ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, தர்மசாலா, ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை மற்றும் புனே ஆகிய 10 நகரங்களில் நடக்கிறது.
ICC World Cup 2023 Tamil News: 10 அணிகள் பங்கேற்கும் 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் வருகிற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்கதேசம், நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. ஜிம்பாப்வேயில் நடந்து வரும் தகுதி சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் எஞ்சிய 2 அணிகளாக உலகக் கோப்பை போட்டியில் கலந்து கொள்ளும்.
Advertisment
இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் 'டாப்-4' இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். இந்நிலையில், ஒருநாள் உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) நேற்று (செவ்வாய்கிழமை) வெளியிட்டது. இதன்படி, அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளது.
இந்திய அணியின் முதல் ஆட்டம், அக்டோபர் 8-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. அதே நேரத்தில், ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அக்டோபர் 15-ம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.
அரை இறுதிப் போட்டிகள் எங்கே நடக்கும்?
Advertisment
Advertisement
ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, தர்மசாலா, ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை மற்றும் புனே ஆகிய 10 நகரங்களில் நடக்கிறது. அனைத்து மைதானங்களும் தலா 5 போட்டிகளை நடத்தும். அதே வேளையில், ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் 4 லீக் ஆட்டங்கள் மட்டுமே நடைபெறும். பாகிஸ்தான் இரண்டு மற்றும் நியூசிலாந்து ஒரு போட்டியில் விளையாட உள்ளது.
அரை இறுதிப் போட்டிகளை பொறுத்தவரை, மும்பை மற்றும் கொல்கத்தாவில் தலா ஒரு போட்டிகள் நடக்கிறது. இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நடக்கிறது.
சென்னையில் ஏன் அரைஇறுதிப் போட்டி இல்லை?
இந்நிலையில், ஒருநாள் உலகக் கோப்பை தொடர் அரைஇறுதி போட்டிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானம் ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்பதற்கான காரணம் தெரியவந்துள்ளது. வழக்கமாக அக்டோபர் மாத இறுதியில் இருந்து டிசம்பர் நடுப்பகுதி வரை வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருக்கும் என்பதால், போட்டியை நடத்த முடியாமல் போகும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ) சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மூத்த அதிகாரி ஒருவர் பேசுகையில், 'அக்டோபர் 20 ஆம் தேதிக்குப் பிறகு பருவமழை பெய்யும். மேலும் நவம்பரில் புயல் மற்றும் சூறாவளிகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன, அதனால்தான் எங்கள் போட்டிகள் அனைத்தும் முன்னதாகவே திட்டமிடப்பட்டுள்ளன' என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil