Advertisment

தமிழனின் வீர விளையாட்டு 'ஓணப்பந்து'

பந்தை கால்களால் திரும்பச் அடிக்கும் போது, ஒருவர் அடித்த பின் அதே அணி வீரர் மீண்டும் அந்த பந்தை அடிக்க முடியாது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஓணப்பந்து விளையாட்டு

ஓணப்பந்து விளையாட்டு

ஓணப்பந்து அல்லது பந்தடி விளையாட்டு என்பது தமிழகத்தின் பழமையான வீர விளையாட்டுகளில் ஒன்றாகும். பொதுவாக ஆண்கள் மட்டுமே விளையாடும் இவ்விளையாட்டு குமரி மாவட்ட பிரபலமான விளையாட்டாகும். இது முறையே 7 வீரர்களைக்கொண்ட இரு அணிகளுக்கிடையே விளையாடப்படும் விளையாட்டாகும். ஒரு அணி கைகளால் பந்தை அடிக்க, எதிரணி பந்தை கால்களால் திருப்பி அடித்து விளையாடப்படுவதாகும்.

Advertisment

ஓணப்பந்து

எருமைத் தோலை எடுத்து அதனுள் தேங்காய் நாரை இறுக்கமாக வைத்து நேர்த்தியாக தைத்து ஓணப்பந்து தயாரிக்கப்படுகிறது. இதற்கென்று குமரி மாவட்டத்தில் பந்து தைப்பவர்கள் உள்ளனர். இது துடுப்பாட்டப் Cricket பந்தை விட சற்று சிறியதாக இருக்கும். ஒரு பந்து சுமார் 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சில இடங்களில் துணியாலும் பந்துகள் செய்யப்பட்டு விளையாடப்பட்டு வருகின்றது.

ஓணப்பந்து மைதானம்

ஓணப்பந்து மைதானம் 25 x 7 மீட்டர் அளவுள்ள நீள் செவ்வக அமைப்பாகும். இதில் அகல வாக்கில் இரண்டு கோடுகள் இடப்பட்டிருக்கும். அவை முறையே தட்டும் கோடு, பவுள் கோடு ஆகும். மண் தரையை சீர்படுத்தி மணல் போன்றவை நீக்கப்பட்ட கட்டாந்தரையை சாலை உருளையால் சமப்படுத்தி பின் மாட்டுச்சாணத்தால் முழுவதும் மெழுகி மைதானம் தயாரிக்கப்படுகிறது. பின் நான்கு மூலைகளிலும் சுமார் 65 அடி உயரமுள்ள நான்கு கமுகு மரங்கள் எல்லைக்கம்பங்களாக நட்டப்படும்.

ஓணப்பந்து மைதானத்தின் ஒரு பக்கம் அடித்தாடும் பக்கம் எனவும் மறு பாகம் தடுத்தாடும் பக்கம் எனவும் அழைக்கப்படும். அடித்தாடும் பக்கத்திலுள்ள இரு கம்பங்களின் நடுவில் 65 அடி உயரத்தில் கயிறு மூலம் பட்டுத்துணி கட்டப்பட்டிருக்கும்.

கட்டங்கள்

இவ்விளையாட்டில் வெற்றி பெற 7 கட்டங்கள் உள்ளன, அவை:

ஒற்றை

இரட்டை

முறுக்கி

தாளம்

காவடி

ஓட்டம் அல்லது நிலை

பட்டம்

ஒரு கட்டத்திற்கு 3 பந்து வீதம் மொத்தம் 21 பந்துகள். தடுப்பாட்டத்தை சமாளித்து 21 பந்துகளையும் சரியான முறையில் செலுத்தும் அணி வெற்றி பெறும். சில இடங்களில் பட்டத்திற்கு மட்டும் பந்துகள் விளையாடுவர்.

இவ்விளையாட்டை விளையாட இரண்டு அணிகள் தேவை. ஒரு அணியில் அணித்தலைவர் உட்பட 7 வீரர்கள் இருப்பர். ஒவ்வொரு வீரருக்கும் 1 முதல் 7 வரையுள்ள ஒவ்வொரு எண் வழங்கப்பட்டிருக்கும். இது வீரர்களின் சட்டையில் தொங்கவிடப்பட்டிருக்கும்.

விளையாடும் முறை

டாஸ் முறையில் எந்த அணி வெற்றிப் பெறுகிறதோ அந்த அணியினர் முதலில் கைகளால் பந்தை அடித்தாட அடித்தாடும் பகுதிக்கு களம் இறங்குவர். எதிரணியினர் அவர்கள் அடிக்கின்ற பந்தை கால்களால் தடுத்தாட தடுத்தாடும் பகுதிக்கு களம் இறங்குவர்.

அடித்தாட்டமும் தடுப்பாட்டமும்

அடித்தாடும் அணியின் முதல் வீரர்(எண் 1) முதலில் பந்தை ஒரு கையில் வைத்துக்கொண்டு அடுத்த கையால் பந்தை ஓங்கி அடித்து எதிரணியை நோக்கி செலுத்த வேண்டும். பந்து எல்கைக்கம்பங்களுக்கு வெளியே செல்லாமலும் பவுள் கோட்டிற்கு வெளியே விழாமலும் செல்ல‌ வேண்டும். எதிரணி வீரர்கள் அதாவது தடுத்தாடுபவர்கள் 7 பேரும் தடுத்தாடும் பக்கத்தின் முன்களத்திலும் பின்களத்திலும் நின்று கொண்டு முதல் வீரர் அடித்த பந்தை திருப்பி கால்களால் செலுத்த வெண்டும்.

எல்லைக்கோட்டிற்கு வெளியே செல்லாமல் நேராக அடித்தாடும் பக்கம் பந்து சென்றால் அடித்தாடுபவர்களும் பந்தை கால்களால் திரும்ப செலுத்துவர். இவ்வாறு மாறி மாறி பந்தை உதைத்து விளையாட வேண்டும். தடுத்தாடுபவர்கள் பந்தை எல்லைக்கோட்டிற்கு வெளியே செலுத்தினாலோ அடித்தாடுபவர்கள் செலுத்திய பந்தை கால்களால் திரும்ப செலுத்த முடியாமல் போனாலோ, முதல் வீரர் முதல் பந்தை வெற்றிகரமாய் முடித்து விட்டு இரண்டாவது பந்துக்கு தகுதி பெறுவார். அடித்தாடுபவர்கள் கால்களால் செலுத்திய பந்தை தடுத்தாடுபவர்கள் கைகளால் அந்தரத்தில் பிடித்து விட்டால் முதல் வீரர் ஆட்டமிழப்பார். பிடிக்கும்போது தவற விட்டால் முதல் வீரர் இரண்டாவது பந்துக்கு தகுதி பெறுவார்.

அடித்தாடுபவர்கள் பந்தை எல்லைக்கோட்டிற்கு வெளியே செலுத்தினாலோ தடுத்தாடுபவர்கள் செலுத்திய பந்தை திரும்ப செலுத்த முடியாமல் போனாலோ முதல் வீரர் ஆட்டமிழப்பார். தடுத்தாடுபவர்கள் செலுத்திய பந்தை அந்தரத்தில் பிடித்து விட்டால் முதல் வீரர் இரண்டாவது பந்துக்கு தகுதி பெறுவார். பிடிக்கத்தவறினால் ஆட்டமிழப்பார்.

இவ்வாறு அடித்தாடுபவர்கள் தொடர்ச்சியாக மூன்று பந்துகளையும் சரியான முறையில் செலுத்தினால் அடித்தாடுபவர்கள் ஒற்றை நிலையிலிருந்து இரட்டை என்ற நிலைக்கு முன்னேறுவர். தொடர்ந்து முதல் வீரர் இரட்டை முதல் பந்தை செலுத்துவார். முதல் வீரர் 1,2,3 இவற்றில் எந்த பந்தில் ஆட்டமிழந்தாலும் இரண்டாவது வீரர் முதல் பந்திலிருந்துதான் விளையாட வேண்டும்.

ஆனால் முதல் வீரர் 3 பந்துகளையும் வெற்றிகரமாக செலுத்தி இரட்டை என்ற நிலைக்கு முன்னேறிய பின் ஆட்டமிழந்தால் இரண்டாவது வீரர் இரட்டை முதல்பந்திலிருந்து ஆட்டத்தை தொடங்குவார். தொடர்ச்சியாக மூன்று பந்துகளையும் சரியாக வீசினால் மட்டுமே ஒவ்வொரு கட்டமாக முன்னேற முடியும்.

