/indian-express-tamil/media/media_files/2025/02/19/WLKDq6zyuGFIt7gIaoTJ.jpg)
பாகிஸ்தான் vs நியூசிலாந்து லைவ் கிரிக்கெட் ஸ்கோர், சாம்பியன்ஸ் டிராபி 2025
ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தொடக்க நாளான இன்று புதன்கிழமை கராச்சி தேசிய ஸ்டேடியத்தில் பிற்பகல் 2:30 மணிக்கு தொடங்கிய முதல் ஆட்டத்தில் முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் - மிட்செல் சான்ட்னெர் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் மோதின.
டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் - நியூசிலாந்து முதலில் பேட்டிங்
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்த நிலையில், நியூசிலாந்து முதலில் பேட்டிங் ஆடி வருகிறது. நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக டெவோன் கான்வே - வில் யங் ஜோடி களமாடினார்கள். இதில், 2 பவுண்டரிகளை விரட்டிய டெவோன் கான்வே 10 ரன்கள் எடுத்த நிலையில், அப்ரார் அகமது சுழலில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த கேன் வில்லியம்சன் 1 ரன்னுக்கு அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.
இதன்பிறகு களம் புகுந்த டேரில் மிட்செல் களத்தில் இருந்த வில் யங் உடன் ஜோடி அமைத்தார். இந்த ஜோடி அணியின் விக்கெட் சரிவை மீட்டெடுத்து சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். ஒருமுனையில் டேரில் மிட்செல் தட்டிக் கொடுக்க மறுமுனையில் சிறப்பாக மட்டையைச் சுழற்றி வந்தார் யங். ஆனால், 10 ரன்கள் எடுத்த டேரில் மிட்செல் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இதையடுத்து, அவருக்குப் பின் வந்த டாம் லாதமுடன் இணைந்தார் யங். ஒரு சிக்ஸர், அவ்வப்போது பவுண்டரியை விரட்டி வந்த அவர், 56 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இது அவரது 11-வது ஒருநாள் போட்டி அரைசதம் ஆகும். தொடர்ந்து இந்த ஜோடி தங்களது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர்.
இவர்களது தரமான பேட்டிங்கால் நியூசிலாந்து அணியின் ஸ்கோர் விறுவிறுவென ஏறியது. வில் யங் - டாம் லாதம் ஜோடியில், தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வில் யங் 107 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். இது அவரது 4-வது சர்வதேச ஒருநாள் போட்டி சதமாகும். தனது தரமான ஆட்டத்தை தொடர்ந்திருந்த வில் யங் 113 பந்துகளில் 12 பவுண்டரிகள், 1 சிக்சருடன் 107 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த க்ளென் பிலிப்ஸ் உடன் டாம் லாதம் ஜோடி அமைத்து ஆடி வந்தார். ஏற்கனவே அரைசதம் அடித்திருந்த 95 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். இது அவரது 8-வது ஒருநாள் போட்டி சதமாகும். அவருடன் ஜோடியில் இருந்த க்ளென் பிலிப்ஸ் அரைசதம் அடித்து அசத்திய நிலையில், 39 பந்துகளில் 3 பவுண்டரி 4 சிக்சருடன் 61 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த டாம் லாதம் 104 பந்துகளில் 10 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு 118 ரன்கள் எடுத்தார். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 320 ரன்கள் குவித்தது. இதனால், பாகிஸ்தானுக்கு 321 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தரப்பில், நசீம் ஷா மற்றும் ஹாரிஸ் ரவுஃப் தலா 2 விக்கெட்டையும், அப்ரார் அகமது ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பாகிஸ்தான் பேட்டிங்
தற்போது 321 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை பாகிஸ்தான் அணி துரத்தி வருகிறது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக பாபர் அசாம் - சவுத் ஷகீல் ஜோடி களம் புகுந்த நிலையில், சவுத் ஷகீல் 6 ரன்னுக்கு அவுட் ஆகினார். அடுத்து வந்த கேப்டன் முகமது ரிஸ்வான் 3 ரன்னில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
ஒருபுறம் விக்கெட் சரிந்த நிலையில், மறுபுறம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார் பாபர் அசாம். அவர் அடுத்து வந்த ஃபகார் ஜமான் உடன் ஜோடி அமைத்தார். இந்த ஜோடி 10 ஓவர்கள் தாக்குப்பிடித்த நிலையில், 4 பவுண்டரியை விரட்டி 24 ரன்னுக்கு அவுட் ஆனார் ஃபகார் ஜமான். இதன்பிறகு களமிறங்கிய சல்மான் ஆகா-வுடன் பாபர் அசாம் ஜோடி அமைத்தார்.
