மர்மம்… மார்க்கெட்டிங்… மகேந்திர சிங் தோனி – ஸ்டோக்ஸ் புத்தகமும், பாகிஸ்தான் சலம்பலும்

விராட் கோலி தலைமையிலான டீம் இந்தியா, தெரிந்தோ, தெரியாமலோ தற்போது உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சற்று சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. காரணம், உலகக் கோப்பை 2019 தொடரின் 38வது போட்டி…. இந்தியா vs இங்கிலாந்து. உலகக் கோப்பை சாம்பியன் இங்கிலாந்து அணியைச் சேர்ந்த பென் ஸ்டோக்ஸ், ‘ஆன் ஃபயர்’ எனும் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், இந்தியாவுடன் மோதிய போட்டி குறித்து இரண்டு முக்கியமான விஷயங்களை அவர் குறிப்பிட்டுள்ளார். ஒன்று, விராட் கோலி – ரோஹித் […]

ind vs eng, 2019 world cup, pakistan, cricket world cup, cricket news, dhoni, kohli, rohit, இந்தியா vs இங்கிலாந்து, கிரிக்கெட் செய்திகள், உலகக் கோப்பை 2019, தோனி, கோலி, ரோஹித்
ind vs eng, 2019 world cup, pakistan, cricket world cup, cricket news, dhoni, kohli, rohit, இந்தியா vs இங்கிலாந்து, கிரிக்கெட் செய்திகள், உலகக் கோப்பை 2019, தோனி, கோலி, ரோஹித்

விராட் கோலி தலைமையிலான டீம் இந்தியா, தெரிந்தோ, தெரியாமலோ தற்போது உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சற்று சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

காரணம், உலகக் கோப்பை 2019 தொடரின் 38வது போட்டி…. இந்தியா vs இங்கிலாந்து.

உலகக் கோப்பை சாம்பியன் இங்கிலாந்து அணியைச் சேர்ந்த பென் ஸ்டோக்ஸ், ‘ஆன் ஃபயர்’ எனும் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், இந்தியாவுடன் மோதிய போட்டி குறித்து இரண்டு முக்கியமான விஷயங்களை அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒன்று,

விராட் கோலி – ரோஹித் ஷர்மாவின் பார்ட்னர்ஷிப் எனக்கு மர்மமாக இருந்தது.

இரண்டாவது,

தோனியின் இன்டென்ட் (நோக்கம்) அப்போட்டியில் என்னவென்றே என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. போட்டியை வெற்றிகரமாக முடிப்பது தொடர்பாக எந்த நோக்கமும் அவரிடம் தெரியவில்லை.

என்று குறிப்பிட்டுள்ளார்.

அவ்வளவு தான்… இவ்விரு ஸ்டேட்மென்ட்டுகளையும் கெட்டியமாக பிடித்துக் கொண்ட பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சிகந்தர் பக்த், பாகிஸ்தானின் நாக் அவுட் வாய்ப்பை காலி செய்யவே இந்தியா வேண்டுமென்றே தோற்றது என்று பென் ஸ்டோக்ஸ் தனது புத்தகத்தில் தெரிவித்திருப்பதாக கொளுத்திப் போட, கொரோனா கொடூரத்திலும் பாகிஸ்தான் டிவி சேனல்களில் இந்த விவகாரம் விவாதமாகிப் போனது.

ரசிகர்கள் ஒருவருக்கொருவர் ஆன்லைனில் மோதிக் கொள்ள, எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல், பாகிஸ்தான் முன்னாள் ஆல் ரவுண்டர் அப்துல் ரசாக், ‘சந்தேகமேயில்லை… இந்திய அணி பாகிஸ்தானை வெளியேற்றவே வேண்டுமென்றே தோற்றது’ என்று அனல் பறக்க டிவி சேனலில் தெரிவிக்க, பதறிய பென் ஸ்டோக்ஸ், ‘இந்தியா வேண்டுமென்றே தோற்றது என்று நான் சொல்லவே இல்லை’ என்று ஓப்பனாக ஸ்டேட்மென்ட் விட, பிசிசிஐ இந்த விவகாரத்தை உற்று கவனிக்கத் தொடங்கியது.

டேக் டைவர்ஷன் எடுத்த வார்னேவின் மேஜிக் டெலிவரி; 27 வருடங்களுக்கு முன்பு (வீடியோ)

நடந்தது என்ன?

முதலில் ஒரு லாஜிக்கான விஷயத்தை பார்த்துவிடுவோம்….

