இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பா.ஜ.க எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் பாலியல் தொல்லை கொடுத்தாக ஒலிம்பிக் மற்றும் சர்வதேச அளவில் இந்தியாவிற்கு பதக்கம் வென்று பெருமை சேர்ந்த வீராங்கனைகள் சாக்சி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்டோர் புகார் தெரிவித்து அவர் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ், ஆம் ஆத்மி, தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் வீராங்கனைகளின் புகாரை உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
கூட்டமைப்பின் தலைவரும், பா.ஜ.க எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது 7 வீராங்கனைகள் பாலியல் புகார் கொடுத்தனர். இதில் 2 வீராங்கனைகளின் புகார் மீது டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த புகார் மனுவில் ரெஸ்டாரண்ட், போட்டிகள், வார்ம்-அப்கள் மற்றும் டெல்லியில் உள்ள இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு (WFI) அலுவலகம் எனப் பல்வேறு சந்தர்பங்களில் பிரிஜ் பூஷன் பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
புகார்தாரர்கள் இருவரும், சுவாச சோதனை என்று கூறி தகாத முறையில் மற்றும் பாலியல் ரீதியாகத் அத்துமீறி பிரிஜ் பூஷன் செயல்பட்டதாக எப்.ஐ.ஆரில் தெரிவித்துள்ளனர். பா.ஜ.க எம்.பியான பிரிஜ் பூஷன் செல்வாக்கு உள்ள ஒரு நபர் ஆவார். அவரின் செல்வாக்கைப் பயன்படுத்தி தங்கள் வாழ்க்கையில் தடை ஏற்படுத்திவிடுவாரோ என்ற அச்சத்தில் முன்பு இது குறித்து பேசவில்லை என வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர்.
வழக்குப் பதிவு செய்யப்பட்ட முதல் மல்யுத்த வீராங்கனையின் புகாரில், சிங்கிற்கு எதிராகக் 5 பாலியல் துன்புறுத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 2016-ல் போட்டியின் போது ஹோட்டலில் இருந்தபோது, சிங் அவரை தன் டேபினுக்கு வரச் சொல்லி அவளின் மார்பகத்தையும் வயிற்றையும் தொட்டதாகக் கூறியுள்ளார். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, தனக்குச் சாப்பிட மனமில்லை, தூக்கம் கலைந்து, மன உளைச்சலுக்கு ஆளானதாகக் குறிப்பிட்டுள்ளார். 2019 போட்டியின் போதும் சிங் இதே போன்று மற்றொரு போட்டி நடந்த சமயத்தில் நடந்து கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துமீறல்
மேலும், டெல்லியில் உள்ள 21, அசோகா சாலையில் உள்ள சிங்கின் எம்.பி பங்களாவிற்குள் அமைந்துள்ள WFI அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டபோது தன்னை தகாத முறையில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்தாக குற்றஞ்சாட்டியுள்ளார். சிங் அவளது சம்மதம் இல்லாமல் தொடைகள் மற்றும் தோள்பட்டையைத் தொட்டும், சுவாச சோதனை செய்வதாக கூறி மார்பகம், வயிற்றை தொட்டு அத்துமீறியதாகவும் கூறியுள்ளார்.
தொடர்ந்து, 2018-ம் ஆண்டில், ஒரு போட்டியின் போது, பிரிஜ் பூஷன் தன்னை இறுக்கமாக கட்டிப்பிடித்ததாகவும், மற்றொரு போட்டியின் போது பிரிஜ் பூஷனின் கை தனது மார்பகப் பகுதியில் இருந்ததாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

வாக்குமூலம் பதிவு
வழக்குப் பதிவு செய்யப்பட்ட மற்றொரு மல்யுத்த வீராங்கனையின் புகார் மனுவில், 2018-ம் ஆண்டில் தனது அனுமதியின்றி தனது பயிற்சி ஜெர்சியை எடுத்ததாகவும் சுவாச முறை சரிபார்ப்பதாக கூறி மார்பகம் மற்றும் வயிற்றைத் தொட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இது தனக்கு அதிர்ச்சிய அளித்ததாக அவர் கூறியுள்ளார்.
இரண்டாவது சம்பவம் ஒரு வருடம் கழித்து சிங்கின் அசோகா சாலை பங்களாவில் உள்ள WFI அலுவலகத்தில் நடந்ததாக மல்யுத்த வீரர் 2 குற்றம் சாட்டியுள்ளார். சிங் மற்ற வீரர்களை வெளியேறச் சொன்னார், அதைத் தொடர்ந்து அவர் இந்த வீராங்கனையிடம் நெருங்கி வந்ததாகவும், மொபைல் எண் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
புகார் குறித்து கேட்க தொடர்பு கொண்டபோது, மல்யுத்த வீராங்கனைகள் இருவரும் சிங் மீதான புகார்கள் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். இந்த வார தொடக்கத்தில், இந்த இரு மல்யுத்த வீராங்கனைகளும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 161 இன் கீழ் டெல்லி காவல்துறையிடம் தங்கள் வாக்குமூலங்களை பதிவு செய்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“