இருவரும் அடுத்த 10 ஓவர்களுக்கு நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தி வந்தனர். இவர்களில் 28 பந்துகளில் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸர் என அதிரடி காட்டிய சல்மான் ஆகா 42 ரன்னில் அவுட் ஆனார். அவருக்குப் பின் வந்த தயாப் தாஹிர் 1 ரன்னுக்கு அவுட் ஆகி வந்த வேகத்தில் நடையைக் கட்டினார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் நிதானமாக ஆடி அரைசதம் விளாசிய பாபர் அசாம் 90 பந்துகளில் 6 பவுண்டரிகள், 1 சிக்சருடன் 64 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
இதைத் தொடர்ந்து குஷ்தில் ஷா - ஷாஹீன் அப்ரிடி ஜோடி களத்தில் இருந்தனர். இவர்களில் ஷாஹீன் 14 ரன்கள் அடித்த நிலையில், ஹென்றி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். எனினும், அதிரடியாக ஆடிய குஷ்தில் ஷா, 49 பந்துகளில் 10 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் அடுத்து 69 ரன்களை சேர்த்தார். ஆனால், இவரது விக்கெட்டை வில்லியம் ஓர்ர்கே கைப்பற்றினார்.
குஷ்தில் ஷா பெவிலியன் திரும்பிய நிலையில், அணியின் மற்ற வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். குறிப்பாக, நஸீம் ஷா 13 ரன்களிலும், ஹரிஸ் ரௌஃப் 19 ரன்களிலும் அவுட்டாகினர். இதனால், 47.2 ஓவர்களில் 260 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பாகிஸ்தான் அணி இழந்தது. இதன் மூலம் 60 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
நியூசிலாந்து தரப்பில் அதிரடியாக பந்து வீசிய வீசிய வில்லியம் ஓர்ர்கே மற்றும் மிட்செல் சான்ட்னர் ஆகியோர் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர். இவர்களை தவிர ஹென்றி 2 விக்கெட்டுகளும், பிரேஸ்வெல் மற்றும் ஸ்மித் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இரு அணிகளின் பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல்:
நியூசிலாந்து: டெவோன் கான்வே, வில் யங், கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), நாதன் ஸ்மித், மாட் ஹென்றி, வில்லியம் ஓர்ர்கே.
பாகிஸ்தான் : ஃபகார் ஜமான், பாபர் அசாம், சவுத் ஷகீல், முகமது ரிஸ்வான் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), சல்மான் ஆகா, தயாப் தாஹிர், குஷ்தில் ஷா, ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப், அப்ரார் அகமது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி (50 ஓவர்கள்) பாகிஸ்தான் மற்றும் துபாயில் இன்று புதன்கிழமை (பிப்.19) முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது. ஐ.சி.சி ஆடவர் கிரிக்கெட் உலகக் கோப்பையின் 2023 முடிவுகள் அடிப்படையில் டாப் 8 இடங்களை பிடித்த அணிகள் இந்தத் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Pakistan vs New Zealand LIVE Cricket Score, Champions Trophy 2025
முன்னாள் சாம்பியன்கள் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தகுதி பெறாத நிலையில், இத்தொடரில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும். சாம்பியன்ஸ் டிராபியில் ஒவ்வொரு ஆட்டமும் மிகவும் முக்கியமானது. ஒன்றில் தோற்றாலும் அரைஇறுதிக்குள் நுழையும் வாய்ப்புக்கு பெரும் பின்னடைவு ஏற்படும். அதனால், ஒவ்வொரு அணியும் கடுமையாக போராடும்.
நேருக்கு நேர்
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் இதுவரை 118 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 53-ல் நியூசிலாந்தும், 61-ல் பாகிஸ்தானும் வெற்றி கண்டுள்ளன. ஒரு ஆட்டம் 'டை' ஆனது. 3 ஆட்டத்தில் முடிவில்லை. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆடிய 3 ஆட்டங்களிலும் நியூசிலாந்தே வெற்றி பெற்றுள்ளது.
கராச்சி ஆடுகளம் எப்படி?
கராச்சி ஆடுகளம் பவுலிங்கை விட பேட்டிங்குக்கே அதிகமாக ஒத்துழைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் இங்கு நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 353 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து வரலாறு படைத்தது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.