எந்த மொழியாக இருந்தாலும் ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆகிறது எனில், அதற்கு முன்பு ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக், ஃபர்ஸ்ட் சிங்கிள், செகண்ட் சிங்கிள், டீசர், டிரைலர், ஆடியோ லான்ச்…. என்று எண்டு கார்டு போட முடியாத அளவுக்கு அத்தனை மார்க்கெட்டிங் ஸ்ட்ராடஜியை கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. இவை தான் வெறும் 1 வாரத்துக்கு ஓடவிருக்கும், இரண்டேகால் மணி நேர படத்துக்கான புரமோஷன். அப்போது தான் தயாரிப்பாளர் கல்லா கட்ட முடியும்.

இந்த லாஜிக் தான் புத்தக விற்பனைகளுக்கும். எந்த புத்தகமாக இருந்தாலும், அதை விற்பனையாக்க, புத்தகத்தில் இருக்கக் கூடிய அல்லது இல்லாத சில பல மேட்டர்களை காற்றில் அவிழ்த்துவிட, அவை 2ஜி, 3ஜி, 4ஜி என ரகத்துக்கு ஏற்ப மொபைல்களுக்கு காற்றினூடே தகவலை கொண்டுச் சேர்க்கும். அதைப் படித்து, அப்படியாக்கும்… இப்படியாக்கும் என நம் பங்குக்கு கற்பனை குதிரைகளை அவிழ்த்து அதை மற்றவர்களிடம் பகிர்ந்து மார்க்கெட்டிங் செய்வோம்.

புத்தக விற்பனை களத்தின் யதார்த்தம் இதுவே. சந்தேகமின்றி, பென் ஸ்டோக்ஸ் புத்தகத்தின் மார்க்கெட்டிங் யுக்திக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம் தான் இந்தியா vs இங்கிலாந்து போட்டி.

ஆனால், ஒரு சிறிய புதுமையாக, இந்த ஆயுதத்தை பென் ஸ்டோக்ஸ் வீசுவதற்கு முன்பே, பாகிஸ்தான் வீரர்கள் முந்திக் கொண்டு ‘ஆஸம்’ லெவலுக்கு வேலை பார்த்து, இன்று ‘ஆன் ஃபயர்’ புத்தக விற்பனை அடுத்த நூற்றாண்டு வரை ஆஃப் ஆகாத அளவுக்கு ஃபயர் (பற்ற) வைத்து உள்ளனர்.

இப்போது மேட்சுக்குள் போகலாம் 

ஜூன் 30, 2019 அன்று 25,000 இருக்கைகள் கொண்ட, இங்கிலாந்தின் நான்காவது மிகப்பெரிய எட்ஜ்பேஸ்டன் ஸ்டேடியத்தில் இப்போட்டி நடைபெற்றது.

“Clear skies, warm day; perfect day for cricket” என்று வெதர் ரிப்போர்ட் கொடுக்கப்பட்ட அன்றைய தினத்தில், டாஸ் வென்று, எந்தவித சந்தேகமும், குழப்பமும் இன்றி பேட்டிங்கை தேர்வு செய்தது இங்கிலாந்து.

டிரை பிட்ச்… பந்து வாகாக பேட்டுக்கு வந்து கொண்டிருக்க, பாரபட்சம் பார்க்காமல், இந்திய ஃபேஸ் மற்றும் ஸ்பின் அட்டாக்கை விளாசத் தொடங்கினர் இங்கிலாந்து ஓப்பனர்கள் ஜேசன் ராய் – ஜானி பேர்ஸ்டோ. குறிப்பாக, இந்திய ஸ்பின்னர்கள சாஹல், குல்தீப்பின் பந்துகளுக்கு, ஆடியன்ஸ் பீல்டர்ஸ்களாக பொறுப்பாக பணியாற்றிக் கொண்டிருந்தனர்.

முதல் விக்கெட் விழுந்த 22.1 ஓவரில் இங்கிலாந்து அடித்திருந்த மொத்த ரன்கள் 160.

7க்கும் மேல் சென்றுக் கொண்டிருந்த ரன் ரேட்டை பார்க்கையில், இங்கிலாந்து 400 தாண்டும் என்று கோலியே நம்பியிருப்பார்.

ஆனால், டெத் ஓவர்களில் இந்தியர்கள் பெர்ஃபெக்ஷன் காட்ட, இங்கிலாந்து 337/7 என்ற ஸ்கோர் மட்டுமே எடுத்தது.

களமிறங்கியது இந்தியா…..

