பாகிஸ்தான், யாரும் கணிக்க முடியாத கிரிக்கெட் அணி என்பது மீண்டும் நேற்று நிரூபணம் ஆகியுள்ளது. உலகக் கோப்பைத் தொடரில் தோல்வியே சந்திக்காமல் நடைபோட்ட நியூசிலாந்துக்கு, முதல் தோல்வியை அன்பளிப்பாக கொடுத்துள்ளது பாகிஸ்தான் அணி.
எட்ஜ்பேஸ்டன் ஸ்டேடியம் நேற்று பரபரப்பாகவே காணப்பட்டது. காரணம், பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு இது வாழ்வா, சாவா ஆட்டம். மைதானத்தில் 75 சதவிகித பாகிஸ்தான் ரசிகர்கள் குழுமியிருந்தனர். பாகிஸ்தானுக்கு இங்கிலாந்து மண்ணில் இவ்வளவு ரசிகர்கள் திரண்டு வந்து ஆதரவு தருவார்கள் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்த தொடர் முழுவதும் பாக்., போட்டிகளில் அந்நாட்டு ரசிகர்கள் அலை அலையாய் வந்து ஆதரவு கொடுப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.
டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக கப்தில், காலின் மன்ரோ களமிறங்கினர். பாகிஸ்தான், வலது கை ஆஃப் பிரேக் ஸ்பின்னரான முகமது ஹபீஸை வைத்து பவுலிங்கை தொடக்கியது.
ஆனால், அமீர் வீசிய இரண்டாவது ஓவரின், சுமாரான முதல் பந்தில் மார்ட்டின் கப்தில் 5 ரன்களில் போல்டாக, அவர் முகத்தில் ஏகப்பட்ட ஏமாற்றம். உண்மையில், அது நல்ல டெலிவரியாக இருந்திருந்தால்,அவரே மகிழ்ச்சியுடன் சென்றிருப்பார். ஆனால், விக்கெட் கொடுக்கத் தேவையில்லாத பந்தில், மிகப்பெரிய விக்கெட்டை இழந்தது நியூஸி., பாகிஸ்தான் பாசிட்டிவ் வைப்ரேஷன் அந்த இடத்திலேயே ஒர்க் அவுட் ஆக ஆரம்பித்தது.
தொடர்ந்து கேப்டன் வில்லியம்சன் களமிறங்கினார்.
இங்கிலாந்தில் கடைசி 11 ஒருநாள் போட்டிகளில் வில்லியம்சன் அடித்த ரன்கள் இவை,
93, 118, 90, 50, 100, 87, 57, 40, 79*, 106* & 148
பாகிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் வில்லியம்சன் அடித்த ரன்கள்
18* போட்டிகள் | 898 ரன்கள் | ஆவரேஜ் 56.13 | ஸ்டிரைக் ரேட் 85.28 | 3 X 100s | 4 X 50s
இப்படிப்பட்ட பிரம்மாண்ட தன்னம்பிக்கை கொண்ட வில்லியம்சன் களமிறங்கியபோது எக்ஸ்பர்ட்ஸ் சொன்ன வார்த்தைகள் இவை, 'இன்றும் வில்லியம்சன் மீண்டும் சதம் அடிப்பார்' என்று.
இதற்கிடையில், அமீர் ஓவரில், அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை காலின் மன்ரோ பறக்கவிட, ஷஹீன் அப்ரிடியை பந்து வீச அழைக்கப்பட்டார்.
இந்தியாவுக்கு எதிராக ஏன், நாம் இவரை அணியில் சேர்க்கவில்லை என்று வருத்தப்பட்டு, பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ரஸ் அகமது நேற்று இரவு நிச்சயம் வேதனை அடைந்திருப்பார். அவர் மட்டுமல்ல.. கிரிக்கெட்டை விரும்பும் ஒட்டுமொத்த பாகிஸ்தான் ரசிகர்களும், அதைத் தான் நேற்று நினைத்து புலம்பியிருப்பார்கள்.
