பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 28 ஆம் தேதி முதல் கோலாகலமாக நடைபெற்று வந்த 33-வது ஒலிம்பிக் திருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவுற்றது. 206 நாடுகளை சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் இந்த தொடரில் பங்கேற்ற நிலையில், இந்தியா சார்பில் 117 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இந்தியாவுக்கு 1 வெள்ளி, 5 வெண்கலம் என 6 பதக்கங்கள் கிடைத்தது.
இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில், ஆடவர் ஈட்டி எறிதல் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார். கடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா, அதிகபட்சமாக 89.45 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். கரீபியனின் கிரெனடா நாட்டைச் சேர்ந்த ஆண்டர்சன் பீட்டர் 88.54 மீட்டர் தூரம் எறிந்து மூன்றாம் இடம் பிடித்து வெண்கலம் வென்றார்.
எருமை மாடு பரிசு
இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதலில் தங்கம் வென்று நாடு திரும்பிய பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமுக்கு அவரது மாமனார் முகமது நாவாஸ் எருமை மாட்டை பரிசாக வழங்கியுள்ளார். 'அர்ஷத் நதீம் ஊரில் எருமை மாடு மதிப்பு மற்ற கவுரமிக்க ஒன்றாகக் கருத்தப்படுகிறது. மாபெரும் வெற்றி பெற்ற போதிலும், அவர் தனது கிராமம் மற்றும் அவர் கடந்து வந்த பாதையை நினைத்து பெருமை கொள்கிறார்.
அவரது வீடு இன்னும் அவரது கிராமமாகவே உள்ளது, அவர் இன்னும் தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களுடன் வாழ்கிறார்," என்று அர்ஷத் நதீன் மாமனார் முகமது நாவாஸ் கூறினார். அவருக்கு நான்கு மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் இருப்பதாகவும், அவரது இளைய மகள் ஆயிஷா தான் நதீமை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.
பரிசு மழை
இதற்கிடையில், பாரிஸ் ஒலிம்பிக்கில் பாகிஸ்தானுக்காக தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த இந்த சாதனைக்காக அர்ஷத் நதீம் 50,000 அமெரிக்க டாலர்கள் அல்லது இந்திய ரூபாயில் ரூ. 41,97,552 பரிசுத் தொகையைப் பெற்றுள்ளார். மேலும், பாகிஸ்தானைச் சேர்ந்த அமெரிக்க தொழிலதிபர் அலி ஷேகானி புத்தம் புதிய சுஸுகி ஆல்டோ கார் ஒன்றை பரிசாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில கவர்னர் சர்தார் சலீம் ஹைதர் கான், அர்ஷத் நதீமுக்கு பாகிஸ்தானிய ரூபாய் மதிப்பில் 20 லட்சம் (2 மில்லியன் பி.கே.ஆர்) பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளார். இதேபோல் கவர்னர் சிந்து கம்ரான் டெசோரி தங்கப் பதக்கம் வென்றவருக்கு 1 மில்லியன் பிகேஆர் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளார்.
ஜேடிசி அறக்கட்டளையின் நிறுவனர் ஜாபர் அப்பாஸ் தங்கப் பதக்கம் வென்ற அர்ஷத் நதீமுக்கு புதிய சுஸுகி ஆல்டோ காரை பரிசாக அறிவித்துள்ளார். இதேபோல், அர்ஷத் நதீமுக்கு புத்தம் புதிய கார் மற்றும் வாழ்நாள் முழுவதும் இலவச எரிபொருள் வழங்கப்படும் என கோ (GO) பெட்ரோல் பம்ப் சி.ஓ.ஓ ஜீஷன் தயாப் அறிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“