தவான் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகியிருக்க, லோகேஷ் ராகுல் அவரது இடத்தை நிரப்பியிருந்தார். ஆனால், அப்போட்டியில் 0 ரன்னில் வெளியேற, இந்தியா 8 ரன்னுக்கெல்லாம் முதல் விக்கெட்டை இழந்துவிட்டது. டார்கெட்டோ 330+

ஆகையால், ஒன் டவுன் இறங்கிய கோலி நிதானமாக ஆட, ரோஹித் அவ்வப்போது மோசமான பந்துகளை தண்டித்துக் கொண்டிருந்தார். பார்க்க கண்ணுக்கு அழகாக இருந்தது. இந்தியாவின் ரன் ரேட்டும் சீராக சென்றது. அப்போதைய நிலைமைக்கு அந்த பேட்டிங் யுக்தி தான் இந்தியாவுக்கு தேவைப்பட்டது. இங்கே, அவசரப்பட்டு அவுட்டாவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாதல்லவா! ஆகையால், ரோஹித் – கோலி இருவருமே தங்கள் ஸ்டிரைக் ரேட் 100 தாண்டாமல் பார்த்துக் கொண்டனர்.

இதில் என்ன பென் ஸ்டோக்ஸுக்கு மர்மம்? என்று நமக்கு புரியவில்லை. இருவரும் இன்னும் அடித்து ஆடியிருக்க வேண்டும் என்று சொல்ல வருகிறாரா? அல்லது சட்டு புட்டுன்னு எல்லாரும் அவுட்டாகி போகாமல், 300 ரன்கள் வரை ஏன் இழுத்துச் சென்றார்கள்? என்று ஆதங்கப்படுகிறாரா?

உண்மையில் அவரது சந்தேகம் தான் மர்மமாக இருக்கிறது.

ரோஹித் 102(109), கோலி 66(76) என்று வெளியேற, அடுத்தடுத்து வந்த ரிஷப் பண்ட் 32(29), ஹர்திக் பாண்ட்யா 45(33) என்று அதிரடியாக விளையாடினாலும், பெரிய ரன்களை சேர்க்காமல் வெளியேறினர்.

தோனி களமிறங்கிய போது, இந்திய அணி வெற்றிப் பெற 11 ஓவர்களில் 112 ரன்கள் தேவை. ஓவருக்கு ரன் ரேட் 10க்கும் மேல் வேண்டும். அதாவது, ஓவருக்கு 10 ரன்கள் அடிக்க வேண்டும். பாண்ட்யா அதிரடியாக பேட்டை சுழற்ற, தோனி சற்று அடக்கி வாசித்தார். பாண்ட்யா வெளியேறிய பிறகும் கூட, இந்தியா வெற்றி பெற்றுவிடும் என்ற சூழலே நிலவியது.

ஆனால், அதற்கு பிறகு தோனி எடுத்த சிங்கிள்ஸ் தான் போட்டியை அடுத்தக்கட்ட பிரஷருக்கு நகர்த்தியது. ரன் ரேட் மேலும் மேலும் அதிகரிக்க, அந்த பிரஷரோ என்னவோ, அவரால் பந்துகளை பெவிலியனுக்கு அனுப்ப முடியவில்லை.

உண்மையில் தோனிக்கு அன்று ஆஃப் டே என்று சொல்லலாம். உலகின் தி மோஸ்ட் சக்ஸஸிவ் பினிஷர் என்ற பெயர் வைத்திருக்கும் தோனிக்கு, உண்மையில் அன்றைய தினம் ஆஃப் டே தான். அதற்கு ஏற்றார் போல், இறுதியில் களமிறங்கிய கேதர் ஜாதவ்வும் தடுமாற, தனது நம்பிக்கையை முற்றிலுமாக உதிர்த்தார் மகேந்திர சிங் தோனி.

போட்டி மெல்ல மெல்ல கையை விட்டுச் செல்ல, 50 ஓவர்களில் 306/5 என்று இங்கிலாந்திடம் அடங்கியது இந்தியா. அந்த உலகக் கோப்பையின் முதல் தோல்வியை பதிவு செய்தது.

இந்த யதார்த்தத்தை தன் புத்தகத்தின் பதார்த்தமாக ஸ்டோக்ஸ் மாற்ற, யாருடா இவன் குறுக்கால என்பது போல், பாகிஸ்தான் இந்த விஷயத்தை வைத்துக் கொண்டு உருட்ட, அந்த அணிக்கு தன் வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டவராகி இருக்கிறார் ஸ்டோக்ஸ்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Pakistan about ind vs eng world cup match 2019

Next Story
ஐபிஎல்-2017: மும்பையின் தொடர் வெற்றியை தடுத்து நிறுத்துமா பஞ்சாப்? இரு அணிகளிடேயே இன்று பலப்பரிட்சை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express