அப்படிப்பட்ட அற்புதமான ஸ்பெல் நேற்று ஷஹீனிடம் இருந்து. பந்துவீச வந்த இரண்டாவது ஓவரிலேயே மன்ரோவை 12 ரன்களில், எட்ஜ் செய்து வெளியேற்றினார். தொடர்ந்து சீனியர் ராஸ் டெய்லரை 3 ரன்னிலும், டாம் லாதமை 1 ரன்னிலும், ஷஹீன் அடுத்தடுத்து வெளியேற்ற, அதிர்ந்து போனது நியூசிலாந்து.
கேப்டன் வில்லியம்சனை எதிரில் நிற்கவைத்து, நியூசிலாந்து நடுகளத்தை நாசமாக்கினார் ஷஹீன். இருப்பினும் அதன் பிறகு களமிறங்கிய ஜேம்ஸ் நீஷம் 97 ரன்களும், கோலின் டி கிராண்ட்ஹோம் 64 ரன்களும் குவித்தனர். டாப் வரிசையும், நடு வரிசையும் சரிந்த பிறகு, பின் நடு வரிசை வீரர்கள் இந்தளவுக்கு சிறப்பாக விளையாடியது உண்மையில் மெச்சத்தக்க வேண்டிய ஒன்றாகும். இதற்கிடையில், கேப்டன் வில்லியம்சனை 41 ரன்களில் ஷதப் கான் வெளியற்ற, 50 ஓவர்கள் முடிவில், நியூசிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்தது.
ஷஹீன் அப்ரிடி, 10 ஓவர்கள் வீசி 28 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இதில், மூன்று மெய்டன் ஓவர்களும் அடங்கும்.
மிக மிக சுமாரான இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில், தொடக்கம் சுமாராகவே இருந்தது. இமாம்-உல்-ஹக் 19 ரன்களில், பெர்கியூசன் பந்தில் கேட்ச்சாக, பக்கர் சமான் 9 ரன்களில் போல்ட் ஓவரில் வெளியேறினார். இதனால், பாகிஸ்தான் 44-2 என்ற நிலையில் இருந்தது. இங்கு தான் அவர்கள் 'கணிக்க முடியாத அணி' என்ற பெயரை சம்பாதிக்கின்றனர்.
மூன்றாவது வீரராக களமிறங்கிய பாபர் அசம் மீது நிறைய எதிர்பார்ப்பு இருந்தது. ஆகையால், அதிக அழுத்தமும் அவருக்கு இருந்தது. போதாத குறைக்கு, அவரை பாகிஸ்தானின் விராட் கோலி என்று அழைப்பதால், ஏதாவது செய்தாக வேண்டிய நெருக்கடியிலேயே அவர் இருந்தார். அதுவும், இந்தப் போட்டியில் பாகிஸ்தான் தோற்றால், உலகக் கோப்பையில் இருந்து வெளியேற வேண்டியது தான் என்று இக்கட்டான நிலையில்...
ஆனால், அவர் ரசிகர்கள் ஏமாற்றவில்லை. தன்னையும் ஏமாற்றவில்லை. நியூசிலாந்தில் நேற்று கேப்டன் வில்லியம்சன் உட்பட எட்டு பேர் பந்து வீசினார்கள். அவர்கள் அனைவரையும் திறம்பட சமாளித்த பாபர் அசம் அரைசதம் கடந்தார்.
முன்னாள் கேப்டன் முகமது ஹபீஸ் 32 ரன்களில் வெளியேறினாலும், ஹரிஸ் சோஹைல் மிக நேர்த்தியாக விளையாடி, பாபர் அசமுக்கு கம்பெனி கொடுத்தார். இதனால், சற்று நெருக்கடி தணிந்து விளையாடிய அடித்த பாபர், 124 பந்துகளில் தனது முதல் உலகக் கோப்பை சதத்தை பதிவு செய்தார்.
இதன் மூலம், மிகக் குறைந்த வயதில் உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்காக சதம் விளாசிய இரண்டாவது வீரர் எனும் பெருமையை பாபர் பெற்றார்.
