236 ரன்கள் எடுத்தது. சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணி தரப்பில், மைக்கேல் பிரேஸ்வெல் 4 விக்கெட்டையும், வில்லியம் ஓர்ர்கே 2 விக்கெட்டையும், மாட் ஹென்றி, கைல் ஜேமிசன் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியுசிலாந்து அணியில், வில் யங் ரன் கணக்கை தொடங்காமலே வெளியேறிய நிலையில், அடுத்து வந்த வில்லியம்சன் 5 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். இதனையடுத்து 3-வது விக்கெட்டுக்கு இணைந்த கான்வே – ரச்சின் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தனர். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்தபோது, கான்வே 45 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 30 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்,
அடுத்து வந்த லத்தம், ரச்சின் ரவீந்திராவுடன் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுபக்கம், சற்று அதிரடியாக விளையாடிய ரச்சின் அரைசதம் கடந்து அசத்தினார். 30 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி, 3 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களை கடந்தது. இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 129 ரன்கள் சேர்த்தபோது, அரைசதம் கடந்த லத்தம் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் சதம் அடித்து அசத்திய ரச்சின் ரவீந்திரா, 105 பந்துகளில் 12 பவுண்டரி 1 சிக்சருடன் 112 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
46.1 ஓவர்களில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிலிப்ஸ் 21 ரன்களுடனும், பிரேஸ்வெல் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி பி.பிரிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. தனது கடைசி லீக் போட்டியில் மார்ச் 2-ந் தேதி இந்திய அணியுடன் நியூசிலாந்து அணி மோத உள்ளது.
இரு அணி வீரர்கள் பட்டியல்:
நியூசிலாந்து: வில் யங், டெவோன் கான்வே, கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா, டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), மாட் ஹென்றி, கைல் ஜேமிசன், வில்லியம் ஓர்ர்கே.
வங்கதேசம்: தன்சித் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), மெஹிதி ஹசன் மிராஸ், தௌஹித் ஹிரிடோய், முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), மஹ்முதுல்லா, ஜாக்கர் அலி, ரிஷாத் ஹொசைன், தஸ்கின் அகமது, நஹித் ராணா, முஸ்தாபிசுர் ரஹ்மான்
ஆங்கிலத்தில் படிக்கவும்: New Zealand vs Bangladesh LIVE Cricket Score, Champions Trophy 2025
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி (50 ஓவர்கள்) பாகிஸ்தான் மற்றும் துபாயில் நேற்று முன்தினம் புதன்கிழமை (பிப்.19) முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது. ஐ.சி.சி ஆடவர் கிரிக்கெட் உலகக் கோப்பையின் 2023 முடிவுகள் அடிப்படையில் டாப் 8 இடங்களை பிடித்த அணிகள் இந்தத் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.
ஆங்கிலத்தில் படிக்கவும்: New Zealand vs Bangladesh LIVE Cricket Score, Champions Trophy 2025
முன்னாள் சாம்பியன்கள் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தகுதி பெறாத நிலையில், இத்தொடரில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும். சாம்பியன்ஸ் டிராபியில் ஒவ்வொரு ஆட்டமும் மிகவும் முக்கியமானது. ஒன்றில் தோற்றாலும் அரைஇறுதிக்குள் நுழையும் வாய்ப்புக்கு பெரும் பின்னடைவு ஏற்படும். அதனால், ஒவ்வொரு அணியும் கடுமையாக போராடும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.