பாரிஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க திருச்சி திருவெறும்பூரைச் சேர்ந்த தடகள வீராங்கனை சுபா வெங்கடேசன் தேர்வு செய்யப்பட்டு உள்ளதற்கு பெற்றோர்களும் உறவினர்களும் பெருமிதம் அடைந்து உள்ளனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டியானது ஜூலை 26 ஆம் தேதி தொடங்க உள்ளது.இந்தியா சார்பில் தடகள பிரிவில் 28 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து பேர் தகுதி பெற்றுள்ளனர். கடந்த ஒலிம்பிக் போட்டியில் திருச்சி திருவெறும்பூரைச் சேர்ந்த சுபா வெங்கடேசன் பங்கேற்றார்.
அதேபோல் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் தடகளப் பிரிவில் சுபா வெங்கடேசன் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார்.இதற்கான அறிவிப்பு வெளியான நிலையில் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெருமிதம் அடைந்துள்ளனர்.
இது குறித்து அவரது உறவினார்கள் கூறியதாவது.
சுபா வெங்கடேசன் நிச்சயம் இந்த முறை தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கும் வகையில் தனது திறனை வெளிப்படுத்தி பதக்கம் வெல்வார் என்ற நம்பிக்கை உள்ளது.
எளிமையான குடும்பத்தில் பிறந்த எனது மகள் சுபா வெங்கடேசன் தனது தொடர் முயற்சியால் இந்த அளவிற்கு உயர்ந்துள்ளார்.
கடந்த முறை அவர் பதக்கம் பெற இயலாமல் போனது. ஆனால் இந்த முறை தொடர் முயற்சிகளும் உழைப்பாலும் நிச்சயம் தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்ப்பார்.
தமிழக முதல்வர் அவருக்கு பணி ஆணை வழங்கிய போது அவரைப் பாராட்டியதோடு அடுத்த முறை பதக்கம் வெல்வது குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று ஊக்கப்படுத்தினார்.
அவர் அளித்த ஊக்கம் மற்றும் பயிற்சியாளர்கள் அளித்த பயிற்சி, எங்களுடைய பிரார்த்தனை, ஊர் மக்களுடைய எதிர்பார்ப்பு இவை அனைத்தும் சுபா வெங்கடேசன் பதக்கம் வெல்ல உறுதுணையாக இருக்கும் என நம்புகிறோம்.
அவர் இந்தியாவிற்கு தமிழகத்திற்கும் குறிப்பாக திருச்சி மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையில் அவர் தனது பங்களிப்பை வெளிப்படுத்துவார் என தெரிவித்தனர்.
க.சண்முகவடிவேல்