உலகக் கோப்பையில் சதமடித்த பாகிஸ்தான் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விவரம்:
102* இம்ரான் கான் v இலங்கை, லீட்ஸ் 1983
103* ஜாஹீர் அப்பாஸ் v நியூசிலாந்து, நாட்டிங்கம் 1983
103 ஜாவேத் மியான்தத் v இலங்கை, சிந்த் 1987
100 சலீம் மாலிக் v இலங்கை, பைசல்பாத் 1987
101* பாபர் அசம் v நியூசிலாந்து, பிர்மிங்கம் 2019
நான்காவது விக்கெட்டுக்கு 126 ரன்கள் சேர்த்த பாபர் - ஹரிஸ் சோகைல் ஜோடி மூலம், 49.1வது ஓவரில், 4 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் வெற்றிப் பெற்றது. இதன் மூலம் உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் தொடர்ந்து நீடிக்கிறது. பாபர் அசம் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
பாபர் அசமின் சதத்தை பாக்., தேசமே கொண்டாடி வரும் நிலையில், அதற்கு இணையாக, அல்லது அதற்கு ஒரு படி மேல் குறிப்பிடப்பட வேண்டிய, பாராட்ட வேண்டிய இருவர் ஷஹீன் மற்றும் ஷோஹைல் ஆவர். நியூசிலாந்தின் மிடில் ஆர்டரை ஷஹீன் சீர் குலைத்ததால் தான், அவர்களால் கடைசி வரை பெரிய ஸ்கோர் அடிக்கவே முடியவில்லை. அதே போல், இக்கட்டான தருணத்தில், முகமது ஹபீஸ் அவுட்டான பிறகு களமிறங்கிய சோஹைல் 76 பந்துகளில் 68 ரன்கள் வரை அடிக்கவில்லை எனில், பாபர் அசம் இவ்வளவு நிதானமாக நின்று ஆடியிருக்கவே முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் அடுத்ததாக வங்கதேசம் மற்றும், ஆப்கன் அணிகளை எதிர்கொள்ளவிருக்கிறது. இவ்விரண்டு போட்டிகளிலும் பாக்., வென்றாக வேண்டும். அதுவும் அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் ஜெயிக்க வேண்டும். அப்படி வெல்லும் பட்சத்தில், அவர்ககள் 11 புள்ளிகளுடன் லீக் போட்டிகளை நிறைவு செய்வார்கள். அதன்பிறகும், மற்ற அணிகளின் முடிவுகளை பொறுத்தே, பாக்., அரையிறுதிக்குள் நுழையுமா என்பதை அறிய முடியும்.
நியூசிலாந்தைப் பொறுத்தவரை, அடுத்ததாக ஆஸ்திரேலியாவையும், இங்கிலாந்தையும் எதிர்கொள்கிறது. இதில், ஒரு போட்டியை வென்றால் கூட, அரையிறுதிக்கு முன்னேறிவிடும்.
இங்கு மற்றொரு செய்தியை பதிவு செய்ய விரும்புகிறேன். 1992ம் ஆண்டு, இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி உலகக் கோப்பையை வென்றது. அப்போதும் இதே ரவுண்ட் ராபின் முறையில் தான் உலகக் கோப்பை நடத்தப்பட்டது. அந்த 1992 உலகக் கோப்பைக்கும், 2019 உலகக் கோப்பைக்கும் இப்போது வரை சென்றுக் கொண்டிருக்கும் அந்த ஒற்றுமையை பார்ப்போமா...
1992
முதல் போட்டி - பாகிஸ்தான் தோல்வி
2வது போட்டி - வெற்றி
3வது போட்டி - வாஷ் அவுட்
4வது போட்டி - தோல்வி
5வது போட்டி - தோல்வி
6வது போட்டி - வெற்றி
7வது போட்டி - வெற்றி
2019
முதல் போட்டி - பாகிஸ்தான் தோல்வி
2வது போட்டி - வெற்றி
3வது போட்டி - வாஷ் அவுட்
4வது போட்டி - தோல்வி
5வது போட்டி - தோல்வி
6வது போட்டி - வெற்றி
7வது போட்டி - வெற்றி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.