விளையாடும்மோது 7 வீரர்களும் ஆட்டமிழந்தால் அடித்தாடுபவர்கள் எந்த கட்டத்தில் விளையாடுகின்றனறோ அந்த நிலையை தக்க வைத்தவாறு தடுத்தாட பக்கம் மாறுவர். எதிரணியினர் அடித்தாட பக்கம் மாறுவர். இவர்களும் ஆட்டமிழக்கும் போது மீண்டும் தடுத்தாடுபவர்கள் தாங்கள் விட்ட நிலையிலிருந்து அடித்தாடுவர்.

இவ்வாறு ஒற்றை, இரட்டை, முறுக்கி, தாளம், காவடி, ஓட்டம் என‌ முன்னேற வேண்டும். ஓட்டம் ஆட்டத்தின் முக்கிய கட்டமாகும். ஓட்டத்திற்கு மட்டும் 3 பந்துகளையும் அடித்தாடும் வீரர் நேரடியாக கால்களால் உதைத்து விளையாட வேண்டும். ஆனால் பந்து மற்ற பந்துகளைப்போல் பவுள் கோட்டினுள் விழுந்துதான் செல்ல வேண்டும். ஓட்டம் 3 பந்துகளையும் தாண்டினால் ஆட்டத்தின் இறுதி கட்டமான‌ பட்டம் என்ற நிலைக்கு முன்னேறுவர். பட்டம் மூன்று பந்துகளையும் தாண்டும் அணி முதற்கட்ட ஆட்டத்தில் 1:1 என்ற கணக்கில் வெற்றி பெற்ற‌ நிலையில் இரண்டாம் கட்ட ஆட்டம் தொடங்கும்.

முதற்கட்ட ஆட்டத்தில் தோல்வியுற்ற‌ அணி இரண்டாம் கட்ட ஆட்டத்தில் முதலில் அடித்தாட களம் இறங்கும். இரு அணிகளும் மீண்டும் ஒற்றை நிலையிலிருந்து ஆட்டத்தை தொடங்கும். இந்த ஆட்டத்தில் முதலில் வென்ற அணி மீண்டும் வென்றால் 2:2 என்ற கணக்கில் அந்த அணி வெற்றி பெறும். ஆட்டம் முடிவு பெறும். முதலில் வென்ற அணி தோல்வியடைந்தால் இரு அணிகளும் தலா ஒரு புள்ளி வென்ற நிலையில் மூன்றாம் கட்ட ஆட்டம் தொடங்கும்.

இரண்டாம் கட்ட ஆட்டத்தில் தோல்வியுற்ற அணி மூன்றாம் கட்ட ஆட்டத்தில் முதலில் அடித்தாட களம் இறங்கும். இந்த ஆட்டத்தில் பட்டத்தை தாண்டும் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்

விதிமுறைகள்

அணி வீரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள எண்களின் வரிசையில்தான் விளையாட வேண்டும். இருப்பினும் முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட ஆட்டம் முடிந்த பின் எண்களை மாற்ற தடையேதுமில்லை.

பந்தை பிடிக்கும்போது பந்தை கைகளால் மட்டுமே பிடிக்க வேண்டும் தரையிலோ உடம்பிலோ படக்கூடாது.

பந்தை கால்களால் திரும்பச் அடிக்கும் போது, ஒருவர் அடித்த பின் அதே அணி வீரர் மீண்டும் அந்த பந்தை அடிக்க முடியாது. பந்தை பிடிக்கும்போது ஒரு வீரர் கையை உயர்த்தினால் அவரே அப்பந்தை பிடிக்கும் தகுதியை பெறுவார். அவர் தான் அதைப் பிடிக்க வேண்டும்.

பந்து வேகமாக வரும்போதே பந்தை திரும்பச்செலுத்த வேண்டும். பந்து வேகம் குறைந்து நின்ற பின் பந்தை அடிக்கக் கூடாது.

பந்தை செலுத்தும்போது பந்து வீரரின் கால் மூட்டின் மேல் பட்டால் அவர் பந்தை தவற விட்டதாகவே கருதப்படும்.

பந்து எல்லை கம்பத்தின் மீது பட்டாலும் எல்லைக்கு வெளியே சென்றதாக கருதப்படும்.

Tamilnadu Sports
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment